

இதுவரை கடல், ஆறு, கால்வாய், ஏரி இதை எல்லாம் பார்த்துட்டோம். இந்த வரிசையில் இப்பொ நாம் பார்க்கப் போறது வளைகுடா, விரிகுடா. ‘அது எப்படி சார்… ஆறு, ஏரி, கால்வாய்.. இதுக்கு முன்னாலயே வளைகுடா விரிகுடா பற்றிப் பார்த்து இருக்கணுமே... இல்லையா..?’ ரொம்ப சரி. ‘அளவு’ வைத்துப் பார்க்கும் போது நீங்க சொல்றது சரி. ‘நீர் நிலைகள்’ நிறைவுப் பகுதிக்கு வந்துட்டோம். கடல்ல தொடங்கினோம். கடல்லயே நிறைவு செய்யலாமே அதனால, வளைகுடாவில வந்து நிற்கிறோம்.
இரண்டுமே கடலின் நீட்சிதான். அப்படின்னா, வளைகுடா, விரிகுடா இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? கடல் நீரைச் சுற்றிலும் நிலப் பரப்பு மிக நெருக்கமாய் இருந்து, கடலுடன் குறுகிய முனையைக் கொண்டு இருந்தால் அது வளைகுடா. இதுவே, கடல்முனை அகன்று இருந்தால் அது விரிகுடா. மற்றபடி இரண்டுக்கும் இடையே துல்லியமான வேறுபாடு எதுவும் இல்லை.
உதாரணத்துக்கு, கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை கடல்முனை நெடுந்தொலைவு நீள்வதால் அது வங்காள விரிகுடா. பல இடங்களில் கடல்முனை குறுகி இருக்கிறதால வளைகுடா ஆகின்றது.இங்குள்ளவை ‘வளைகுடா நாடுகள்’ ஆகின்றன.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய கண்டத்துடன் இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப் பரப்பு மோதியதில் வங்காள விரிகுடா தோன்றியதாய் சொல்லப்படுகிறது. இப்போதும் கடலுக்கு அடியில் பூமித் தகடுகள் தொடர்ந்து நகர்ந்து வருகின்றன. அதனால் வங்காள விரிகுடாப் பகுதியில் நில நடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழ்கின்றன. தூய நீரை விடவும் விரிகுடா நீர் உப்பாக இருந்தாலும், பொதுவாகக் கடல் நீரில் காணப்படும் அளவை விடவும் குறைந்தே உள்ளது.
இதுவரை பொதுவாகப் பார்த்தோம். இனி‘வங்காள விரிகுடா’. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியன்மர், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் வங்காள விரிகுடாவில் உள்ளன.
வடகிழக்குப் பருவ மழையின் தாய் வீடு: சுமார் 26 லட்சம் ச.கி.மீ., கொண்ட வங்காள விரிகுடாவில், கங்கை, யமுனை, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட ஆறுகள் கலக்கின்றன. பல்வகை சுற்றுச்சூழல் நிலவும் வங்காள விரிகுடாப் பகுதியில், சுறா, முதலை, திமிங்கிலம் உள்ளிட்ட சுமார் 40 வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. தாதுக்கள் மற்றும் விலையுயர் கற்கள் அதிகம் உள்ளன.
இயற்கை எரிவாயு மிகுந்துள்ளது. கடற்பாசி, பவளப் பாறைகள், மாங்க்ரோவ் காடுகள் ஆகியன அதிகம் காணப்படுகின்றன. மியன்மரை ஒட்டியுள்ள ச்செடூபா தீவில் சேற்று எரிமலை உள்ளது. எப்போதேனும் சேறு அள்ளி வீசுகிறது!
வங்காள விரிகுடாப் பகுதியில் ஆண்டுக்கு 60 லட்சம் டன் மீன்கள் கிடைக்கிறது. இது, உலக மீன் உற்பத்தியில் 7%க்கு மேல் ஆகும். வடகிழக்குப் பருவ மழையின் தாய் வீடு இது. தமிழகத்தின் பெரும் பகுதி இதனால் மழை பெறுகிறது. பருவ காலத்தில் அடுத்தடுத்து புயல் உருவெடுத்து சூறைக் காற்றுடன் பெருமழை பெய்வதால், சேதமும் ஏற்படுகிறது.
வங்காள விரிகுடாவின் மீது தமிழ் அரசர்கள், குறிப்பாக, சோழப் பேரரசுகளின் ஆதிக்கம் மிகுந்து இருந்தது. பல்லவர்கள் எழுப்பிய மாமல்லபுரம் கடற்கோயில், யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் இந்த மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன.
மாநிலத்தின் கிழக்கு எல்லையாக இருக்கும் வங்காள விரிகுடா, தமிழகத்துக்கு அழகும் வளமும் சேர்க்கிறது.
இந்த வாரக் கேள்வி: உலகின் விரிகுடாப் பகுதிகள் சிலவற்றைப் பற்றிக் குறிப்பு எழுக.
(தொடர்வோம்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com