முத்துக்கள் 10 - இலக்கிய உலகின் ‘யூத்’ ஜே.எம்.கோயட்ஸி

முத்துக்கள் 10 - இலக்கிய உலகின் ‘யூத்’ ஜே.எம்.கோயட்ஸி
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த படைப்பாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜே.எம்.கோயட்ஸி (J.M.Coetzee) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்தார் (1940). தந்தை சட்ட ஆலோசகராகவும் அரசு ஊழியராகவும் பணியாற்றினார். செயின்ட் ஜோஸஃப் பள்ளியில் பயின்றார். கேப் டவுன் பல்கலையில் கணிதம், ஆங்கிலம் பயின்றார்.

# 1960-ல் ஆங்கிலத்திலும் 1961-ல் கணிதத்திலும் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு, லண்டனில் உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தில் கணினி புரோகிராமராக பணியாற்றினார். 1969-ல் ‘தி இங்கிலிஷ் ஃபிக்ஷண் ஆஃப் சாமுவேல் பேக்கட்: ஆன் எஸ்ஸே இன் ஸ்டைலிஸ்டிக் அனாலிசிஸ்’ என்ற கணினி தொடர்பான ஆய்வுக்கட்டுரை எழுதி டெக்ஸாஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

# இலக்கிய ஆர்வம் மட்டுமின்றி எழுதுவதிலும் திறமை பெற்றிருந்தார். ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியுயார்க்கில் ஆங்கில இலக்கியம் கற்பித்தார். 1968-ல் ‘டஸ்க்லான்ட்’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். மீண்டும் தென்ஆப்பிரிக்கா திரும்பிய இவர், கேப் டவுன் பல்கலையில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார்.

# 2001 வரை ஆசிரியப் பணியோடு தொடர்ந்து எழுதியும் வந்தார். தன் சொந்த ஊர், அதன் மக்கள் குழந்தைப் பருவ அனுபவங்களை மையப்படுத்தி 1997-ல் ‘பாய்ஹுட்’ நாவலைப் படைத்தார்.

# 1983-ல் ‘லைஃப் அன்ட் டைம்ஸ் ஆஃப் மைக்கேட் கே’, 1999-ல் ‘டிஸ்கிரேஸ்’ ஆகிய படைப்புகளுக்காக இரண்டு முறை புக்கர் பரிசு வென்றார். ‘சம்மர்டவுன்’, ‘உல்ஃப் ஹால்’, ‘எலிசபத் காஸ்டெலோ’, ‘வெயிட்டிங் ஃபார் தி பார்பேரியன்ஸ்’, ‘ஏஜ் ஆஃப் அயர்ன்’, ‘ஸ்லோ மேன்’, ‘தி சைல்ட்ஹுட் ஆஃப் ஜீஸஸ்’ உள்ளிட்ட இவரது நாவல்கள் வரவேற்பைப் பெற்றன.

# ‘ஏ ஹவுஸ் இன் ஸ்பெய்ன்’, ‘தி லைஃப்ஸ் ஆஃப் அனிமல்ஸ்’, ‘தி வுமென் க்ரோஸ் ஓல்டர்’ உள்ளிட்ட சிறுகதைகள், ‘லான்ட்ஸ்கேப் வித் ரோவர்ஸ்’, ‘இன்ட்ரொடக் ஷ்ண் டு ராபின்சன் க்ரூசோ’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் முதலான இவரது படைப்புகள் உலகப் புகழ்பெற்றவை.

# ஆப்பிரிக்காவில் பதவி ஓய்வு பெற்ற பின் 2002-ல் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அங்கே அடிலெய்ட் பல்கலையின் ஆங்கில துறையில் கவுரவ ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் தான் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து 2002-ல் ‘யூத்’ என்ற நாவலை எழுதினார். இவரது மகத்தான பங்களிப்புகளுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2003-ல் வழங்கப்பட்டது.

# ஜெருசலேம் பரிசு, 3 முறை சி.என்.ஏ. பரிசு, ஐரீஷ் டைம்சின் சர்வதேச புனைகதை விருது, தி மாஸ்டர் ஆஃப் பீட்டர்ஸ்பர்க், ஜெஃப்ரி ஃபேபர் மெமோரியல் பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார்.

# 2005-ல் தென்ஆப்பிரிக்காவை உலகஇலக்கிய அரங்கில் இடம்பெற வைத்ததற்காகவும், இலக்கியக் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியதற்காகவும், ஆப்பிரிக்காவின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் மாபங்கப்வே’ விருதைப் பெற்றார்.

# 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றார். நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகப்பரிமாணம் கொண்ட ஜே.எம்.கோயட்ஸி இன்று 84வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in