

சின்ன வயசுலிருந்தே எனக்கு சிஐடி ஆகி அதன் மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கணும்னு ஆசை. அதற்கு நான் என்ன படிக்கணும்?
- சங்கரன், கீழ் அம்பி, காஞ்சிபுரம்.
சி.ஐ.டி. என்பது கிரிமினல் இன்வஸ்டிக்கேஷன் டிபார்ட்மெண்ட். காவல் துறையில் குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரு பிரிவு. இந்த பிரிவினில் பணிபுரிய சாதாரண காவலர் தொடங்கி டி.எஸ்.ப்பி, ஐ.பி.எஸ். அதிகாரியான பிறகும்கூட நியமனம் பெற்று பணி புரியலாம். அதுமட்டுமின்றி மத்திய அரசின் உளவு நிறுவனங்களான சி.பி.ஐ., ரா போன்ற அமைப்புகளிலும் போட்டித் தேர்வுகள் மூலம் பணிவாய்ப்பு பெறலாம்.
காவலர் தேர்வுகளில் வெற்றி பெற குறைந்தபட்சம் 10-ம் வகுப்பினில் தேர்ச்சியும், உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலையிலான நேரடி நியமனம் சப் இன்ஸ்பெக்டர் பணியாகும். இதற்கு குறைந்தபட்சம் பட்டப்படிப்பினில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு அடுத்த நிலையிலான நேரடி நியமனம் டி.எஸ்.பி. ஆகும். இதற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தொகுதி - 1 (குரூப் - 1) தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். காவலர், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது.
மத்திய அரசு காவல் துறையை பொறுத்தவரை சென்ட்ரல் போலீஸ் ஆர்கனைசேஷன் இதன் கீழ் சி.ஆர்.ப்பி.எப். ஐ.ட்டி.பி.பி., பி.எஸ்.எப். அஸ்ஸாம் ரைபில்ஸ், சி.ஐ.எஸ்.எப். போன்ற சிறப்பு காவல் பிரிவுகளுக்கான பணியிடங்கள் வெளியிடப்படுகின்றன.
அவற்றிலும் காவல்முதல் அலுவலர் பணியிடம் வரைபோட்டித் தேர்வுகள் மூலம் நியமனங்கள் நடைபெறுகின்றன. எனவே முதலில் எந்த நிலையில் பணியில் சேர வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு அதற்கேற்ப பணியில் சேர போட்டித் தேர்வுகளுக்கு தயாராகவும்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.