

ஒரு ஏரி ரொம்ப பெருசா இருக்கு. ரொம்பி வழியற அளவுக்கு தண்ணியும் இருக்கு இதைப் பார்த்திட்டு என்ன சொல்லுவீங்க? ‘அப்ப்ப்பா..! எவ்வளவு பெருசு எவ்வளவு தண்ணி… கடல் மாதிரில்ல இருக்கு!’ சரியா சொன்னீங்க. உண்மையிலேயே இப்படி கடல் போல ஒரு ஏரி இருக்கு. அதோட பேரே கடல்தான்.
காஸ்பியன் கடல். பேர்ல கடல்னு இருந்தாலும் இது ஒரு ஏரி. நம்ப முடியுதா? மனிதன் உருவாக்கியது இல்லை, இயற்கையான ஏரி. உலகத்தின் மிகப் பெரிய ஏரி என்றால், நிச்சயமாக இந்த காஸ்பியன் ஏரிதான். கிட்டத்தட்ட 4 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
கடல் என நினைத்த... ‘அம்மாடியோவ்… எவ்வளவு தூரத்துக்கு இருக்கும்..? அதுல எவ்வளவு தண்ணி இருக்கும்..!’ உங்களுடைய வியப்பு ரொம்பவுமே நியாயமானது. 1000 கிலோ மீட்டருக்கு மேல நீண்டு இருக்கு. ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழம். ஏரியோட கொள்ளளவு 78,000 கியூபிக் கி.மீ.க்கு மேல்.
ரொம்ப காலம் வரைக்கும் இது கடல் என்றுதான் நினைத்து வந்தார்கள். இந்தகாஸ்பியன் ஏரி, ரஷ்யா, இரான், கஜகிஸ்தான், அஜர்பைஜான், துர்மெனிஸ்தான் நாடுகளுக்கு மத்தியிலே, கிழக்கு ஐரோப்பாவுல, ஆசியா- ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில, சராசரியா கடல் மட்டத்துக்கு 90அடி கீழே இருக்கு. இதனோட தென்முனை கடல் மட்டத்தை விட 3300 அடி கீழே இருக்கு.
இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் ‘காஸ்பி’. இப்போது இந்தப் பழங்குடி இனமே இல்லை. உலகில் மொத்தமுள்ள ஏரிப் பரப்பில் 40% க்கு மேல், இந்த ஒரு ஏரியே கொண்டுள்ளது. ஆனாலும் இந்த ஏரி ஒரே சீராக ஆழம், கொள்ளளவு கொண்டதாக இல்லை. ஏரியின் மொத்த கொள்ளளவில் ஒரு சதவீதம் மட்டுமே வடக்கிலும், சுமார் 30% மத்திய பகுதியிலும் தெற்குப் பகுதியில் மட்டும் அதிக ஆழமும் சுமார் 70% தண்ணீரும் உள்ளது.
130க்கு மேற்பட்ட ஆறுகள் கலக்கும் இந்த ஏரியின் கரையில் பல தீவுகள், பல்வேறு பருவ நிலைகள் காணப்படுகின்றன. கடல், ஏரி இரண்டுக்குமான குணங்களைக் கொண்ட கேஸ்பியன் ‘கடல்’ ஒரு ஏரிதான் என்றாலும் இதன் தண்ணீர் ஆவியாதல் மூலம் மட்டுமே வெளியேறுகிறது.
ஆசிய சிறுத்தை, கடல் ஆமை, கஸ்பியன் ஆமை உள்ளிட்ட பல அரிய வகைஉயிரினங்கள் இந்த ஏரியை ஒட்டிய பகுதிகளில் வாழ்கின்றன. இத்தனை இருந்தும், உலகின் பிற நீர்நிலைகளைப் போலவே கேஸ்பியன் ஏரியும் மாசுப் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அணு ஆலைகளின் ரேடியோ ஆக்டிவ் கழிவுகள் ஏரி நீரை அபாயத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இதன் விளைவாய் ஏற்கெனவே அரியவகைத் தாவரங்கள், உயிரினங்களில் 90% மறைந்து போய் விட்டன.
ஏரி, ஆறு, கடல், காடு, மலை எதையும் விட்டு வைக்கவில்லை மனித இனம். ஆனாலும், விடாது மனித குலத்துக்கு நமை செய்து வருகிறது காஸ்பியன் ஏரி.
இந்த வாரக் கேள்வி: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி எது? எங்குள்ளது?
(தொடரும்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி, தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com