

அரண்மனைக்கு தூது விட புறாவைக் கொண்டுவந்து தத்தன் கொடுத்ததும், அதன் கால்களில் ‘எங்கும் பறக்கும் எங்கள் கொடி’ என்கிற தலைப்பில் தூது செய்தியை கட்டிப் பறக்கவிட்டான் குணபாலன். அவனது செயல்கள் அங்கிருந்த அனைவருக்கும் புதிராகவே பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தின் தலைவன் சேரலாதனுக்கு மட்டும் குணபாலன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
ஏனென்றால், குணபாலனின் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அவனைப் பிடிக்க அரசாங்க வீரர்கள் முயன்றும் அது நடக்கவில்லை. இப்போது கூட அவர்களின் கைகளில் அகப்படாமல் தப்பித்து வந்துள்ளான். எனவே, குணபாலனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று திண்ணமாக நம்பினான்.
அந்த நம்பிக்கையில் அவன் குணபாலனைத் தனியாக அழைத்து அவனிடம் மெல்லிய குரலில், குணபாலா, உனது இந்த செயலுக்குத் துணையாக நமது புரட்சிப்படையில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள். அல்லது எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் கேள். அனுப்பி வைக்கிறேன் என்றான் சேரலாதன். அவன் சொன்னதைக் கேட்ட குணபாலன் லேசான புன்முறுவலுடன், மன்னிக்கவும். எனக்கு எனது குதிரையும் தத்தனும் இருக்கும்போது வேறு எவரது துணையும் தேவையில்லை.
சித்திரைத் திருநாள் அன்று அரண்மனைக் கோட்டையில் நமது கொடி பட்டொளி வீசிப் பறக்கும். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. இப்போது நான் சென்று வருகிறேன் என்று அங்கிருந்து புறப்படத் தயாரானான்.
இத்தனை நாட்களாக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தூதுப்புறா தனக்கு விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் வான்வெளியில் உயர உயரப் பறந்து சென்று மறைந்தது. அதனை அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
தத்தனோ வாயைப் பிளந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது வாயைத் தனது கையால் மூடிய குணபாலன், வேடிக்கை பார்த்தது போதும். என்னுடன் வா நாம் ஏரிக்கரைக்குச் செல்வோம் என்றான். தத்தனும் குணபாலன் சொன்னதைக் கேட்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.
புரட்சிப் படையினர் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியை விட்டு, சற்றுத் தொலைவு வரை குணபாலனிடம் எதுவும் பேசாமல் வந்துகொண்டிருந்தான் தத்தன். மேலும் சில அடிகள் எடுத்துவைத்த நிலையில், அதற்கும் மேல் பொறுக்கமாட்டாமல் குணபாலனிடம், நீ செய்வது எதுவும் சரியில்லை.
உன்னுடன் சேர்ந்தால், நானும் அரசாங்கத்திடம் சிக்கி, பாதாளச்சிறையில் வாழ்நாளைக் கழிக்கவேண்டியதுதான் போலிருக்கிறது என்றான்.
அதற்கு குணபாலன், நீஎன்ன சொல்கிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றான் வேடிக்கையாக. உனக்கா ஒன்றும் புரியவில்லை? நீ கற்பனையில் வாழ்கிறாய். உனது தகுதிக்கு மீறி சாகசங்களை நடத்திக்காட்டுவேன் என்கிறாய் என்றான் தத்தன்.
எது எனது கற்பனை? எனது தகுதிக்கு சவால் விடும் காரியமாக நீ நினைப்பது என்ன? என்றான் குணபாலன். அதற்கு தத்தன், அரண்மனைக் கோட்டையில் அரசின் கொடியை நீக்கிவிட்டு மக்கள் புரட்சிப்படையின் கொடியை ஏற்றுவேன் என்கிறாயே... அதைச் சொல்கிறேன்.
அதுநடக்கிற காரியமா? இதில் எவ்வளவு பேர் அரசாங்க வீரர்களில் வாளுக்கு இரையாகப் போகிறார்களோ? என்றான். நிச்சயம் நடக்கிற காரியம்தான். நாம் மனது வைத்தால், ஏன், நீ மனது வைத்தாலும் நடக்கிற காரியம்தான் என்றான் குணபாலன். மேலும் அவன் அருகில் நெருங்கி, நான் யாரையும் அழைத்துப் போகப் போவதில்லை என்றான்.
குணபாலன் அப்படி சொன்னதைக் கேட்ட தத்தன், அப்பாடா, நான் தப்பித்தேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். ஆனால், அவனது மகிழ்ச்சி அடுத்த நொடியே தவிடுபொடி ஆனது. நான் யாரையும் அழைத்துப் போகப் போவதில்லை என்றுதானே சொன்னேன்? உன்னை விட்டுவிட்டுச் செல்வேன் என்றா சொன்னேன்? என்றான்.
அதைக் கேட்ட தத்தனுக்கோ குலை நடுங்கிப் போனது. என்ன விளையாட்டு இது எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்களே! அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னைப் போய் தேர்ந்தெடுத்திருக்கிறாயே? உனது எண்ணத்தை மறுபரிசீலனை செய். இது எனது வேண்டுகோள் அல்ல. கட்டளை என்றான் தத்தன். அதைக் கேட்டுச் சிரித்த குணபாலன், தத்தா, என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அதன்படி நாம் செயல்பட்டால், நமது எண்ணம் எளிதில் நிறைவேறும் என்றான். அது என்ன திட்டம் என்று என்னிடம் சொல்லக் கூடாதா? என்றான் தத்தன்.
இப்போது நாம் செல்லமாக வளர்க்கும் கழுகுகளுக்குத் தீனி போடலாம் வா.அத்துடன், நானும் அவற்றுக்குத் தீனிகொடுத்து அவற்றுடன் பழகிக்கொள்கிறேனே என்றான் குணபாலன். அட, அதுவா இப்போ முக்கியம்? நானே நீசொல்வதைக் கேட்டுத் திகைத்துப் போயிருக்கிறேன்.
நாளைக்கு எனது இந்த உடலில் உயிர் மிஞ்சி இருக்குமோ இருக்காதோ என்று இப்போதே பக் பக்கென மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் நீ பொழுதுபோக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாயே உனது திட்டத்தை இப்போதே சொல். என்னால் அந்த ஆச்சரியத்தைக் கேட்காமல் இருக்க முடியவில்லை என்றான் தத்தன். அதைக் கேட்ட குணபாலன், நிச்சயமாக உன்னிடம் சொல்கிறேன். ஆனால்...என்று சற்று நிறுத்தினான்.
- தொடரும்.