

கதை எழுதும் பயிற்சியில் பல படிகள் தாண்டி, நம்மால் புதிய கதை எழுத முடியும் என்ற உறுதி பலருக்கும் வந்திருக்கும். சரி. புதிய கருவை யோசித்து, இதுவரை கற்ற விஷயங்களை உள்ளடக்கி புதிய கதையை எழுதிவிட்டீர்கள். உடனே, அதைப் பத்திரிகைக்கு அனுப்பி விடலாமா?
கூடாது. அதற்கு முன் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். கதை கரு நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால் ஓர் உணர்ச்சி வேகத்தில் கதையாக எழுதியிருப்போம். கதை கரு சரியாக வெளிப்பட்டிருக்கிறதா… செய்திக் கட்டுரைபோல அல்லாமல் கதைத் தன்மையோடு இருக்கிறதா ஆகியவற்றை உடனே கணித்து விடமுடியாது.
திரும்ப வாசித்தல்: கதை எழுதி ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் வாசித்துப் பாருங்கள். நீங்கள் மனத்தில் நினைத்தவை கதையாக மலர்ந்துள்ளனவா என்று படித்துப் பாருங்கள். அடுத்து, யாரோ ஒருவர் எழுதிய கதையை நீங்கள் படிப்பதைப் போல படியுங்கள்.
அதாவது, உங்கள் படைப்பு என்று நினைக்காமல் ஏதேனும் குறை தென்படுகிறதா என்பதை ஆராயும் விதமாகப் படியுங்கள். அப்படித் தென்படும் குறைகளை வட்டமிட்டு, காரணங்களை எழுதுங்கள். அந்தக் குறைகளைச் சரிசெய்து, அந்தப் பகுதிகளை மீண்டும் திருத்தி எழுதுங்கள்.
காலக்குழப்பம், மனிதர்களின் பெயர்கள், யாரையும் இழிவுப்படுத்தும் சொற்கள் இல்லாமல் உள்ளதா… உள்ளிட்ட விஷயங்களை மறுபடியும் ஆழ்ந்து படித்து சரி செய்யுங்கள்.
பிழைகள் தவிர்: திருப்தியாக இருக்கிறது என்று நினைத்தால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு பிழைகளை ஆராய்ந்து நீக்குவது. ஒன்று, சொற்றொடர் பிழை. அடுத்தது எழுத்துப் பிழை.சொற்றொடர் என்பது எழுவாய், பயனிலை போன்ற இலக்கணப் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது.
மிக நீளமான சொற்றொடர்கள் இருந்தால் அவற்றைப் பிரித்து இரண்டாக எழுதுங்கள். அப்போதுதான் வாசிப்புக்கு எளிதாக இருக்கும். எழுத்துப் பிழை என்பது, ஒவ்வொரு சொற்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். பெரிய சொற்களாக இருந்தால், பொருள் மாறாமல் வேறு சிறிய சொல்லைப் பயன்படுத்த முயல வேண்டும்.
யாருக்கு அனுப்புவது? - கதை எழுதத் தொடங்கும் முன், இது எந்த வயது சிறுவர்களுக்கு என்பதை மனதில் வைத்து எழுத வேண்டும் என்று பார்த்தோம் இல்லையா? அதுபோல, இந்தக் கதையை எந்த வகை பத்திரிகைக்கு / இதழுக்கு அனுப்புவது என்பதிலும் கவனம் தேவை.
சிறுவர்களுக்கு ஏற்ற கதையை பெரியவர்களுக்கான படைப்புகள் மட்டுமே வரும் ஒரு பத்திரிகைக்கு அல்லது வார இதழுக்கு அனுப்பக்கூடாது. சிறுவர்களுக்கான இதழ் அல்லது பத்திரிகைக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
சரி. எந்த இதழுக்கு அனுப்புவது என்று முடிவுஎடுத்து விட்டீர்கள். அடுத்து, அந்த இதழில் இதுவரை வெளிவந்த கதைகளை வாசிக்க வேண்டும். அந்தக் கதைகளுக்கு எத்தனை பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தன… அல்லது எவ்வளவு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.
ஏனெனில், அந்தப் பத்திரிகையில் அதிகப்பட்சம் 500 சொற்கள் கொண்ட கதைக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நீங்கள் 1500 சொற்கள் உள்ள கதையை அனுப்பினால், பிரசுரிக்க மாட்டார்கள். அந்தளவுக்கு நாம் கதையைச் சுருக்கி அனுப்ப வேண்டும் அல்லது 1500 சொற்கள் கொண்ட கதையைப் பிரசுரிக்கும் இதழைத் தேட வேண்டும்.
இப்போது எல்லாம் பெரும்பாலும் மின்னஞ்சல் வழியேதான் கதைகள் அனுப்பப்படுகின்றன. நீங்கள் அவ்வாறு அனுப்பினால், Word ஃபைலில் Unicode எழுத்துருவில் அனுப்புவது நல்லது. வேறு சில விஷயங்களையும் அடுத்த வாரம் பார்ப்போம்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com