போவோமா ஊர்கோலம் - 29: சீன எல்லையில்... டிஸோ ஏரிக்கரையில்... :

போவோமா ஊர்கோலம் - 29: சீன எல்லையில்... டிஸோ ஏரிக்கரையில்... :

Published on

பாங்காங் டிஸோ ஏரி பயணம் அவ்வளவு சுலபமானதாக அல்ல. இல்லாத சாலைகளில் பயணித்து, உருகிப் பெருகிவந்த பனிக்கட்டி நீரோடைகளைக் கடந்து, இருட்டும் வரையில் எந்த கிராமமும் கிடைக்காமல் நம்முடைய பயணம் இரவு எட்டு மணியைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

குளிர், பசி, பயணக்களைப்பு என சோர்ந்து போயிருந்தபோது தூரத்தில் மின்விளக்குகள் தொடர்ச்சியாக எரிந்ததைப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றோம். அதுவரை இருந்த களைப்பு எல்லாம் காணாமல் போனது. முழுவதுமாக இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை அடைய வேண்டும் என வேகமாகச் சென்றோம்.

நதியும்...ஏரியும்... ஊரின் எல்லையிலிருந்த ஹோட்டலில் தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை, அதனால் இங்கு தங்க வேண்டாம் என்று சொல்ல, நாமோ 'வசதியெல்லாம் வேண்டாம், தங்குவதற்கு இடம் தந்தால் போதும்' என்று சொல்லியும் இடம் இல்லை என்றார்கள்.

சரி ஊருக்குள் சென்று பார்க்கலாம் என்றபோது, டாடா ஏஸ் வண்டியில் இருவர் வந்து, 'இந்த பாதையிலா வந்தீர்கள்... பாதை சரி செய்துவிட்டார்களா...' என்று எங்களிடம் கேட்டதும் அதிர்ச்சியாகிவிட்டது. உள்ளூர்க்காரர்கள் என்னடா நம்மிடம் விசாரிக்கிறார்கள் என்ற ஆச்சரியத்தில் இருக்கும்போதே, 'கிட்டத்தட்ட எட்டு நாட்களாக இந்த பாதையில் வெள்ளப்பெருக்கெடுத்ததால் நாங்கள் யாரும் அந்த பக்கம் போகவில்லை. நீங்கள் தான் எட்டு நாளுக்குப் பிறகு அங்கிருந்து இங்கு வந்த முதல் ஆள்' என்று சொன்னதும் நாம் கடந்து வந்த பாதை மீண்டும் கண்முன் வந்துபோனது.

ஷியோக் நதியோரம் இருந்த அந்த ஊரின் பெயரும் ஷியோக் தான். அந்த வண்டியில் வந்தவர்கள் நம்மை அவர்களுடன் வரச்சொல்ல, நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். அவர்களுடைய காட்டேஜில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். அடித்த குளிருக்கு இதமாகச் சுட சுட உணவு பரிமாறினார்கள். மூன்று கம்பளி போர்த்தி தூங்கும் அளவுக்குக் குளிர் உயிரை ஊடுருவியது.

குளிரைத் தாண்டி களைப்பு நம்மைத் தூங்கவைத்தது. மறுநாள் காலை அந்த ஊரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். நாம் தங்கி இருந்த வீட்டுக்கு எதிரே ஷியோக் நதி ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது. நாம் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் குடும்பமாகச் சேர்ந்து விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வீட்டிலிருந்த குழந்தைகளோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, அங்கேயே காலை உணவை முடித்துவிட்டு பாங்காங் டிஸோ ஏரி நோக்கி நம் பயணத்தை மீண்டும் தொடங்கினோம்.

மறுநாளும் நம் பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. ஆனாலும் பாங்காங் ஏரியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பயணம் அவ்வளவு களைப்பாகத் தெரியவில்லை. பாங்காங் ஏரி அல்லது டிஸோ ஏரி. இந்தியா சீனா எல்லையில் அமைந்திருக்கிறது.

கிழக்கு லடாக் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. அவ்வப்போது இந்த ஏரி குறித்து செய்திகளில் படித்திருப்போம்.

இந்த ஏரியின் ஒரு பகுதியில் சீனா பாலம் காட்டுவதாகவும், அதன் செயற்கைக்கோள் படங்கள் எனவும் வெளியாகும். இந்த ஏரியின் முக்கால்வாசிப் பகுதி சீனாவிலும் கால்வாசி இந்தியாவிலும் இருக்கிறது. அதனால் இந்தியப் பகுதியில் எப்போதும் ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கும். இதையெல்லாம் நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கும்போதே சில்லெனக் காற்றுவீசியது. தூரத்தில் வானத்தை போல பரந்து விரிந்து காட்சியளித்தது பாங்காங் டிஸோ ஏரி.

- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in