முத்துக்கள் 10 - திரைக்கவித் திலகம் மருதகாசி

முத்துக்கள் 10 - திரைக்கவித் திலகம் மருதகாசி
Updated on
2 min read

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியரும், திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவருமான ஏ.மருதகாசி (A. Marudakasi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10.

# திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் (1920) பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றார். அருணாச்சல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.

# கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் தேவி நாடக சபா நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்தார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு இசையமைத்து வந்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்குப் பாட்டு எழுதி வந்தார். பாடலாசிரியர் ராஜகோபால ஐயரிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

# திருச்சி லோகநாதன் மூலமாக 1949-ல்இவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாயாவதி’ படத்துக்காக ‘பெண் எனும் மாயப் பேயாம்’ என்ற பாடலுடன் தன் திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.

# 1950-ல் வந்த ‘பொன்முடி’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார். அனைத்தும் சூப்பர் ஹிட். பிறகு ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

# ‘அமரகவி’, ‘தூக்குத் தூக்கி’ திரைப்படப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்புகள் குவிந்தன. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே அனைத்து இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

# ‘எந்நாளும் வானிலே’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சத்தியமே லட்சியமாய்’, ‘சமரசம் உலாவும்’, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே’, ‘கடவுள் எனும் முதலாளி’, ‘வருவேன் நான் உனது’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘இன்று போய் நாளை வாராய்’, ‘மனுஷனை மனுஷன்’ என்பது உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாகாவரம் பெற்ற திரைப்பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

# தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்கள் எழுதிசாதனை படைத்த முதல் கவிஞர்என்ற புகழ்பெற்றவர். 250 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

# சக கலைஞர்களை மதித்துப் போற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போல கருதி பாசம் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவியை தன் அண்ணன் போலவும், குருவுக்கு சமமாகவும் மதித்தவர். ‘என் 2 ஆயிரம் பாடல்கள் கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது’ என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

# எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்படஅனைத்து நடிகர்களுக்கும் அவரவருக்குப் பொருத்தமாகப் பாடல்களை எழுதினார். டி.எம்.சவுந்தரராஜனை சினிமாவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னை தாய்போல ஆதரித்தவர் மருதகாசி என்று குறிப்பிட்டுள்ளார் வாலி.

# தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடலாசிரியராகத் திகழ்ந்த ‘திரைக்கவித் திலகம்’ மருதகாசி, 69-வது வயதில் (1989) மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in