

உடல் எடை, உடலின் உயரம் எல்லாம் அளந்துவிட்டோம். தலையில் இருக்கும் தலை முடி இழைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டுமா? ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் தலையில் இருக்கும் முடிகளின் எண்ணிக்கையையும் எண்ண முடியாது என்று சொல்வார்கள். பல விடுகதைகள் இதனை ஒட்டி இருக்கின்றன. இரண்டுமே சாத்தியமே. ஆனால் துல்லியமாக அதனைக் கணக்கிட முடியாது, அதற்கான அவசியமும் இல்லை.
பூமியில் இருக்கும் கடல் நீரின் அளவு என்னஎனத் தோராயமாகச் சொல்லலாம், ஆனால் மில்லி லிட்டர் துல்லியத்திற்கோ லிட்டர் துல்லியத்திற்கோ கணக்கிடவேண்டிய அவசியம் இல்லை. உடல் முழுக்க ரோமங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும். இதில் தலை பகுதியில் அடர்த்தியாகவும் நிறைய முடிகள் இருக்கும். இது உடலுக்கு மிகவும் அவசியமானது.
எண்ணுவது என முடிவாகிவிட்டது, எப்படி எண்ணுவது? ஒருவர் தலையில் உள்ள அனைத்து முடி இழைகளையும் எண்ண எவ்வளவு நாட்களாகும்? ஒரு மனிதரின் தலையில் சராசரியாக இருக்கும் முடி இழைகளின் எண்ணிக்கை 1,00,000ல் இருந்து 1,50,000 வரை. அதாவது 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை. இதனை எண்ணுவது என்பது மிகவும் சவாலானது. ஒரு சின்ன பகுதியில் எவ்வளவு முடி இழைகள் இருக்கு என்று கண்டுபிடித்தால் அதன் அடர்த்தி நமக்குத் தெரிந்துவிடும். ஒரு சென்டி மீட்டருக்கு ஒரு செண்டிமீட்டர் சதுர பகுதியில் எவ்வளவு முடி இழைகள் இருக்குன்னு எண்ணிவிட்டால் போதும்.
தலையில் எவ்வளவு பரப்பளவிற்கு முடி இருக்கும் எனக் கணக்கிடலாம். இதுவும் தோராயமான கணக்குதான். தலையில் இருக்கும் முடியின் பரப்பளவு 100 cm2. 1 cm X 1 cm-ல் இருக்கும் முடி இழைகளின் எண்ணிக்கை = 1000 என வைத்துக்கொள்வோம். அப்படியானால் மொத்த முடி இழைகளின் எண்ணிக்கை = 1000 X 100 = 1,00,000 முடி இழைகள்.
இப்படித்தான் பல இடங்களில் கணக்கிடு வார்கள். ஒரு காட்டில் இருக்கும் மொத்த மரங்களை ஒவ்வொன்றாக எண்ணமாட்டார்கள். ஒரு ஏக்கருக்கு எவ்வளவு மரங்கள் இருக்கிறது என எண்ணிவிட்டு, காடு எத்தனை ஏக்கருக்கு உள்ளதோ அதனைக் கொண்டு மொத்த மரங்களின் தோராயக் கணக்கு நமக்குக் கிடைத்துவிடும்.
கழிவதும் வளர்வதும்: சீப்பினால் தலை வாரி முடித்ததும் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைக் காணலாம். ஒருவருக்குச் சராசரியாக 100-ல் இருந்து 150 முடிவரை முடி இழை கொட்டும். அதேஅளவிற்கு ஒரு நாளைக்கு வளரும். அப்படியானால் ஒரு நாளைக்கு எவ்வளவு சதவிகிதம் இழப்பு? (100/1,00,000) X 100 = 0.1%
ஒருவருக்கு சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும். இதுவே பெரிய எண்ணிக்கை. இன்னொன்றையும் யோசிப்போம். ஒரு முடியின் நீளம் எவ்வளவு இருக்கும்? என்ன அலகில் குறிப்பிடலாம்? கிலோமீட்டர்? மீட்டர்? சென்டிமீட்டர்? மில்லி மீட்டர்? இன்னொரு விஷயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
நனைந்தமுடி சுமார் 30% சதவிகிதம் வரையில் சாதாரணமாக இருப்பதைவிட அதிக நீளத்தில் இருக்கும். இது நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் 30% சதவிகிதம் வரையில் அதிகமாகும். நனைப்பதற்கு முன்னர் 10 மில்லிமீட்டர் எனில் நனைத்தபின்னர் 10-13 மில்லிமீட்டர் வரைக்கும் இருக்க லாம்.
எங்கும் கணிதம்: அப்படி எனில் ஒருவரின் தலையில் இருக்கும் முடிகளை நீளமாக அடுக்கினால் எவ்வளவுதூரத்திற்கு போகும்? எங்க போயிட்டீங்க? கணக்கு போட்டுகிட்டு இருக்கீங்களா? ஒரு பக்கம் நாம் எளிமையான கணிதம் போடுகின்றோம், ஆனால் முடிகள் வைத்து அழகு சாதனத் துறை பெரும் முதலீடு ஆராய்ச்சி எல்லாம் செய்துவருகிறது. உண்மையில் அந்த ஆராய்ச்சியில் முழுக்க இருப்பதும் கணிதம்தான்.