

திண்ணையில் குழலியும் சுடரும் படித்துக் கொண்டிருந்தார்கள். மரக்கிளையிலிருந்த காக்கைகள் இடைவிடாமல் கரைந்துகொண்டிருக்க, பாட்டி எட்டிப் பார்த்தவாறு, இன்னைக்கு நம்ம வீட்டுக்கு யாரு வரப் போறான்னு தெரியலையே... என்றபடி வந்தமர்ந்தார்.
சுடர்: இன்னுமா பாட்டி இதையெல்லாம் நம்பிக்கிட்டிருக்கீங்க...
பாட்டி: எல்லாக் காலத்துலயும் இந்த மாதிரி நம்பிக்கை இருக்குடா... இன்னைக்கும் நாம நல்ல நேரம் பார்க்குறோம். சகுனம் பார்க்குறோம்ல. எல்லாரும் உங்க மாமா மாதிரி எதையும் நம்பாம இருப்பாங்களா...
குழலி: ஏன் பாட்டி, அப்பாவ வம்பிழுக்காம இருக்க மாட்டீங்க...
பாட்டி: நிறைய நம்பிக்கைகள் இருக்கு. ஆனா அதையெல்லாம் இப்ப யாரு பாக்குறா. தலையை விரிச்சுப் போட்ட பொண்ணப் பார்த்தாலே கெட்ட சகுனம்னு நினைப்பாங்க. இன்னைக்கு நிறையப் பொண்ணுங்க தலைய விரிச்சுப் போட்டுட்டுத்தான வெளிய கிளம்புறாங்க..
குழலி: பாட்டி, இந்தக் காலத்துப் பிள்ளைகளப் பார்த்தாலே உங்களுக்கு ஆகாது... அவரவர் விருப்பம் பாட்டி...
சுடர்: சரி சரி... சண்டை போடாதீங்க. குழலி அந்தக் காலத்துப் பாடல்கள்ல இந்த மாதிரி சகுனங்கள் பத்திப் படிச்சிருக்கியா...
குழலி: அகத்திணை, புறத்திணைப் பாடல்கள்ல சகுனங்கள் பத்தி நிறையத் தகவல்கள் இருக்கு. அதை நிமித்தங்கள்னு சொல்லியிருக்காங்க...
சுடர்: நிமித்தங்களா...
குழலி: ஆமா சுடர். நிமித்தங்கள்ல நல்ல நிமித்தங்கள், தீய நிமித்தங்கள்னு இருக்கு. நல்லது நடக்கும்னு காட்டுற குறிகள நன்னிமித்தங்கள்னும், தீய நிகழ்வுகள் நடக்கப் போகுதுன்னு காண்பிக்கிற குறியீடுகளத் தீநிமித்தங்கள்னும் சொல்வாங்க.
சுடர்: ஆமா, குழலி. சிலப்பதிகாரத்துல கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தது, கோவலனும் கண்ணகியும் மதுரையில மாதுரி வீட்டுல அடைக்கலமா இருந்தபோது, பால் திரிந்ததுன்னு வேற வேற சகுனங்கள் பத்திப் படிச்சிருக்கோம் தான.
குழலி: சங்க காலத்துலயும் இந்த மாதிரி நிமித்தங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்கு. போருக்குப் போறதுக்கு, விதைக்கறதுக்கும் விளைந்த தானியங்களை முதல் முதலாச் சாப்பிடறதுக்கும்கூட நல்ல நாளும் சகுனமும் பார்த்திருக்காங்க.
பிரிந்துபோன தலைவன் திரும்பி எப்ப வருவான்னு விரிச்சி கேட்குறது, பறவைகள், விலங்குகளோட சத்தங்களின் தன்மைகள வச்சு சகுனங்களப் பார்க்கிறது... இப்படிப்பல நம்பிக்கைகள்... பாட்டி சொன்ன மாதிரி காக்கை கரைஞ்சா, விருந்தினர்கள் வருவாங்கங்கிற நம்பிக்கை அப்பவும் இருந்திருக்கு.
விரிச்சின்னு சொன்னேன்ல... நாம ஒரு காரியத்தைப் பத்தி நினைக்கிறப்ப, அதைப் பத்தித் தெரியாத ஒருத்தர், நாம நினைக்கிற விஷயத்துக்குப் பொருந்துற மாதிரி சொல்ற நல்ல சொல்லைத்தான் விரிச்சின்னு சொல்றாங்க.
முல்லைப்பாட்டுல, தலைவனைப் பிரிஞ்சதலைவி, அவன் எப்ப வருவான்னு காத்திருக்காளாம். அப்ப பக்கத்துல ஆய்ச்சியர் குலப்பெண்ணொருத்தி கவலையோடு, தாயைக்காணோம்னு தேடிக்கிட்டிருந்த கன்னுக்குட்டியை மார்போடு அணைச்சு, மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போன கோவலர்கள் இப்பவே உன்னுடைய அம்மாவை அழைச்சிட்டு வந்திருவாங்க. நீ கவலைப்படாதேன்னு சொன்னாளாம்.
இதைக் கேட்டு, பக்கத்திலிருந்த பெண்கள் எல்லாம் தலைவி கிட்ட, பார்த்தியா... இந்தப் பெண்ணோட வாயிலிருந்த எவ்வளவு நல்ல சொற்கள் வந்ததுன்னு... நீ எதிர்பார்த்த பதில் இதுதானே... உன்னோட தலைவனும் சீக்கிரமாத் திரும்பி வந்துடுவான். நல்லோர் சொன்ன சொற்கள் பலிக்கும்னு சொல்லித் தலைவிய சமாதானப் படுத்தினாங்களாம்.
சுடர்: முல்லைப்பாட்டைப் பத்திச் சொல்லேன்.
குழலி: சங்க இலக்கியத் தொகுப்பை எட்டுத்தொகை, பத்துப் பாட்டுன்னு இரண்டு பெருந்தொகுப்புகளாப் பிரிக்கிறோம்ல. முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுல ஐந்தாவது நூலா இருக்கு. நப்பூதனார்ங்கிற புலவர் பாடினது. 103 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா வகையில அமைஞ்ச அக நூல். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது.
சுடர்: அக இலக்கியங்கள்ல தலைவனோட பெயர் வராதுன்னு சொல்வாங்களே...
குழலி: சரியான கேள்வி சுடர். தலைவனோட பெயர் பாட்டுல குறிப்பிடப்படல. அதனால அகப்பாட்டாச் சொல்றாங்க. முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல்.
சுடர்: நேரமாகுது குழலி... நாளைக்குப் பேசுவோம்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com