

லேப்ராஸ்கோப்பி என்பது யாராலும் கற்றுக்கொள்ள முடியாத வித்தை ஒன்றுமல்ல. நோயாளிகளுக்கும் அவர்கள் மூலம் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் இந்த முறையை ஒவ்வொரு அறுவை சிகிச்சை நிபுணரும் நிச்சயம் கற்றுத் தெளிய வேண்டும் என்று முழுமையாக நம்பினார் டாக்டர் உத்வாடியா.
அதற்காகவே மும்பையில் 'சீமாஸ்ட்' (CEMAST) எனும் பயிற்சி மையத்தை ஆரம்பித்தார். தான் முயன்றதை தன் துறையிலிருந்த மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்த அவரது அந்த முயற்சிதான் இன்று இந்தியா முழுவதும் எண்ணற்ற மருத்துவர்களால் எத்தனையோ கோடி உயிர்கள் காக்கப்பட்டு இருக்கிறது.
டாக்டர் உத்வாடியாவின் சாதனையைக் கண்ட இங்கிலாந்து அரசு அவரை தனதுஎடின்பரோ உள்ளிட்ட எல்லா மருத்துவக் கல்லூரிகளுக்கும் வந்து, மருத்துவர்களுக்கும் மருத்துவப் பேராசியர்களுக்கும் சிறப்பு விரிவுரையாற்ற அழைப்பு விடுத்தது. இதுஇந்திய மருத்துவர்கள் எவருக்கும் இல்லாத சிறப்பு என்றால், அமெரிக்க அரசும், ஜெர்மானிய அரசும் அவரை சிறப்புப் பேராசிரியராக அழைத்தது மற்றுமொரு மைல்கல்.
ஓய்வின்றி மருத்துவச்சேவை: அதேசமயத்தில், டாக்டர் உத்வாடியா, நமது நாட்டில், IAGES எனும் தேசிய லேப்ராஸ்கோப்பி மருத்துவர்களின் அமைப்பை 1994 ஆம் ஆண்டு முதன்முதலில் நிறுவி, அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து JMAS எனும் மாதாந்திர மருத்துவப் பத்திரிகையின் ஆசிரியராக ஒவ்வொரு மாதமும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் மருத்துவர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. அத்துடன் நூற்றுக்கணக்கான தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை நிகழ்த்தியும், உரையாற்றியும் மருத்துவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார்.
ஜே.ஜே. மருத்துவமனையில் பணி ஓய்வுபெற்ற உத்வாடியா, தொடர்ந்து அங்கு கௌரவப் பேராசிரியராகவும், ப்ரீச் கேண்டி மற்றும் ஹிந்துஜா மருத்துவமனைகளின் சிறப்புப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். உண்மையில் மருத்துவர்களுக்குப் பணி ஓய்வு என்பது தேவையற்றது என்றே அவர் கருதினார், அவ்வாறே செயல்பட்டார்.
அப்படி இயங்கிய உத்வாடியா எழுதிய நூற்றுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச பத்திரிக்கைகள் வெளியிட்டு சிறப்பித்தது. செயற்கரிய செயல்களை செய்ததற்காக, பி.சி.ராய் விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த மருத்துவர் விருது என பற்பல விருதுகளை தாய்நாடும், ஹண்ட்டேரியன் ப்ரொஃபசர், கார்ல் ஸ்டோர்ஸ் அவார்ட், ஒன் மேன்- ஒன் பீப்பிள்- ஒன் சர்ஜரி, இராணி எலிசபெத்தின், ‘Officer of the Order of the British Empire' என வெளிநாடுகளும் கொண்டாடி மகிழ்ந்தன.
தன்னைக் காட்டிலும் தனது மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி, பல்லாயிரம் உயிர்களை இன்றும் காப்பதுதான் தன் வாழ்வின் மிகப்பெரிய விருது என்று மட்டுமே எப்போதும் டாக்டர் உத்வாடியா கூறியுள்ளார்.
சில வாழ்க்கைப் பாடங்கள்... அறுவை சிகிச்சையைத் தாண்டி, கோல்ஃப் விளையாட்டு, இசை ஆர்வம், எழுத்துப் பணி என தொடர்ந்து இயங்கிய அவர், தொழிலும் வாழ்க்கையும் எப்போதும் தனித்தனியாகப் பயணிக்கக்கூடாது. எப்போதும் அவை சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்பதை வாழ்ந்தே காட்டினார்.
'அறுவை அரங்கைத் தாண்டி சில வாழ்க்கைப் பாடங்கள்' (Just more than a Surgery: Life lessons beyond the OT) எனும் அவரது புத்தகம், அவர் கற்றுக் கொண்டவற்றை மட்டுமன்றி, அவரது கற்பிதங்களையும் உலகிற்குக் கூறிய ஒரு முக்கிய நூல். மேலும் ‘வளரும் நாடுகளில் லேப்ராஸ்கோப்பி', ‘லேப்ராஸ்கோப்பிக் பித்தப்பை அகற்றல்' ஆகிய புத்தகங்களை எழுதி வெளியிட்ட அவர், தனது வாழ்நாளின் இறுதியில், ‘வாழ்வதற்கான ஒரு வழி' -ஒன் வே ட்டூ லிவ் என்று இன்னும் அச்சில் வராத புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
பொதுவாக நுணுக்கமாக அறுவை சிகிச்சை செய்யும் திறன் கொண்ட மருத்துவர்கள், நல்ல பேச்சாற்றல் கொண்ட மருத்துவர்கள், நல்ல எழுத்தாற்றல் கொண்ட மருத்துவர்கள் என மருத்துவர்களை நாம் தனித்தனியே சந்தித்திருப்போம். ஆனால் இவையனைத்தும் ஒன்றுசேர்ந்த ஒரு முன்னோடி மருத்துவராகவே திகழ்ந்தார் டாக்டர் உத்வாடியா.
பெரிய தழும்புகள் இன்றி, வலி இன்றி, நீண்டநாள் மருத்துவமனைகளில் தங்க வேண்டியும் இன்றி, ஏழை நோயாளி ஒருவன் லேபராஸ்கோபி செய்துகொண்ட ஓரிரு நாட்களிலேயே தனது பணிகளுக்குத் திரும்ப உதவியதே தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று பொது மக்கள் பற்றி சிந்தித்த ஒருவர்.
பெரும் வசதிவாய்ப்புகள் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தவரும் அல்ல. எந்த வசதியும் இல்லாதபோதும், அனைத்தையும் தனி ஒருவராக சமாளிக்கும் கிராமப்புற மருத்துவர்களும் அவர்களது எளிய மருத்துவமனைகளும் தான் உண்மையான ஹீரோக்கள் என்று மக்களின் மருத்துவர்களை போற்றிப் புகழ்ந்தவர்.
தான் கற்றுத் தேர்ந்தவற்றையெல்லாம் மற்றவர்களுக்கும் கற்பித்து 88 வயதில்2023 ஜனவரி 7 அன்று இனிதான ஒருவாழ்க்கையை வாழ்ந்து முடித்தார் இந்திய லேப்ராஸ்கோப்பியின் தந்தை உத்வாடியா.
(மகிமை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com