வாழ்ந்து பார்! - 58: வாழ்க்கைத் திறன்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த இயலுமா?

வாழ்ந்து பார்! - 58: வாழ்க்கைத் திறன்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த இயலுமா?
Updated on
2 min read

சந்தேகம் ஏதேனும் உண்டா? என்று ஆசிரியர் எழில் வினவியதும், நேரம் தவறாமை, திட்டமிட்டுச் செயல்படுதல், பதற்றம் கொள்ளாமை, மகிழ்வுச்செயலில் ஈடுபடுதல் போன்றவற்றில் உலகப்பர் ஈடுபட்டு அவர் மனஅழுத்தத்தைத் தவிர்த்தார் என்னும் செய்தி எங்களுக்கான அறிவுரையாக இருக்கிறது.

ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் முறையாகச் செயல்படுத்த இயலுமா? என்று வினவினான் அருளினியன். அவனது குரலில் சந்தேகமும் அங்கதமும் சரிவிகிதத்தில் தொனித்தன.

அது மட்டுமல்ல பிற திறன்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்த இயலுமா என்று வினவினாள் இளவேனில். வினாகளைக் கேட்டு புன்னகைத்த ஆசிரியர் எழில், இந்த வினாகளை கேட்பதற்கு இவர்கள் இருவரும் பத்து வாழ்க்கைத் திறன்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அவற்றை எங்ஙனம் பயன்படுத்தி இருக்கின்றனர் எனக் கண்டுபிடிக்கிறீர்களா? என்றார். ஆசிரியரிடமிருந்து விடையை எதிர்பார்த்த மாணவர்கள், அவர் மேலுமொரு கேள்வி எழுப்பியதும் சற்றே திகைத்தனர். அதனால் வகுப்பில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

தன்னையறிதல் எனும் தனித்திறன்: மாணவர்களின் திகைப்புக் கலையும்வரை காத்திருந்த ஆசிரியர், எனது வினா தெளிவாக இருக்கிறதா? என்றார். தெளிவாகப் புரிகிறது என்றான் சாமுவேல். அதனை வழிமொழிவதுபோல எல்லோரும் தலையாட்டினர். சிந்தித்துச் சொல்லுங்கள் என்று கூறினார் எழில். அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், நான் உங்களிடம் வினவும் பொழுது, எனது வினா உங்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கக் கூடாதே என்ற மனஅழுத்தம் இருந்தது. அதே வேளையில் அவ்வினாவில் கிண்டலின் சாயல்படிந்து விடக்கூடாதே என்ற கவலை உணர்வும் இருந்தது என்றான் அருளினியன். அருமை. மனஅழுத்தத்தைக் கையாளுதல், உணர்வுகளைக் கையாளுதல் ஆகிய இரு வாழ்க்கைத்திறன்கள் வெளிப்பட்டதைக் கண்டுபிடித்திருக்கிறாய் என்றார் எழில்.

நான் வினவும்பொழுதும் இதே திறன்கள் எனக்குள்ளும் வெளிப்பட்டன என்றாள் இளவேனில். ஒரு மாணவியாக எனக்குள் எழும் ஐயத்தை வினவுதலில் தவறில்லை என்று முடிவுசெய்து வினவினேன் என்றாள். இந்தக் கூற்றில் தன்னையறிதல், முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்த்தல் என்னும் மூன்று திறன்கள் வெளிப்படுகின்றன என்றார் எழில்.

எப்படி? என்று குழப்பமாக வினவினான் காதர். இளவேனிலுக்கு இத்திறனை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா என்ற ஐயம் எழுந்தது. அந்த ஐயம் தனக்குள் இருப்பதை அவள் அறிந்ததே ‘தன்னையறிதல்’ திறனால்தான் என்று விளக்கினாள் அருட்செல்வி. அந்த ஐயத்தை வினவலாமா, வேண்டாமா என்று ஊசலாட்டம் அவளின் மனத்தில் தோன்றியிருக்கிறது. அந்த ஊசலாட்டந்தான் சிக்கல்.

வினவுவதில் தவறில்லை, வினவலாம் எனத் துணிந்திருக்கிறாள். அத்துணிவுதான் முடிவெடுத்தல். இந்த மூன்று திறன்களும் அருளினியனுக்கும் அவன் வினவும்பொழுது வெளிப்பட்டிருக்கும் என்றாள் கலையரசி. ‘ஆம்’ என்று தலையசைத்தான் அருளினியன். அருமை என்று அவர்கள் இருவரையும் பாராட்டினார் எழில்.

இந்த வினாக்கள் எழுந்ததே அவர்களது ஆய்வுச் சிந்தனையால்தான் என்றாள் பாத்திமா. ஆய்வுச் சிந்தனையில் எழுந்தஐயத்தை, எதிராளியின் மனம் நோகாமல் எப்படி கேட்பது என்று அவர்கள் சிந்தித்ததுதான் அவர்களின் ஆக்கச்சிந்தனை என்றான் சுடர். இந்த வினாவால் அவரது மனம்நோகுமோ எனச் சிந்தித்தது அவர்களின் ஒத்துணர்வுத்திறனால் என்றாள் மணிமேகலை.

இவ்வளவு நாட்கள் கலந்துரையாடி நாம் கற்றுக்கொள்ள உதவியவரிடம், இதுவாழ்க்கைக்குப் பயன்படுமா என வினவினால் அவர் அதனை உடன்பாட்டு நோக்கில் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையை கேள்வி கேட்டவர்களுக்கு தந்தது அவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள பழகுந்திறன் என்றாள் பாத்திமா. நமது ஐயத்தை அவர்கள் தெளிவாக வெளிப்படுத்த உதவியது அவர்களின் தகவல்தொடர்புத்திறன் என்றாள் நன்மொழி.

அருமை என்று ஆசிரியர் பாராட்டியதும் பத்து வாழ்க்கைத்திறன்களும் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பயன்படுகின்றன என்பதை புரிந்துகொண்டேன் என்றான் அருளினியன்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in