கற்றது தமிழ் - 30: வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதா...
மாணவியரின் தேர்வுத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த அம்மா, நன்றாக எழுதியிருந்த பலரைப் பற்றி மகிழ்வும் சிலரைப் பற்றிக் கவலையுமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
குழலி: உங்க மாணவிகள் எல்லோரும் நூறு சதவீதம் தேர்ச்சி அடைஞ்சிடுவாங்கம்மா. நீங்க கவலையே படாதீங்க...
அம்மா: உன் வாய்க்குச் சர்க்கரைதான் போடணும்... எல்லாரும் நல்லாத்தான் தயாராகியிருக்காங்க... பொதுத்தேர்வுல வினாத்தாள் எப்படி வருதோ...
குழலி: நீங்க சர்க்கரை போடணும்னு சொன்னதும், நாங்க படிச்ச நற்றிணைப் பாட்டு ஒன்னு நினைவுக்கு வருதும்மா...
அம்மா: அப்படியா... பாட்டச் சொல்லு.
சுடரும் வந்துவிட, உரையாடல் கூடுதல் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தது.
குழலி: 'அமுதம் உண்க நம் அயல் இலாட்டி'ன்னு தொடங்கும் நற்றிணைப் பாட்டு. கபிலர் எழுதியிருக்கார். குறிஞ்சித் திணையில இடம்பெற்ற பாட்டு. இந்தப் பாட்டுல தலைவி ஒருத்தி, தன் தலைவனுக்காகக் காத்திருக்கா. அவன் சொல்லிட்டுப் போன காலம் வந்திருச்சு. ஆனாலும் தலைவன் வரல.
வருத்தத்தில இருக்கிற தலைவிகிட்ட, தோழி சொல்றா... உன் வருத்தத்தைப் போக்குகிற மாதிரி, நம் அண்டை வீட்டுக்காரப் பெண், ஒரு நல்ல வார்த்தை சொன்னாள்... என்ன தெரியுமா... அவன் இப்பவே வந்திருவான்னு... அப்படியொரு நல்ல செய்திய நமக்கு நிமித்தமாச் சொன்ன அந்தப் பக்கத்து வீட்டுப் பெண், அமிர்தத்தச் சாப்பிடட்டும்னு சொல்லி வாழ்த்தினாளாம்.
சுடர்: அமிர்தமா...
குழலி: அந்தக் காலத்துல கிடைக்கிறதுக்கு அரிதான பொருளை அமிர்தத்துக்கு நிகரானதாச் சொல்லியிருக்கலாம். அமிர்தம் சாப்பிட்டா இறப்பே வராதாம். அதியமான் ஔவைக்குக் கொடுத்த நெல்லிக்கனியை அமிழ்து விளை தீங்கனின்னு சொல்லியிருக்காங்க.
சுடர்: ஆமா குழலி... நெல்லிக்கனி சாப்பிட்டா நிறைய காலம் இளமையா இருக்கலாம்ங்கிறது அறிவியல் உண்மைதான.
அம்மா: நானும் இந்தப் பாட்டைப் படிச்சிருக்கேன் குழலி. இந்தப் பாட்டுக்குள்ள வர்ற உள்ளுறைகூட ரொம்பவே சிறப்பானது.
குழலி: அம்மா, அந்த உள்ளுறை பத்திச் சொல்றீங்களா...
அம்மா: அருவி கொட்டுகிற நீர்த்துறையில குளிச்சிட்டிருந்ததாம் ஒரு யானை. அதைப் புலி தாக்க, தன் தந்தத்தால புலியைக் குத்தித்துரத்திவிட்டுருச்சாம் யானை. ஆனாலும் புலி தாக்கினதுல காயமாகிடுச்சாம் யானை. அந்த வலியோட யானை சிரமப்பட, மலையிலவாழக்கூடிய கானவர்கள் அந்த யானையை நாலாபுறமும் இருந்து அம்பு எய்து தாக்கினாங்களாம்.
தப்பிக்க முடியாம அந்த யானை தத்தளித்த நேரத்துல அதோட தந்தங்களை வெட்டி எடுத்தாங்களாம். யானை வலி தாங்க முடியாம இடிபோல முழங்கி ஓலமிட்டதாம். அப்படிப்பட்ட மலை நாட்டைச் சேர்ந்தவன் தான் அந்தத் தலைவன்னு பாட்டுல வரும்.
சுடர்: இந்த உள்ளுறைக்கு என்ன பொருள்...
குழலி: புலியோடு சண்டையிட்ட யானையைத் தலைவின்னும், புண்பட்ட யானையை அம்பெய்து அதன் தந்தங்களைப் பறிச்ச கானவர்களை அண்டையில் இருக்கும் சுற்றத்தார்னும் புரிஞ்சுக்கலாம்.
சுடர்: கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்...
அம்மா: சுடர், இந்தக் காட்சிய ஒரு பெண்ணோட வாழ்க்கையில பொருத்திப் பாரேன். இங்க தலைவனைப் பிரிஞ்சதால தலைவி வருத்தத்தில இருக்கா... அவளைப்புண்பட்ட யானைன்னு எடுத்துக்கோ. அவ வருத்தத்தைப் பத்திக் கவலைப்படாம ஊரெல்லாம் அவளைப் பத்தி அலர் பேசுது... அந்த அலர் தர்ற வலி இருக்கே... வலியோடிருக்கிற யானைகிட்ட இருந்து தந்தத்தைப் பறிச்ச கானவர்கள நினைச்சுப் பாரு.
காயத்துக்கு மருந்து போடலேன்னாக்கூடப் பரவாயில்ல. வலிச்சாலும் பரவாயில்லன்னு அதோட பலவீனமான நேரத்தைப் பயன்படுத்தித் தந்தங்களைப் பறிச்சிட்டாங்க. இப்படித்தான் பலரும் யாராவது கவலையில இருக்கிறப்ப, இன்னும் அந்தக் கவலையை அதிகப்படுத்துற மாதிரிப் பேசிக் காயப்படுத்துவாங்க.
சுடர்: இப்பப் புரியுது அத்தை. வெந்தபுண்ணுல வேல் பாச்சுறதுன்னு சொல்வாங்களே. அதான... ஆமா அலர்னா என்ன...
அம்மா: அடுத்த வாரம் பேசுவோமா சுடர். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு...
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com
