போவோமா ஊர்கோலம் - 30: நிறம் மாறும் ஏரியும் மலைகளும்!

போவோமா ஊர்கோலம் - 30: நிறம் மாறும் ஏரியும் மலைகளும்!
Updated on
2 min read

பாங்காங் டிஸோ ஏரி... இதை ஏரி என்று சொல்லலாமா அல்லது இந்தியாவின் சொர்க்கம் என்று சொல்லலாமா. இப்படித்தான் ஏரியைப் பார்த்ததும் முதல் அபிப்ராயம் என்னுள் எழுந்தது. மலை மேட்டில் இருந்து கீழே பார்த்தால் கடல் போல நீர், அதை காக்கும் இயற்கை அரணாக மலைகள். அதோடு ஆங்காங்கே தூரத்தில் தெரியும் பனி மலைகள்.

சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. ஆனாலும் வெப்பம் கொஞ்சமும் தெரியாதஅளவுக்கு குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. மனம் எங்கும் அலைபாயவில்லை. ஏதோ தியானத்தில் ஈடுபட்டு இருந்த உணர்வு. தெளிவாய் அமைதியாய் இப்படி ஒரு அமைதி இந்த பயணத்தில் இதுவரை கிடைக்கவில்லை.

இரண்டு நாட்கள் கடுமையான பயணத்துக்குப்பின் இப்படி ஒரு இடத்தைப் பார்த்ததால் இதுபோன்ற உணர்வு ஏற்பட்டதா என தெரியவில்லை. ஆனால், அந்த அமைதியை சொல்லிப்புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை.

பாங்காங் ஏரியின் நான்கின் ஒரு பகுதி தான் இந்தியாவின் லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கிறது. மீதமுள்ள பகுதிகள் எல்லாம் இப்போது சீனாவிடம் இருக்கிறது. இந்திய சீன எல்லையின் 'லைன் ஆப் கண்ட்ரோலும்' இந்த ஏரி தான்.

கிட்டத்தட்ட இந்த ஏரியின் நீளம் எழுநூறு கிலோமீட்டருக்கு அதிகமாக இருக்கும். பாங்காங் ஏரியை சுற்றி புகழ்பெற்ற காரகோரம் மலைத்தொடரும் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலைகள் பருவத்துக்கு தகுந்த மாதிரி மாறும் தன்மைகொண்டவை.

பனிக்காலத்தில் பனிபோர்த்தி வெண்ணிறமாகவும், பணியெல்லாம் உருகியதும் அடர்கறுப்பாகவும் இருக்கும். அதுவே மழைக்காலங்களில் கொஞ்சம் பசுமையாக காட்சியளிக்கும். இந்த எரியோ மலைகளைப்போல் இல்லாமல், நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறுகிறது. மேகங்களைப் பொறுத்தும், மலைகளின் நிறங்களைப் பொறுத்தும் ஏரியின் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது.

அந்த மலை மேட்டில் இருந்து ஏரியை அணுஅணுவாக ரசித்துவிட்டு, ஏரியின் கரை இருந்த பகுதி நோக்கி சென்றோம். சுற்றுலாப் பயணிகளுக்காக எக்கச்சக்கமாக தகரத்தில் கொட்டகை அமைத்து தற்காலிக தங்கும் இடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. திபெத்தியர்களும் லடாக்கியர்களும் தான் அதிகம் கடை வைத்திருந்தார்கள்.

'3 இடியட்ஸ்' சந்திப்பு: இந்த பாங்காங் ஏரி இருக்கும் பகுதி எல்லாம் பனிக்காலங்களில் யாரும் வசிக்க முடியாத அளவுக்கு குளிராக இருக்கும். ஏரி முற்றிலும் உறைந்து போயிருக்கும். அதனால், சுற்றுலாவும் ஏப்ரல் மாத இறுதியில் தான் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும். மழையின் அளவைப்பொறுத்து அக்டோபர் அல்லது நவம்பருக்குள் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படும். அந்த சமயங்களில் இவர்கள் மணாலிக்கோ அல்லது லே நகருக்கோ சென்றுவிடுவார்கள்.

இந்தி மொழியில் வெளியான '3 இடியட்ஸ்' படத்தின் நிறைவுக்காட்சிகள் இந்த ஏரியின் கரையில் தான் படமாக்கப்பட்டதாம். அதனால் அந்த பகுதிக்கு '3 இடியட்ஸ்' சந்திப்பு என்று பெயர் வைத்திருந்தார்கள்.

அந்த படத்தில் வரும் பொம்மை இருக்கைகள் மற்றும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜப் தக் ஹை ஜான்' படத்தில் அவர் பயன்படுத்தியது போன்ற புல்லட்டை வடிவமைத்து வைத்து, அதோடு சேர்த்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். பலரும் அதில்அமர்ந்து புகைப்படம் எடுக்க ஆர்வமும் காட்டினார்கள்.

அந்த மக்களின் வருவாய்க்கு அது கொஞ்சம் உதவியாக உள்ளது. அதுபோலவே திபெத்திய காட்டுஎருமைகளுடன் புகைப்படம் எடுக்கவும், திபெத்திய உடைகளை அணிந்து புகைப்படம் எடுக்கவும் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டினார்கள்.

மனதை வருடும் அந்த ஏரியின் கரையில் அமர்ந்துகொண்டு இயற்கையை ரசிக்க எத்தனை தடைகள் வந்தாலும் எப்படியும் அதை தாண்டி வரவேண்டும்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை. தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in