மாறட்டும் கல்விமுறை - 30: உங்களுக்கு பூ வேண்டுமா?

மாறட்டும் கல்விமுறை - 30: உங்களுக்கு பூ வேண்டுமா?
Updated on
1 min read

அழகான, வாசனையுள்ள பூ கிடைக்க வேண்டுமா? தொடர்ந்து பூக்கள் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? நாம் செய்ய வேண்டியது பூவை மறப்பதுதான். புரியவில்லையா? பார்ப்போம்.

நாம் மண்ணைப் பண்படுத்த வேண்டும். கொப்பை நட வேண்டும். நீர் ஊற்ற வேண்டும். உரம் இட வேண்டும். களை எடுக்க வேண்டும். காற்றும் ஒளியும் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆடுமாடு மேயாமல் பாதுகாக்க வேண்டும். மேற்கூறியவற்றுள் ஏதேனும் ஒன்று பூவோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறதா? எதுவுமே இல்லை.

மண், உரம், நீர், காற்று, ஒளி... இவையொன்றும் எவ்விதத்திலும் பூவின் குணங்களைக் கொண்டவையாக இல்லை. உண்மையில் அவை பூவின் குணங்களுக்கு நேர் எதிராக இருக்கின்றன. ஆனால், இவைதான் பூ கிடைக்க அடிப்படை.

கூடவே பொறுமையும் வேண்டும். அப்படி பொறுமையாக காத்திருந்தால் ஒருநாள் அரும்பு வரும். மேலும் காத்திருந்தால் அரும்பு மலரும். வாசம் வீசும் மலர் கிடைக்கும். பிறகு தொடர்ந்து நமக்கு மலர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

கல்விக்கு எப்படி பொருந்தும்? - குழந்தைகள் வெற்றுத்தாள்கள் அல்ல, நாம் விரும்பியதை எழுத, குழந்தைகள் களிமண் போன்றவர்கள் அல்ல, நாம் விரும்பிய உருவங்கள் செய்ய. குழந்தைகள் செடி போன்றவர்கள். எப்படியென்று விரிவாகப் பார்ப்போம்.

செடியை நட்டதும் பூக்காது. ஒவ்வொரு செடியும் பூப்பதற்கு வேறுபட்ட கால அளவு தேவை. அதுபோல் குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்த சில மாதங்களிலேயே வாசிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்.

செடி பூக்காவிட்டால் மாற்ற வேண்டியது சூழலைத் தானே தவிர, செடியை அல்ல. குழந்தைகள் படிக்காவிட்டால், பண்புடன் பழகாவிட்டால் பெரியவர்களின் செயலைத்தான் மாற்ற வேண்டுமே தவிர குழந்தையைக் கடிந்துகொள்ளக்கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுக் கற்றுக்கொள்வதைவிட அவர்தம் செயல்களைப் பார்த்துத்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.

செடி வெயிலில் வாடிவிடுமே என்று யாரும் மரநிழலில் நடுவதில்லை. அதுபோல் குழந்தையைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லி பொத்திப் பொத்தி வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் அது போன்சாய் மரம்போல வளர்ச்சி குன்றிய குழந்தையாகிவிடும். அடுத்த தெருவுக்கே போகமாட்டாள். அவளுக்கு இந்தத் தெருவில் யாரையும் தெரியாது. பாடப்புத்தகத்தைத் தவிர வேறு எதையும் வாசிக்க மாட்டாள் என்று பெருமையாகப் பேசும் பெற்றோர் தங்கள் குழந்தையைப் போன்சாய் மரமாக வளர்க்கிறார்கள் என்று சொல்லலாம்.

செடி வளர்ந்ததா வளர்ந்ததா என்றுயாரும் பிடுங்கிப் பிடுங்கிப் பார்ப்பதில்லை. அதுபோல் படித்தார்களா படித்தார்களா என்று அடிக்கடி பரிசோதிப்பதால் பயனில்லை.

(கற்றல் தொடரும்)

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in