

இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பெருநகரங்களில் காற்றோட்டம் இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் ஆறு மடங்கு அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான நாடுகளில் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள்ஒடுக்கப்பட்ட இன மக்கள் வாழும்பகுதியிலேயே கட்டப்படுகின்றன. அவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக ஒரு காரணம் கூறப்பட்டாலும் அந்தத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் கழிவுகள் சுற்றுப்புறத்தில் கொட்டப்பட்டு நிலம், நீரை மாசுப்படுத்தி அப்பகுதியின் சுற்றுச்சுழலை சீரழித்து நோய் பரவலுக்கும் குறைந்த ஆயுளுக்கும் இட்டுச் செல்கின்றன.
சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான IPCC கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் காலநிலை பாதிப்புகள் சென்னையில் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பதை ஆறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் சென்னையில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்புகள், கடல் மட்டஉயர்வு பாதிப்புகள், அதனால் பாதிக்கப்படும் கட்டமைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சென்னை என்பது தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல தொழில்நகரமும் கூட. அங்கே எல்லா மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்று தங்கி பணியாற்றி வருகின்றனர். இதுதவிர சென்னையின் பூர்வகுடிகள் பெரும்பாலும் கடலையொட்டிய பகுதிகளிலேயே வாழ்க்கையை அமைத்துள்ளனர். இத்தகைய உழைக்கும் மக்களைக் கொண்ட சென்னையை காலநிலை மாற்றம் பாதிக்கும்போது அது தமிழகத்தின் பிறபகுதியிலும் எந்த வகையில் பிரதிபலிக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இதுமட்டுமில்லாமல் தலைமுறையினரைக் கடந்து தாக்கும் விளைவும் காலநிலை மாற்றத்துக்கு உண்டு. இன்றையஇளைஞர்களுக்கு உள்ள உளவியல் பாதிப்புகளுக்கும் காலநிலை மாற்றத்துக்கும்கூட எத்தகைய தொடர்புகள் உண்டென பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதனால் காலநிலை மாற்றத்தை நாம் சமூக அநீதியாகக் கருதி அவற்றின் பாதிப்பை பற்றியும் ஆழமாக அறிய வேண்டியது இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை மாற்றம் சாதிய அளவில் குறிப்பிட்ட மக்களை ஒடுக்கும் பணியையும் செய்கிறது. இதனை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.
கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com