

காலநிலை என்பது பொருளாதாரத்தை விடவும் உலகமயமானது. இதன் தாக்கம் முதலில் சுற்றுச்சூழல் அறிவியல் சார்ந்தது. இதில் சந்தேகமே இல்லை. இதைத் தடுப்பதற்கு எத்தகைய முன்னெடுப்புகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை நாம் விரிவாகவே பார்த்துவிட்டோம்.
ஆனால், காலநிலை மாற்றம் அறிவியல் பிரச்சினை மட்டும் கிடையாது. அதன் பாதிப்பு பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது. அரசியலை நிர்ணயிக்கிறது. இறுதியாக அறம் சார்ந்த சிக்கலாகவும் விரிவடைகிறது.
காலநிலை மாற்றம் எல்லா சமநிலைகளையும் சிதைக்கிறது. காற்று, நீர், மண், காடுகள், விலங்குகள், தாவரங்கள், கடல் நீரோட்டங்கள், கடற்கரை ஓரங்கள், விவசாயம், சொத்து மதிப்பு, சர்வதேச உறவு, சமூகங்கள் என எல்லாமும் காலநிலைக்கு உட்பட்டே மாற்றம் கொள்கிறது. இதையெல்லாம் தாண்டி காலநிலை மாற்றம் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் அதிகம் தண்டிக்கிறது.
வளர்ச்சியடைந்த நாடுகள்தான் உலகவெப்பமயமாதலுக்குக் காரணமாக இருக்கின்றன. அவைதான் அதிக அளவிலான கரியமில வாயுவை உமிழ்கின்றன. ஆனால், இதன் பாதிப்பு வளர்ச்சி குன்றிய நாடுகளில்தான் அதிகம் எதிரொலிக்கின்றன.
இந்த நாடுகள் வறண்ட நிலப்ரப்பிலோ, கடல் மட்டத்துக்கு அருகிலேயோ இருந்தால் முடிந்தது விஷயம். காலநிலை மாற்றத்தின் தக்கம் வளரும்நாடுகளில்தான் 75-80% இருக்கும்என்று உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான பேரழிவுகள் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 3600 கோடி டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார சேதங்களை ஆசிய நாடுகள் சந்தித்துள்ளன.
நாடுகள் அளவில் மட்டுமல்ல, மதம், ஜாதி, முதலாளி, தொழிலாளி, பெண்கள், குழந்தைகள் என இதன் ஆதிக்கம் நுண்ணிய பரவலைக் கொண்டுள்ளது.
வளர்ச்சியடைந்த தேசங்களிலேயே வாழ்ந்தாலும் குறைந்த வருமானம் ஈட்டுகிற பிரிவினர், பழங்குடி மக்கள்,பெண்கள், குழந்தைகள் காலநிலைமாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் தாக்கம் எதிர்காலத்தில் சமூக - பொருளாதார சீர்குலைவுகளாக வெளிப்படும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர். தொடர்புக்கு: tnmaran25@gmail.com