

எனக்கு நேற்று ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லவா? என்று வினவினான் அழகன். சொல் என்றார் எழில். என் தங்கை சில அலங்காரப் பொருள்களைச் செய்ய விரும்பினாள். துணி, பாசி, நூற்கண்டு ஆகிய பொருள்கள் அதற்குத் தேவைப்பட்டன.
அவற்றை வாங்க இருவரும் ஒரு சிறிய கடைக்குச் சென்றோம். வாடிக்கையாளர் இருவர், கடையின் முன்மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பொருள்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைக்காரர் அம்மேடைக்கு மறுபுறத்தில் கடைக்குள் இருந்தார். மேடையில் என் தங்கைக்குத் தேவையான பொருள்களும் இருந்தன. நான் அவற்றில் ஒன்றை எடுத்துப் பார்த்தேன்.
உடனே கடைக்காரர் என்னிடமிருந்து அப்பொருளைப் பறித்துக்கொண்டு, தொடாமல் பார் என்றார். நான் அதை வாங்க வந்திருக்கிறேன் என்றேன். கடைக்காரர் போ, போ என்பதைப்போல கையாட்டினார்.
எனக்கு அவமானமாய் இருந்தது. இப்பொழுதும் அவர் நம்மை என்ன நினைத்துவிட்டார்? என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அவர் மீதுள்ள எரிச்சலை எல்லோர் மீதும் காட்டுகிறேன் என்றான் அழகன் தழுதழுத்த குரலில். அவனது தோளில் ஆறுதலாய்த் தட்டிக்கொடுத்தார் எழில். வகுப்பே அமைதியாக இருந்தது.
பொருள்களை வாங்கினாயா? - சில நிமிடங்களுக்குப் பின்னர், தேவையான பொருள்களை வாங்கினாயா? என்று அழகனிடம் வினவினான் சுடர். இல்லை என்று கண்ணீர் பெருக்கெடுக்க அவன் தலையை ஆட்டினான். மேலும் சில நிமிடங்கள் கடந்ததும், நீங்கள் அழகனாக இருந்தால் இந்த மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள்வீர்கள் என்று பிற மாணவர்களிடம் வினவினார் ஆசிரியர் எழில்.
அந்தக் கடைக்காரரிடம் சண்டை போட்டிருப்பேன் என்றாள் இளவேனில். அதனால் மனஅழுத்தந்தான் அதிகமாகும் என்றான் தேவநேயன். இனி உங்களின் கடைக்கு வரவே மாட்டேன் எனக் கூறிவிட்டு அடுத்த கடையில் பொருள்களை வாங்கியிருப்பேன் என்றாள் தங்கம்.
நம்மைப் பற்றி அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டு, பதிலுக்கு நானும் ‘பேசாதீர்கள்’ என்பதைப்போல கையைக் காட்டியவாறே வந்திருப்பேன். அதையே நினைத்து வருந்தமாட்டேன் என்றாள் பாத்திமா. அனைத்தையும் கேட்ட ஆசிரியர், உணர்வுகளைப் பொருத்தமாக வெளிப்படுத்தல் மனஅழுத்தத்தைக் கையாள இன்னொரு வழி என்றார்.
மனஅழுத்தமே வராமல் தவிர்க்க முடியாதா? என்று வினவினாள் மதி. மனஅழுத்தமே வராமல் இருக்காது. ஆனால், சில பயிற்சிகளால் அவற்றை தவிர்க்க முயலலாம் என்றார் எழில். என்ன பயிற்சி? என்று வினவினான் கண்மணி.
என்ன பயிற்சி? - உலகப்பர் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வார். சரியான நேரத்தில் உண்ணவும் உறங்கவும் செய்வார். எந்த வேலையையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் பதற்றமின்றி செய்வார். அதையும் செவ்வனே செய்வார்.
ஓய்வுநேரத்தில் இயற்கை காணல், பறவை நோக்கல், கதை படித்தல், நண்பர்களோடு அளவளாவல், விளையாடுதல் என மகிழ்வுச் செயல்களில் ஈடுபடுவார் என்று எழில் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, ஓ! நேரந்தவறாமை, உடலோம்பல், திட்டமிட்டுச் செயல்படல், பதற்றப்படாமை, மகிழ்வுச்செயலில் ஈடுபடுதல் ஆகியன போன்றவை மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் என்கிறீர்களா? என்றான் அருளினியன். ஆம் என்றார் ஆசிரியர்.
மனஅழுத்தத்தில் இருந்து மீளும்பொழுது என்ன நிகழும்? என்று வினவினாள் நன்மொழி. தனக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை உணரமுடியும். தன்னம்பிக்கை உயரும் என்றார் எழில். பின்னர், இதுவரை பத்து வாழ்க்கைத் திறன்களைப் பற்றிக் கலந்துரையாடி இருக்கிறோம். இவை தொடர்பாக ஏதேனும் ஐயம் இருந்தால் அடுத்த வகுப்பில் வினவுங்கள் என்று கூறி அன்றைய வகுப்பை நிறைவுசெய்தார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்டவடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com