திறன் 365 - 28: கற்றல் சூழலுக்கு விளையாட்டுக்கள் உதவும்

திறன் 365 - 28: கற்றல் சூழலுக்கு விளையாட்டுக்கள் உதவும்
Updated on
2 min read

விளையாட்டுக்கள் வகுப்பறையில் குழந்தைகளிடம் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அறிவு மற்றும் அனுபவத்தை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைபடுத்தி கற்றலை ஊக்குவிக்குவிக்கின்றன.

எல்லா பாடங்களுக்கும் விளை யாட்டை அறிமுகப்படுத்த முடியும். நடைமுறை விளையாட்டுகளை ஆசிரியர் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை பாடத்துடன் இணைப்பது எளிது.

உதாரணத்திற்கு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு நான்கு நிலைகள் தெரியும். ஆனால், முழுமையான புரிதலுக்கும் வலுப்படுத்தவும் ஜோடி புறா விளையாட்டை பயன்படுத்தலாம். இப்படி எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாட்டு விதியை புரியும்படி கூற வேண்டும்.

வண்ணத்துப்பூச்சியின் முதல் பருவம் சார்ந்த விசயத்தைக் கூறும்போது மாணவர்கள் தனித்தனியாக நிற்க வேண்டும். ஆசிரியர் கூறும்வார்த்தைகள்- இலையின் அடிப்பகுதியில் முட்டை இடுதல். இரண்டாம் பருவம் சார்ந்த விசயம் கூறும் போது இரண்டு இரண்டு மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும். ஆசிரியர் கூறும் வார்த்தைகள்- ஐந்து நாட்களுக்கு பின் புழுவாக வெளிவரும். பச்சை அல்லது பழுப்பு நிறம் கொண்ட புழு. அதிகமாக உணவு உட்கொள்ளும் நிலை. உடல் பல நிறங்களில் வரிவரியாக காணப்படும்.

மூன்றாவது பருவம் குறித்து கூறும் போது மூன்று மூன்று மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.

ஆசிரியர் கூறும் வார்த்தைகள் - உடல் உறுப்புகளில் இறக்கைகள் முளைக்கும் பருவம். தன்னை சுற்றிகூடு கட்டிக்கொள்ளும் பருவம். கூட்டுப்புழு பருவம். உடல் உறுப்புகள் முளைக்கும் பருவம். நான்காவது பருவம் குறித்து கூறும் போது நான்கு நான்கு நபர்களாக இணைந்து நிற்க வேண்டும். ஆசிரியர் கூற வேண்டியது - முழு வண்ணத்துப்பூச்சி, கூட்டை உடைத்து வெளிவரும் பருவம்.

தவறான எண்ணிக்கையில் நிற்பவர் விளையாட்டில் இருந்து விலக்கப்படுவார். தொடர்ந்து விளையாடுவதன் மூலம் மாணவனே ஆசிரியர் போன்று இவ்விளையாட்டை நடத்தலாம். விளையாட்டின் மூலம் மாணவன் வண்ணத்துப்பூச்சியின் நான்கு பருவங்கள் குறித்த அறிவு, விளையாட்டு விதிகளை மதித்தல், இணைந்து செயல்படுதல், குழுவாக செயல்படுதல், சகிப்பு தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகிய திறன்களை பெறுகிறான்.

விலங்குகளின் வாழ்விடங்கள் குறித்து விளையாட்டை உருவாக்கித் தர சகஆசிரியர் கேட்டார். செய்கை வழி விளையாட்டை கூறினேன். முதுமலை என்று கூறினால், மாணவர்கள் யானைபோல் செய்து காட்ட வேண்டும். கிண்டி என்றால் மான் போல் குதித்து காட்ட வேண்டும். பன்னீர்கட்டா என்றால் பட்டாம் பூச்சி பறப்பதுபோல் கை அசைக்க வேண்டும். கிர் காடு என்றால் சிங்கம்போல் கர்ஜிக்க வேண்டும். முண்டந்துறை என்றால் புலி மாதிரி பாய்ந்து காட்ட வேண்டும். வேடந்தாங்கல் என்றால் பறவைபோல் பறந்து காட்ட வேண்டும்.

மாணவர்கள் ஆர்வமாக விளையாடினார்கள். தவறான செய்கை காட்டும் மாணவர்கள் விளையாட்டில் இருந்து விலக்கப்படுவார்கள். இந்த விளையாட்டு சரணாலயங்கள் பற்றியும் அங்கு வாழும் விலங்குகள் குறித்தபுரிதலை ஏற்படுத்தும்.

இப்படி விளையாடும் போதுமயில்களுக்கு மதுரை திருப்பரங் குன்றத்தில் சரணாலயம் உள்ளது என்று ஒரு மாணவன் கூறினான். திருப்பரங்குன்றம் என்றால்மயில் போல ஆடணும் என்றும் கூறினான். ஏற்றுக் கொண்டோம்.

விளையாட்டுக்கள் கற்றலை சுவராசியமாக்குகின்றன. குழந்தைகளின் கவனத்தை முழுமையாக ஈர்க்கின்றன. குழந்தைகளிடத்தில் சமூக உணர்வை வளர்க்கின்றன. சமூக தொடர்பு திறன்களை மேம்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதுடன், கற்றல் பயணத்தை தன்னம்பிக்கையுடன் தொடர உந்துதலை அதிகரிக்கிறது.

குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தையும் வேடிக்கையானதாக விருப்பத்தையும் ஈர்க்கின்றன. நேர்மறையான, ஆற்றல்மிக்க கற்றல் சூழலை உருவாக்க விளையாட்டுக்கள் உதவு கின்றன.

- கட்டுரையாளர் எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in