

மாலை பள்ளியை விட்டு வந்த முகுந்தன் குளத்துக்குச் சென்று மரத்தில் உள்ள பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அந்த மரத்தடியில் பெரியவர் சில்லென்ற காற்றை அனுபவித்துப் படுத்துக் கொண்டிருந்தார். பழம் பறிக்க எறிந்த கல் அவரது நெற்றியில் பட்டு துடித்து எழுந்தார். கோபப்படாமல் சாந்தமாக அறிவுரை வழங்கினார்.
மீண்டும் படுத்து உறங்கலானார். முகுந்தனோ அவரை வம்புக்கு இழுக்க ஆசைப்பட்டு ஒரு மீனைப் பிடித்து வந்து அவர் மேல் போட்டு விட்டு ஒன்றும் அறியாதவன் போல் மறைந்து கொண்டான். பெரியவர் என்னடா தூங்க முடியவில்லை என்று அலுத்துக் கொண்டே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார் எல்லாம் அந்த பொடியனின் வேலையாக தான் இருக்கும் என்று குளத்தில் இறங்கி கால் கழுவிக் கொண்டு இருந்தார்.
அப்போது முகுந்தன் பாம்பு பாம்பு என்று கத்திக் கொண்டே மரத்தில் ஏறினான். பெரி யவர் பாம்பை அடித்து விரட்டினார். இருட்ட தொடங்கியது. வீட்டிற்கு போகப் பயந்து கொண்டு முதியவரிடம் ஐயா என்னோடு துணைக்கு வறீங்களா? என்று கேட்டான். ஒன்றும் நடவாது போல், சரி உங்க அம்மா தேடிகிட்டு இருப்பாங்க வா போகலாம் என்றார் பெரியவர்.
ஊருக்குள் சிறுவனின் வீடு நோக்கி அவனை அழைத்துச் சென்றார். முகுந்தனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. ஐயா என்னை அழைத்து வந்ததுக்கும் நான் செய்த தீங்கை பொறுத்துக் கொண்டதற்கும் நன்றி. இனிமேல் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே அம்மாவைப் பார்த்து ஓட்டம் பிடித்தான்.
தனக்கு துன்பம் செய்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பொறுத்துக் கொண்டு தீமை செய்தவருக்கும் நல்லதை செய்தவரை தான் வள்ளுவர்
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
என்கிறார்
அதிகாரம்: இன்னா செய்யாமை
குறள்: 312
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்