மகத்தான மருத்துவர்கள் - 57: மக்களை குணப்படுத்த சேமிப்பையெல்லாம் கொட்டிக் கொடுத்தவர்

மகத்தான மருத்துவர்கள் - 57: மக்களை குணப்படுத்த சேமிப்பையெல்லாம் கொட்டிக் கொடுத்தவர்
Updated on
2 min read

ஒருநாள் காலைப் பொழுதில் தான் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை ஏதோ சில காரணங்களால் தாமதமாக, அது தயாராகும்வரை, வெறுமனே இருப்பானேன் என்று பக்கத்து அறுவை அரங்கை பார்வையிடச் செல்கிறார் டாக்டர் டெம்டன் இராக் உத்வாடியா. அங்கே அவரது சக மருத்துவரான மகப்பேறு மருத்துவர் நர்கீஸ் மோட்டேஷா, 'டயக்னாஸ்டிக் லேப்ராஸ்கோப்பி' முறையில் ஒரு பயனாளருக்கு கருப்பை பிரச்சினைகளை கண்டறிவதைப் பார்த்து ஆர்வமாகிறார்.

முதன்முதலாக ஒரு சிறுதுளை மூலம் வயிற்றுக்குள் இருந்த அனைத்து உறுப்புகளையும் தெளிவாகவும், சற்றுப் பெரிதாகவும் (magnified) பார்க்க முடிவதைக் கண்ட டாக்டர் உத்வாடியாவுக்கு, ஏன் இதை வெறும் பரிசோதனையாக மட்டும் செய்ய வேண்டும், இதையே வைத்து நோய்களை குணப்படுத்தும் அறுவை சிகிச்சைகளை செய்யக்கூடாது என்ற கேள்வி எழுந்ததும், அதற்கான வழிமுறைகளைத் தேடத் தொடங்கினார்.

உறுதி கொண்ட நெஞ்சம்: ஆனால், அவர் நினைத்ததுபோல் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. உபகரணங்களின் விலையைப் பார்த்தபோது மருத்துவமனைகள் எப்போதும் போல நிதியைச் செலவு செய்வதில் நெருக்கடியில் இருக்க, தனியார் மருத்துவமனைகளோ உதவ மனமின்றி இருந்தன‌.

ஆனாலும் அதை அவர் அப்படியே விடுவதாயில்லை. லேப்ராஸ்கோப்பி கருவிகளைத் தயாரித்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டோர்ஸ் நிறுவனத்தை தானே தொடர்புகொண்டார். அந்த நிறுவனத்தின் தலைவர் கார்ல் ஸ்டோர்ஸ் (Karl Storz) உத்வாடியாவை ஜெர்மனிக்கு வந்து பேசும்படி அழைப்பு விடுத்தார்‌.

உடனடியாக, அந்த லேப்ராஸ்கோப்பி கருவிகளை வாங்க மனைவி கோர்ஷெட்டையும் அழைத்துக்கொண்டு, தனது சொந்த செலவில் 1972 ஆம் ஆண்டு ஜெர்மன் கிளம்பிவிட்டார் டாக்டர் உத்வாடியா.

நினைத்ததை விட விலை அதிகமாக இருந்ததும், தயாரிப்பு நிறுவனம் தனது விலையில் இருந்து இறங்கி வரத் தயாராக இல்லாததும் கலக்கத்தை உண்டாக்கியது. இருப்பினும் மக்களுக்குப் பயன்படும் என்பதால் தனது சேமிப்பு முழுவதையும் கொட்டி அந்த உபகரணங்களை விலைக்கு வாங்கினார் டாக்டர் உத்வாடியா.

திரும்பி வரும்போது சுங்க வரி கட்டக்கூட தன்னிடம் காசு இல்லாததால் மனைவியின் புடவை மடிப்புக்குள் மறைத்து வைத்து அவற்றைக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஆசியாவின் முதல் சிகிச்சை: கொண்டுவந்த உபகரணங்களை வைத்து ஆரம்பத்தில் தான் பணிபுரிந்த ஜே.ஜே. மருத்துவமனையில் காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வெறும் பயாப்ஸி பரிசோதனைக்கு மட்டும் பயன்படுத்தினார்.

அதன் மூலமாகவே பல ஆயிரம் நோயாளிகளைக் காப்பாற்றினார். பிற்பாடு அக்கம்பக்கமிருந்த மருத்துவமனைகளுக்கும் அவற்றை தனது சிறிய பிரீமியர் பத்மினி காரில் தூக்கிக் கொண்டு போய் 3000-த்திற்கும் மேலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு நோயாளிகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

இதையெல்லாம் குறித்து 'சர்ஜிகல் எண்டோஸ்கோபி' எனும் சர்வதேச பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரை, வளரும் நாடுகளின் மருத்துவத்தில் அது ஒரு பெரிய கவனிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. அதிலும், ஒரு தனிமனிதனான என்னால் ஒரு சிறு கருவியை வைத்துக் கொண்டு இத்தனை உயிர்களைக் காக்க முடியும் என்றால்‌, இந்த நாட்டின் அரசு இதை முன்னெடுத்துச் செய்தால் எத்தனையோ ஆயிரம் உயிர்கள் காக்கப்படும் அல்லவா? என்றுஅவர் எழுப்பிய கேள்விநாடெங்கும் பலத்த அதிர்வையும் உண்டாக்கியது.

பித்தப்பை நோய்களுக்கு ஓபன் சர்ஜரி எனும் வயிற்றை அறுத்துத் திறந்து, எடுத்துத் தைக்கும் வழக்கமான அறுவை சிகிச்சை முறையை மாற்றி, டாக்டர் உத்வாடியா 1991, மே மாதம் 31ம் தேதியன்று ஆசியாவின் முதல் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை அகற்றல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார்.

பல முன்னோடி மருத்துவர்களே அவருக்கு எதிராகப் பேசியபோதும், அறுவை சிகிச்சை தொடங்கும்போதே பல சிக்கல்கள் எழுந்தபோதும், உறுதியுடன் நின்று, முழுமையாக அறுவை சிகிச்சையை செய்துமுடித்தார் டாக்டர் உத்வாடியா.

அந்த மேஜையில் தான் அறுவை சிகிச்சை முதன்முறையாக நிகழ்ந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே அதை ஒரு நூறுமுறையாவது தனது மனதிற்குள் நிகழ்த்திப் பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ள டாக்டர் உத்வாடியா, அதையே மற்ற மருத்துவ மாணவர்களுக்கும் அறிவுரையாகக் கூறுகிறார். எண்ணற்ற முறை‌ வீட்டுப்பாடம் செய்பவர் எந்த ஒரு தேர்விலும் தோற்பதில்லை என்று அவர் சொல்வது மருத்துவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பாடம் தானே மாணவர்களே!

இப்படி பல போராட்டங்களுக்குப் பிறகு,1971 ஆம் ஆண்டு தொடங்கிய உத்வாடியாவின் லேப்ராஸ்கோப்பி குணப்படுத்தும் அறுவை சிகிச்சைப் பயணம், தொடர்ந்து மாநிலம் தாண்டி, தேசிய அளவிலும், பின்னர் சிங்கப்பூர், மியான்மர், சீனா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், நேபாளம், கென்யா, எகிப்து என நாடுகள் கடந்தும் எதிரொலித்தது. அது, பல்லாயிரம் மருத்துவர்களை லேப்ராஸ்கோப்பியைக் கற்றுக்கொள்ளத் தூண்டியது.

(டாக்டர் உத்வாடியா மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in