கதை கேளு கதை கேளு 58: ஆயிரம் ஜன்னல் வகுப்பறை

கதை கேளு கதை கேளு 58: ஆயிரம் ஜன்னல் வகுப்பறை
Updated on
2 min read

ஆசிரியரும், மாணவர்களும் உரை யாடும் களமாக வகுப்பறை இருந்தால், குடும்பம், அரசியல், சமூகம், பள்ளி இவற்றில் ஏற்படும் மாற்றங்களை காண முடியும். ஆயிரம் ஜன்னல்கள் கொண்டதாக ஒரு வகுப்பறை அமைய வேண்டும்.

வாசல் ஒன்றின் மூலம் மட்டுமே அறிவு கிடைப்பது போதாது. அறிவுச் செழுமையில், களம் புகுந்து, வெற்றி காண மாணவர்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மாணவர்களையே சிந்தித்துக் கூற வைத்திருக்கிறார் ஆசிரி யர் கலகல வகுப்பறை சிவா.

ஆசிரியர்களுக்கு சுதந்திரம்: கரோனாவுக்கு பிறகான வகுப்பறைச் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டனவா? ஏன்திட்டமிடப்படவில்லை. ஆசிரியர்கள் தங்களின் பெரும் பொறுப்பை உணர்ந்திருக் கிறார்களா? செயல்படுகிறார்களா? செயல்படாவிட்டால் காரணம் என்ன? அலுவலக ரீதியான அழுத்தங்களிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? பள்ளி இறுக்கமான நிறுவனமாக செயல்படுவதன் ஆபத்துகள் என்னென்ன? என்று கருத்துகள் விரிகின்றன.

கலந்துரையாடல்: ஆசிரியர், மாணவர்கள் இடையிலான கலந்துரையாடலே வகுப்பறையின் இறுக்கத்தை உடனே உடைக்கும் வழி என்கிறார் ஆசிரியர். கலந்துரையாடலை எப்படி தொடங்கலாம்? திரைப்படங்கள் பெரிதும் கைகொடுக்கும். சார்லி சாப்ளினின் The kid திரைப்படத்தை ஆசிரியர் ஒளிபரப்புகிறார்.

இரு குழுவாக மாணவர்களை பிரித்து கலந்துரையாட வைக்கிறார். சார்லி சாப்ளினின் செயல்கள் சரியா? தவறா? என உரையாடல் இரு அணியினருக்குள்ளே சூடுபிடிக்கிறது. வகுப்பறையில் வாய் திறக்காத மாணவர்களும் விவாதத்தில் பங்குபெறுகின்றனர்.

ஹிட்லர், ஆன் பிராங்க், நாஜி என முதல் உலகப்போரின் கதைகளைக் கூறி திரைப்படமாகவும் மாணவர்களுக்கு ஆசிரியர் காண்பிக்கிறார். மாணவர்களின் மனதில் தோன்றும் கருத்துகளை கடிதங்களாக எழுதிவரச் சொல்கிறார்.

மறுநாள் மாணவர்கள் ஹிட்லரைக் கண்டித்தும், குட்டிப்பெண் ஆன் பிராங்க் மீது கருணையும் பொங்க கடிதங்கள் எழுதிவந்து குவிக்கின்றனர். மேலும் முதல் உலகப்போர் பற்றி அறிந்துகொள்ள விரும்பு கின்றனர். அவர்களிடம் அதற்கு புத்தகங்கள் உதவும் என வகுப்பறை நூலகத்தை கைகாட்டுகிறார் ஆசிரியர்.

வளரிளம் பருவ மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளம். அவற்றில் அத்தியாவாசியமானவையாக சில உள்ளன. உடல் பற்றிய குழப்பம் இருபாலினரிடமும் உள்ளது. இந்தக் குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்க அறிவியல் ஆசிரியர் மட்டும் பொறுப்பேற்பது என்பதை விட, ஆசிரியர்கள் அனைவருமே வளரிளம் பருவத்தினரின் குழப்பங்களை நீக்கிட உதவ வேண்டும்.

பருவ வயதில் கட்டமைக்கப்படும் குணங்களே அவர்கள்வாழ்வின் செயல்பாடுகளின் அடிப்படையாகிறது. ஆகவே, மாணவர்களிடம் காதல் பற்றியும் பேச வேண்டிய தேவையிருக்கிறது. நூலாசிரியர் காதல் பற்றி பேசலாமா எனும்போது, மாணவர்கள் மனந்திறக்கின்றனர். ஆசிரியர் நம்பிக்கைக்குரியவராகிறார்.

தேர்வு முறைக்கு மாற்று முறைகளை மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். வகுப்பறைகளில் நடைபெறும் தேர்வை வித்தியாசப்படுத்துகிறார். நாட்குறிப்பு தினமும் எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குகிறார். மாணவர்களின் சிந்தனையாற்றலுக்கு தனிமதிப்பெண் தந்து, அவர்களின் சிந்திக்கும் திறனை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார்.

ஆசிரியரே வழிகாட்டி: கல்வி எப்படி இருக்க வேண்டும் என்றமாணவர்களின் கனவை, ஆசிரியரும் மாணவருமாக கலந்துரையாடி, கனவு தொகுப்பை மாநில கல்வி ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பிவைக்கின்றனர். ஆசிரியரே மாணவர்களின் சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும். மாணவர்களின் பருவ வயதுக் குறைகளை சரிசெய்வதிலும், சரியான பாதைக்கு அவர்களை வழிநடத்துவதிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்கிறார்.

வளரிளம் பருவக் குழந்தைகளின் ஒரே நம்பிக்கை ஆசிரியரே. அவர்களின் குரலை அக்கறையோடு கேட்டு, அவர்களோடு உரையாடும் ஆசிரியருக்காகவே காத்திருக்கிறார்கள். அப்படியான ஆசிரியர் கிடைத்துவிட்டால் அவர்களது கரடுமுரடான பாதையில் நம்பிக்கைப் பூக்கள் பூக்கும் என்கிறார்.

மாணவர்களை வகுப்பறையில் சுதந்திரமாகச் செயல்பட சிந்திப்பதுடன், அவர்களின் எளிய செயல்களை பிரம்மாண்டமாக மாற்றி உற்சாகப்படுத்துகிறார். அடுத்த தலைமுறைக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை தருவதே கல்வி. குழந்தைகளின் சுமைகளை தள்ளிவைத்து கலந்துரையாடும் வகுப்பறைகளை உருவாக்க ஆசிரியர்களாலேயே முடியும். ஆசிரியரும், குழந்தைகளும் கலந்துரையாடும் வகுப்பறைகளில் தேடலின் ஆயிரம் ஜன்னல் கள் திறக்கும் என்கிறார் ஆசிரியர் சிவா. ஜன்னல்கள் திறப்போமா?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in