திறன் 365 - 27: சிக்கலான கருத்துகளை சுலபமாக குழந்தைகள் மனதில் ஏற்றலாம்!

திறன் 365 - 27: சிக்கலான கருத்துகளை சுலபமாக குழந்தைகள் மனதில் ஏற்றலாம்!
Updated on
2 min read

வியப்பு, மகிழ்ச்சி, கற்பனைத் திறன் ஆகியவற்றின் கூட்டு வடிவம் குழந்தைகள். அவர்களுக்கு வடிவமைக்கப்படும் செயல்களும் வியப்புக்குரியதாகவும், மகிழ்ச்சி நிரம்பியதாகவும், கற்பனைக்கு இடமளிப்பதாவும் இருத்தல் நலம். அது வகுப்பறையை மகிழ்ச்சிக்குரிய இடமாக மாற்றும்.

நாடகம் சிக்கலான கருத்துக்களை ஆழமாக புரிந்து கொள்ள உதவுகிறது. நாடகத்தைச் சாத்தியபடுத்த குழந்தைகளை ஆர்வப்படுத்த வேண்டும். அதன்வழி நாடகத்தில் நடிக்க குழந்தைகளை ஊக்கப்படுத்த முடியும். பூனை, யானை, ஆடு, மாடுபோன்ற விலங்குகளின் பெயரைத்தாளில் எழுதி, சுருட்டி வைத்திருக் கவும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தாளை எடுக்க வேண்டும்.

அதில் எழுதியுள்ள விலங்கைபோல் சத்தம் எழுப்பி, நடித்துகாட்டவும். இப்படிச் செய்வது நாடகத்தில் நடிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி, கற்பனைக்கு தீனிபோட்டு, வகுப்பறையை கல கலப்பாக்கும். குழந்தைகளை இரு குழுவாகப்பிரிக்கவும். அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களைப் போல்செய்து காட்டக் கூறவும்.

அம்மா, அப்பா, மாமா, சித்தி, ஆசிரியர், நண்பர், தலைமையாசிரியர், ஆயா, டிரைவர்,மருத்துவர் என பல நபர்களைப்போல் நடித்துக் காட்டவும். சொந்தமாக வசனங்கள் பேச அனுமதிக்கவும். வித்தியாசமான தகவல்கள் கிடைக் கும். குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பர். இதன்வழி படைப்பாற்றல் திறனை வளர்த்தெடுக்கலாம்.

குழந்தைகளின் குரலை வளப்படுத்தும் பயிற்சி மற்றும் உடல் அசைவுக்கான பயிற்சி கொடுக்க வேண்டும். குரலை வளப்படுத்த ஒவ்வொரு குழந்தையும் வளைந்து தரையை தலை தொடும்படி குனிந்து நிற்கச் செய்யவும். பின் மெதுவாக குரல் எழுப்பி, குரலை உயர்த்திக் கொண்டே நிமிரச் செய்ய வேண்டும்.

அதேபோல் நிமிர்ந்த நிலையில் இருந்து குரலை குறைத்துக் கொண்டே குனியச் செய்யவும். இது குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன்,குரல் வளத்தை மேம்படுத்த முடியும். குழந்தைகளுக்கு வகுப்பறையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி கொடுக்கவும். அப்பகுதிகளில் சுதந்திரமாக நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஒருவரை ஒருவர் இடிக்க கூடாது.

ஆனால், எதிரில் ஒருவரைப் பார்த்தால் அவரின் கண்களைப் பார்த்து , புன்னகைத்தபடி "குட்மார்னிங்" கூறவேண்டும். வகுப்பறையிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் இச்செயல்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும். இச்செயல்பாடு குழந்தைகளுக்கு மேடையை முழுமையாக பயன்படுத்த வும், கண்ணைப் பார்த்து சத்தமாக வசனத்தைப் பேசவும் உதவும். மேலும், இது குழு செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

பாடப்பகுதியில் உள்ள உரைநடை பகுதியை நாடகமாக்கலாம் என குழந்தைகளிடம் கூறுங்கள். நான், நான் என போட்டிப்போட்டு பங்கு பெற ஆர்வம் காட்டுவார்கள். கதாபத்திரங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். வசனங்கள் சொந்தமானவையாக இருக்க அனுமதியுங்கள்.

கதையின் காட்சிகளை அவர்களே அமைத்துக் கொள்வார்கள். குழந்தைகளில் ஒருவரை இயக்குநராக அனுமதியுங்கள். ஒவ்வொரு காட்சியும் சிறப்பானதாகும். நாடகத்தை காலை பிராத்தனை நேரத்தில் அரங்கேற்றம் செய்யவும். பள்ளியின் அனைத்து மாணவர்களும் கண்டுகளிக்கச் செய்யவும். அதுவே, குழந்தைகளுக்கான அங்கீகாரம்.

நாடகம் கற்றலை மிகவும் சுவாரசியமாகவும், மறக்க முடியாததாகவும் ஆக்குகிறது. இது மாணவர்களை உள்ளடக்கத்துடன் தீவிரமாக ஈடுபடவும், தகவல் தொடர்பு திறன்களை வளர்க்கவும், சிக்கலான கருத்துக்களை ஆழமாக புரிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை ஊக்குவிப்பதன் மூலம் நாடகம் கற்றலுக்கு உதவுகிறது. நாடகம் குழந்தைகளிடம் பச்சாதாபம், குழு மனப்பான்மை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. நீங்களும் உங்கள் வகுப்பறையில் முயற்சித்து பாருங்க.

- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in