நானும் கதாசிரியரே! - 33: நல்ல எழுத்தைத் தரும் நல்ல நூல்கள்!
கதை எழுதுவதே சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்பதற்கும், அதில் கிடைக்கும் அனுபவங்களை அழகாகப் பகிர்வதற்கான மிக நல்ல பயிற்சிகளில் ஒன்றுதான். இதனால், நம் நண்பர்களின் பழக்கங்களைக் கவனித்துப் பார்ப்போம். அவர்களின் குணங்களை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று யோசிப்பீர்கள். ஆக, எல்லாமே உங்களுக்குக் கதைகளுக்கான கருக்களாகத் தெரியத் தொடங்கிவிடும்.
சரி, கதை எழுதி விடலாம். நல்ல கதை, சிறந்த கதை எழுதுவதற்கு இவை மட்டும் போதுமா? நிச்சயம் போதாது. கிரிக்கெட் விளையாடும் பயிற்சியில் ஈடுபவர்களை, அதற்கு முன் ஆடிய போட்டிகளைத் திரும்பத் திரும்ப பார்க்கச் சொல்வார்கள்.
எதற்காக என்றால், அதில் ஆடும் ஒருவரின் நுணுக்கங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது இவர் அதேபோல ஆடலாம் அல்லது போட்டியில் ஆடும் வீரர் ஒரு பந்தைத் தவறாக அடித்து அவுட்டாகி விட்டால், அதேபோல ஆகக் கூடாது என்று தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல, சிறந்த கதை எழுதுவதற்கான பயிற்சியில் ஓர் அங்கம்தான், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள சிறந்த சிறார் நூல்களை வாசிப்பது. தற்போது சிறப்பான பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை அவசியம் வாசிக்க வேண்டும்.
வாசிக்க வேண்டிய இரண்டு! - உலகளவில் மிகச் சிறந்த சிறார் நூல்கள் இருக்கின்றன. அவை தமிழில்கூட மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு நூல்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று ’குட்டி இளவரசன்’, மற்றொன்று ’ஆலிஸின் அற்புத உலகம்’.
குட்டி இளவரசன், பிரெஞ்சு மொழியில் அந்துவான் து செந்த்-எக்சுபெரி என்பவரால் எழுதப்பட்ட சிறார் நாவல் The Little Prince. இதுவே தமிழில் ’குட்டி இளவரசன்’ என்றுவெளிவந்துள்ளது. ஒரு விமானம் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென்று விமானத்தில் கோளாறு. ஒரு பாலைவனத்தில் விழுகிறது விமானம்.
உள்ளே இருந்த விமானி அங்கே பார்ப்பதுதான் முதன்மையான கதை. கதையின் போக்கு சுவையானதாக இருப்பது மட்டுமல்ல, பல புதிர்களை விடுவிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கும். இந்த நாவலை பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக வெ.ராம், மதனகல்யாணி ஆகியோர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளானர்.
இந்த நூலின் சுருக்கப்பட்ட வடிவத்தை மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் யூமா வாசுகி. எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘சின்னச் சிறு இளவரசன்’ எனும் பெயரில் இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார். 170 க்கும் மேற்பட்ட மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், பல கோடி பிரதிகள் விற்பனையாகி உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் கரோல் எழுதிய Alice in Wonderland எனும் சிறார் நாவலே தமிழில் ‘ஆலிஸின் அற்புத உலகம் ‘ என்று மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். சென்னி வளவன் என்பவரும் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு முயலின் பின்னால் அதன் குழிக்குள் செல்கிறாள் ஒரு சிறுமி. அங்கு அவள் காண்பது எல்லாம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு வரியும் நமக்கு புதிய அனுபவங்களைத் தந்துகொண்டே இருக்கும். 1865-ல் எழுதப்பட்ட அதாவது இன்றிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தாலும் இன்றுவரை அதன் சுவை குறையாமல் படிக்கப் படிக்கப் புதிய அனுபவங்களைக் கொடுக்கும் மேஜிக் நூலாக இது அமைந்துள்ளது.
நல்ல கதைகளைப் படிக்கும்போது நம் ஆழ்மனத்தில் புதைந்துகிடக்கும் பல சம்பவங்கள் நினைவுக்கு வரும். அவற்றை எப்படி எழுதுவது என்கிற யோசனையும் கிடைக்கும்.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com
