

உடலின் உயரத்தை மீட்டர்/சென்டிமீட்டரில் அளந்துவிட்டோம். கைவசம் நம்மிடம் இருக்கும் அளவுகோள் வைத்து எப்படியோ சமாளித்துவிட்டோம். அரை அடி ஸ்கேல் வைத்தும்கூட ஒரு சுவரில் 200 சென்டி மீட்டர் வரையில் உயரத்தை வரைந்து அளக்கலாம். ஆனால் எடையை எப்படி அளப்பது? எடை அளக்கும் கருவிகளை எங்கெல்லாம் பார்த்துள்ளீர்கள்? மளிகைக் கடைகளில், காய்கறி கடைகளில், இறைச்சிக் கடைகளில், மருத்துவமனைகளில் எடை அளக்கும் கருவிகளைப் பார்த்திருக்கலாம்.
ஒவ்வொரு இடத்திலும் அளவுகள் மாறும். துல்லியத்தன்மையும் மாறும். எல்லா இடங்களிலும் இப் போது பெரும்பாலும் டிஜிட்டல் எடைக்கருவிகள் வந்துவிட்டன. நம் உடல் எடையை எப்படி அளப்பது? அதற்கு மருத்துவமனைகளில் பார்த்த கருவிகள்தான். சரி மொத்த உடல் எடையையும் அளந்தாச்சு, இதில் இதயத்தின் எடை எவ்வளவு? இதர உறுப்புகளின் எடை எவ்வளவு? அதை எப்படி அளந்து சொல்கின்றனர்? எடைக்கான அளவீடு கிலோ கிராம் என நன்றாகத் தெரியும்.
நம் எடையை மில்லி கிராம், கிராம்களில் சொல்லலாமா? அது மிகப்பெரிய எண்ணாக வரும். கிலோ கிராம் என்பதே சரியாக இருக்கும். உயரத்தைப் போலவே உடல் எடைக்கும் ஒவ்வொரு வயதில் என்ன எடை இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.
இதயத்தின் எடை எவ்வளவு? அதை எப்படி அளக்கின்றனர்? அல்லது கணக்கிடுவார்களா? தோராயக் கணக்குதான் சொல்ல இயலும். அதும் ஒரு பெண்/ஆணின் இதயத்தின் எடைஎவ்வளவு என எப்படி தோராயமாகக் கண்டுபிடித்திருப்பார்கள்? இறந்த உடலில் இருந்து பரிசோதனை செய்துதான் அந்த எடையையும் தோராயமாகக் கண்டுபிடித்தனர்.
மேலும் இறந்த உடலுக்கும் உயிருள்ள உடலுக்கும் வேறுபாடு இருக்கும். பாலினம், வயது, நோய், நிலப்பகுதி, உணவுப்பழக்கம் கொண்டு இது மாறுபடும். ஒவ்வொரு உறுப்பும் அப்படித்தான்.
உள்ளுக்குள்: உங்கள் எடை 50 கிலோகிராம் என வைத்துக் கொள்வோம். இது எதனுடைய கூட்டுத்தொகை? உடலின் எலும்புக்கூடு (Skeleton), தசைகள் (muscles), உடல் உறுப்புகள் (organs), கொழுப்பு (fat), மற்றும் திரவம். ஒவ்வொரு மனித உடலுக்கும் இதன் விகிதாசாரம் மாறுபடும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடும். ஆணின் சராசரி இதயத்தின் எடை 365 கிராம், பெண்ணின் சராசரி இதயத்தின் எடை 312 கிராம். இது பல இறந்த உடலிலிருந்து கூறாய்வு செய்யும்போது எடுக்கப்பட்டு அளக் கப்பட்ட கணக்கு.
நம் உடலில் எலும்புகள்தான் அதிக எடை கொண்டதாக இருக்கும் என நினைப்போம். அது உடல் எடையில் 15% இருக்கலாம். நம்ம எடை 50 கிலோ என வைத்தால் 15% என்பது எவ்வளவு?
50 X 15/100 = 7.5 கிலோகிராம்.
1000 கிராம் = 1 கிலோ கிராம் ; ஆகவே 7.5 கிலோ கிராம் என்பது 7500 கிராம். இதே சதவிகிதம்தான் பிறந்த குழந்தைக்கும் இருக்குமா? பிறந்த குழந்தையில் உடலில் இருப்பவை மொத்தம் 300 எலும்புகள். வளர்ந்த மனிதரின் உடலில் இருப்பவை எத்தனை எலும்புகள் தெரியுமா? 206 எலும்புகள். ஆஹா சுமார் 100 எலும்புகள் எங்கே போயின? சில எலும்புகள் இணைந்துகொள்ளும். வளர வளர இது நிகழும்.
அதிக எடை: உள் உடல் உறுப்புகளில் அதிக எடை கொண்ட உறுப்பு எது தெரியுமா? கல்லீரல் (Liver). இது இதயத்தைவிட கிட்டதட்ட 4.5 மடங்கு பெரியது. இரண்டு நுரையீரலின் எடையை விடக் கூடுதல் எடை கொண்டது. சரி உங்கள் வீட்டில் இந்த எடை இருக்கு? பூமியில் எல்லா இடங்களிலும் இதே எடைதான் இருப்போமா? நிலாவில் எடை குறைவாக இருப்போம் என்கின்றார்களே. இது கணித கணக்கா? இயற்பியல் கணக்கா? எப்போதும் கணக்கு மட்டுமே அல்ல, இயற்பியலும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும்.