கதை கேளு கதை கேளு 57: தேநீரில் கலந்திருக்கும் இயற்பியல்

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
Updated on
2 min read

மனிதன் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாகவும், ரசனையோடும் வாழ்வதற்கு அறிவியலின் பங்கு பெரிது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நம் தேவைகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து நடக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

ராமநாதபுரம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைஇயற்பியல் ஆசிரியராக பணிபுரிகிறார் பெர்ஜின். இயற்பியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்கள் எளிதில் விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் இப்புத்தகத்தில் இயற்பியல் சூத்திரங்கள் மற்றும் தத்துவங்களை விளக்கியுள்ளார்.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அறிவியலை அறிந்துகொள்ளும்போது அச்செயல்பாட்டை ரசித்துச் செய்யவும், செம்மையாகச் செய்யவும் நம்மால் இயலும். எடுத்துக்காட்டாக தினமும் நாம்அசதியைப் போக்கிக்கொள்ள, ஆர்வமுடன் அருந்தும் தேநீர், ஒரே விதமானதேயிலைத் தூளுடன் தயாரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையுடன் இருப்பது ஏன்? இதில் ஒளிந்துள்ள அறிவியலை அறிந்துகொள்ளும்போதே நம்மால் தினம் தினம் தேநீரை சுவையானதாக மாற்றிக் கொள்ள முடியும்.

பிரவுனியன் இயக்கம்: குளிர்ந்த நீரில் தேயிலைத்தூளைப் போட்டு காய்ச்சி தேநீர் தயாரிப்பது சுவையை தருமா? சூடான கொதிக்கும் நீரில் தேயிலைத் தூளை போட்டு தேநீர் தயாரிப்பது சுவையைத் தருமா? 1827-ல் ராபர்ட் பிரவுன் என்ற தாவரவியல் அறிஞர் பூக்களில் உள்ள மகரந்தத் துகளை தண்ணீரில் போடும்போது தண்ணீர் மூலக்கூறுகள், மகரந்தத் துகளை நகர்த்திச் செல்வதைக் கண்டுபிடித்தார்.

இந்த இயக்கம் பிரவுனியன் இயக்கம் என்று அழைக்கப்பட்டது. பிரவுனியன் இயக்கத்தால் தேயிலை துகள்களை, நீர் மூலக்கூறுகள் வேகமாக நகர்த்திச் செல்வதால்தான் நீரோடு தேயிலை சரியான விகிதத்தில் கலக்கிறது. சரியான விகிதத்தில் கலக்கும்போது சுவையும் அதிகரிக்கிறது.

யங் குணகம்: இயற்பியல் பாடத்தில் யங் குணகம் வரையறை இருக்கிறது. ஆனால் யங்குணகத்தை நாம் ஏன் படிக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. அன்றாட வாழ்வில் பயன்படும் அறிவியலை அறிந்தால், கற்றல் இனிமையாகும்.

ஒரு கான்கிரீட் பாலம் வழியாக அதிகஎடையுள்ள வாகனங்கள் கடக்கும்போது பாலத்தின் நடுப்பகுதி வளைந்து உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த கான்கிரீட் பாலத்தின் வழியாக கம்பிகளை செலுத்தினால் பாலம் வளைந்து விடாமல் பாதுகாக்கப்படும். இந்தக் கம்பி எவ்வளவு விசையை தாங்கிக் கொள்ள முடியும் என்பதைக் கண்டுபிடிக்க யங் குணகம் பயன்படுகிறது.

கிரேன் போன்ற வாகனங்களில் மிகப்பெரிய எடையுள்ள பொருட்களை தூக்குவதற்கு பயன்படும் கம்பிகளின் தடிமனை யங்குணகம் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். மலையேறும் வீரர்கள் பயன்படுத்தும் கயிறுகள் எந்தளவு விசையைத் தாங்கிக் கொள்ளும் எனக் கண்டுபிடிக்க பயன்படுகிறது.

இப்படி ஒரு விஷயத்தை புரியும்படி ஏராளமான நிஜ வாழ்க்கை சம்பவங்களோடு தொடர்பு படுத்தி சொல்லும் போது நிச்சயமாக மாணவர்கள் பாடப்புத்தகத்தை வெறுக்க மாட்டார்கள். மாறாக அவர்களுக்கு பாடத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும் .

பதில் தெரியுமா? - வீட்டில் கண்ணாடி தவறி விழுந்தால், தன் கூர்முனைகளால் நம் கைகளைப் புண்ணாக்கும். ஆனால் வாகனங்களில் விபத்தின்போது உடையும் கண்ணாடி அவ்வாறு காயங்களை ஏற்படுத்துவதில்லை. எப்படி? ஏன்? பென்சில்களில் உள்ள HB க்கு அர்த்தம் தெரியுமா? மழை பெய்யும்போது மின்சார ரயிலில் பயணிகளுக்கு மின்னதிர்ச்சி ஏற்படாமல் இருப்பது எப்படி?

காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது? கார் டயர்கள் ஏன் மஞ்சள்,சிவப்பு, பச்சைஎன கலர் கலராக இல்லாமல் கருப்பு நிறத்திலேயே உள்ளன? ஐஸ்கட்டி எவ்வாறு மிதக்கிறது? குழந்தைகள் விரும்பி உண்ணும் சிப்ஸ் பாக்கெட்டில் நிரம்பியுள்ள நைட்ரஜன் காற்றை வெளியேற்றினால் என்ன ஆகும்? ஈபீள் கோபுரம் வெயில் காலங்களில் வளர்கிறது என்கிறார்களே? உண்மையா? இப்படி ஏராளமான அறிவியல் வினாக்களை எழுப்பி, அவற்றுக்கு எளிமையான உதாரணங்கள் மூலம் அழகு தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

அறிவியல் நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய தேவையை பாரதியாரே சொல்லிவிட்டார். பாடப்புத்த கங்களை விரும்பச் செய்ய, அறிவியல் செய்திகளை அழகு தமிழில் விளக்கம் கூற வேண்டியது அத்தியாவசிய தேவை. மாணவர்களும், ஆசிரியர்களும் இப்படியான தமிழ் அறிவியல் நூல்களை வாசிப்பது அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன், சீரான சமூக முன்னேற்றத்தையும் உருவாக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in