

கடந்த அத்தியாயத்தில் வேலைக்கு செல்லாமலே சம்பாதிக்கும் வழிகள் குறித்து எழுதி இருந்தேன். அதனை படித்துவிட்டு சேலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெஸிந்தா, ‘மாணவர்களும் வேலைக்கு செல்லாமல் சம்பாதிக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா? பகுதி நேர வேலைக்கு மாணவர்கள் செல்லலாமா? அதனால் கல்வி பாதிக்கப்படுமா?' என சந்தேகம் எழுப்பினார்.
வெளிநாடுகளில் பெரும்பாலும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டே படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அங்கு 1 மணி நேர வேலை, 2 மணி நேர வேலை என மணி வாரியாக ஏராளமான பணிகள் இருக்கின்றன. இங்கு நாம் 8 மணி நேரம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தைவிட, அங்கு பகுதி நேர பணியின் மூலமாகவே சம்பாதித்திக்கிறார்கள்.
இங்கு பெரும்பணக்காரர்களாக இருக்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் படித்துக்கொண்டே வேலை செய்கிறார்கள். அங்கு அதிகமாக சம்பாதிப்பதுடன் எதிர்காலத்துக்கு சேமிக்கவும் செய்கிறார்கள். மீதிப் பணத்தை தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பியும் வைக்கிறார்கள்.
இதே பாணியில் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலும் பார்க்க முடிகிறது. 16வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனால், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களே சின்ன சின்ன வேலைக்கு செல்வதை பார்க்க முடிகிறது.
அதிலும் 10-ம் வகுப்பை முடித்த மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு செல்வதை அதிகமாக காண முடிகிறது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதில்லை. மாறாக, முன்பைவிட படிப்பிலும், வாழ்விலும் பொறுப்பாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பணத்தை கையாளும் பயிற்சி: தனிநபர் நிதி மேலாண்மையின் முதல் படி, பணத்தை கையாளும் கலையை கற்றுக்கொள்வது தான். குழந்தையாக இருக்கும்போதே, பிள்ளைகளின் கையில் பணத்தை கொடுத்து கடைவீதிக்கு அழைத்து செல்ல வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் எது? ஆடம்பர பொருட்கள் எது? என்பதை பிரித்து பார்க்க பழக்க வேண்டும்.
அதில் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்க சொல்லி, அதற்குரிய பணத்தை அவர்களின் கையாலேயே கொடுக்க வேண்டும். கடைக்காரருக்கு தர வேண்டிய பணம், அவரிடம் இருந்து மீதி பணத்தை சரிபார்த்து வாங்குவது ஆகியவற்றை அவர்களையே கணக்குப்போட்டு வாங்க சொல்ல வேண்டும். வீட்டுக்கு வந்த பின், செலவு கணக்கை எழுத சொல்லி, மீதி பணத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அடுத்த வாரம் வங்கிக்கு அழைத்து சென்று பணத்தை செலுத்துவது எப்படி? எடுப்பது எப்படி? காசோலையை நிரப்புவது எப்படி? வங்கியின் பயன் என்னென்ன? என்பதை விளக்க வேண்டும். இந்த மாதிரியான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் குழந்தைகள் பணத்தை கையாள கற்றுக்கொள்வார்கள்.
தேவையற்ற செலவுசெய்வதை குறைத்துக்கொண்டு, சேமிக்கவும் தொடங்குவார்கள். அந்த பணத்தைக்கொண்டு தங்களுக்கு தேவையான நோட்டு பேனாவை வாங்கிக் கொள்வார்கள். கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்களை தொலைக்காமல் பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள்.
கடைக்கு செல்வது, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது, நீர் இறைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளை குழந்தைகளே செய்யச் சொல்ல வேண்டும். அவர்கள் சரியாக செய்தால் உடனடியாக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சின்ன அளவிலாவது ஊதியம் வழங்க வேண்டும். அந்த பணத்தை சேமிக்கவும் கற்பிக்க வேண்டும்.
சேமிப்பது சம்பாதிப்பதற்கு சமம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறுவயதிலே பணத்தை சேமிக்கவும், வருமானம் ஈட்டவும் கற்க வேண்டும். வகுப்புக்கு செல்லும் நேரம் போக, மீதி நேரங்களில் வீடுகளுக்கு செய்தித்தாள் போடுவது, பால் பாக்கெட் விற்பனை செய்வது, செடிகள் விற்பனை செய்வது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்யலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையின் மீது பொறுப்பு அதிகரிப்பதுடன், பணத்தை கையாளவும் கற்றுக்கொள்வார்கள். அவர்களின் கல்வி கட்டணத்தை அவர்களே செலுத்திக்கொள்ள முடியும். முடிந்தால் எதிர்க்காலத்துக்கு கொஞ்சம் சேமிக்கவும் முயல்வார்கள்.
குழந்தைகளே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் அத்துணை எளிதாக செலவு செய்ய மாட்டார்கள். செலவு செய்யாமல் சேமிக்கும், ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிப்பதற்கு சமம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு :vinoth.r@hindutamil.co.in