இவரை தெரியுமா? - 28: ஓவியம் எனும் மொழியால் பேசியவர்

இவரை தெரியுமா? - 28: ஓவியம் எனும் மொழியால் பேசியவர்
Updated on
2 min read

படுக்கையில் இருந்தபோதும் தனது தூரிகையால் துயர் துடைத்த ஃப்ரிடா காலோ உடல்நலம் தேறி மீட்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் தான் சந்திந்த டியாகோவை விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்தார். இதுநாள்வரை தான் வரைந்த ஓவியங்களை அவர்முன் காட்சிப்படுத்தினார். ஊக்கமளித்து மேலும் பல ஓவியங்கள் வரையச் சொன்னார், டியாகோ. அடிக்கடிச் சந்தித்தனர். ஓவியம், அரசியல், இலக்கியம், கலை என்று காலோவின் உலகை வேறொரு பிரபஞ்சத்திற்குக் கடத்திச் சென்றார் டியாகோ.

இவ்விருவருக்கும் 21 வயது வித்தியாசம். பார்ப்பவர்கள் ‘யானை - புறா ஜோடி’ என்று கேலி செய்தனர். இருந்தும் மனம் ஒத்துப்போனதால் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சான் பிரான்சிஸ்கோ சென்றனர். டியாகோ மியூரல் ஓவியங்களால் உலகப்புகழ் அடைந்த அதே சமயம், ஓவியம் வரைவதை நிறுத்திக் கொண்டு குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதை பிரதானமாக்கினார் காலோ.

முரண்பாடுகளும் உபாதைகளும்: காலோ ஓவியம் வரையாமல் இருப்பது டியாகோவிற்குப் பிடிக்கவில்லை. இருந்தும் அவர் அதை வெளிக்காட்டாமல் முகம் சுழித்தார். நாளடைவில் இச்சண்டைகள் பூதாகரமாக வெடித்தன. டியாகோவின் புகழை தானும் பெறவேண்டும் என காலோ நினைத்தார். முன்பைவிடத் தீவிரமாக ஓவியம் தீட்டினார்.

சான் பிரான்சிஸ்கோ நகர வாழ்க்கையை காலோ முற்றிலுமாக வெறுத்தார். மெக்சிகோ செல்லவேண்டும் என விரும்பினார். 1932ஆம் ஆண்டு அதை வெளிப்படுத்தும் தன் சுய-உருவப்படம் ஒன்றை மெக்சிகோ அமெரிக்கா பார்டரில் நிற்பதுபோல் வரைந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ‘எனது ஆடை இங்கே தொங்குகிறது’ என்று ஓவியத்தை வரைந்தார்.

மெக்சிகோவின் நாட்டார் வழக்கு: மெக்சிகோவின் பண்பாட்டுச் சின்னங்களை தனது ஓவியத்திலும் அங்க அலங்காரத்திலும் வெளிப்படுத்தினார். அந்நாட்டின் பண்பாட்டுப் புரவலராகத் திகழ்ந்தார். இதற்கிடையில் உடல் மேலும் மோசமானது. சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் இறுதிக்காலம்வரை அவதிப்பட்டார். பற்பல சிகிச்சைகள் செய்து கொண்டார். டியாகோ - காலோ ஜோடிக்கு இடையே விவாகரத்தானது.

கணவரைக் காட்டிலும் காலோவின் ஓவியங்கள் அதிகம் பேசப்பட்டன. உலகின் பல முக்கியமான ஓவியக் கண்காட்சிகளில் காலோ இடம்பெற்றார். அவரின் ஒவ்வொரு ஓவியமும் டியகோவின் பிரிவையும், தன் உடல் உபாதையையும் பேசின. குழந்தைப் பெறும் ஆற்றல் விபத்தினால் பறிபோனது. அதை ஓவியத்தில் வரைந்து அழுது தீர்த்தார். உலகத்திடம் அவர் பேசும் மொழி ஓவியமானது.

20ஆம் நூற்றாண்டின் முதல்மெக்சிக்கன் வரைந்த ஓவியமாக, காலோவின் ‘தி ஃப்ரேம்’ஓவியத்தை இலூவா அருங்காட்சியகம் விலைக்கு வாங்கியது. பிக்காசோவை சந்தித்து உரையாடினார். அவர் வழங்கிய கை உருவிலான காதணியை பின்னாட்களில் தன் சுய உருவப்பட ஓவியத்தில் பயன்படுத்தினார். ‘இரட்டை ஃப்ரைடா’ ஓவியம் காலோவின் மன அழுத்தத்தை ஆழமாகப் பதிவு செய்தது. காலோ மேலும் மேலும் மோசமடைந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.

1953ஆம் ஆண்டு மெக்சிகோ கண்காட்சியில் தன் ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் ஆசையில் படுத்த படுக்கையாக ஆம்புலன்ஸில் ஏறி வந்து கண்காட்சி அரங்கின் மத்தியில் படுத்துக் கொண்டார். ஓவியங்களோடு தானும் ஓர் ஓவியமாக அங்குக் காட்சிப்படுத்தப்பட்டார்.

அதற்குப்பின் காலோ வெகுநாட்கள் உயிரோடில்லை. 1954ஆம் ஆண்டு தான் பிறந்த அதே வீட்டில் காலோ மறைந்தார். ‘நான் பூக்களை வரைகிறேன். அதனால் அவை மரணத்தை வெல்கின்றன’ என்று அவர் சொன்னார்‌. ஆனால், அவர் தன் வேதனைகளை வரைந்தார். அதனால் வாழ்வை வென்றார்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in