

சேரலாதன் குணபாலனிடம் வைத்த கோரிக்கையைக் கேட்டதும் முதலில் குணபாலனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒருமுறை அரண்மனைக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்ததே பெரிய காரியமாக இருந்தது. இப்போது மறுமுறையும் செல்லத்தான் வேண்டுமா? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
ஆனால், இதற்கு முன் சேரலாதனும் அவனது ஆட்களும் குணபாலன் உயிரைக் காப்பாற்றி, அவனுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து ஆதரவு கொடுத்ததை அவன் எளிதில் மறந்துவிடவில்லை. எனவே, அதற்காகவேணும் இதற்கு அவன் சம்மதித்துத்தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருந்தான்.
எனவே குணபாலன் சேரலாதனின் அருகில் சென்று அவனது கைகளைப் பற்றியவாறு, ‘ஐயா, தங்களது வேண்டுகோளை கட்டளையாக மதித்து நான் ஏற்கிறேன். எப்போது அரண்மனையில் நமது கொடி பறக்க வேண்டும் என்று உத்தரவு கொடுங்கள். அதை எப்பாடுபட்டாவது நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன்’ என்றான்.
அதற்கு பதிலளித்த சேரலாதன், ‘வருகிற சித்திரைத் திருநாள் அன்று அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருக்கும். நாட்டு மக்களும் ஆயிரக்கணக்கில் அங்கே கூடுவார்கள். அன்றைய தினமே நமது கோடி அந்தக் கோட்டையில் பட்டொளி வீசிப் பற்ந்திட வேண்டும்’ என்றான்.
மேலும் தொர்ந்த சேரலாதன், ‘அது அவ்வளவு சுலபமானதல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நாம் நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல், இத்தனைநாட்களாக எத்தனையோ பேர்களின்தியாகத்தால் இயங்கி வரும் இந்தபுரட்சிகரமான இயக்கத்தை நடத்துவதே அர்த்த மற்றதாகிப்போய்விடும்’ என்றான்.
அவனது வார்த்தைகளைக் கேட்ட குணபாலனும், ‘கவலையை விடுங்கள், நான்இருக்கிறேன். ஆனால், அதற்கு முன் அன்றைய தினத்தில் நமதுகொடி அரண்மனைக் கோட்டையில் பறக்கப் போகும் செய்தியைமன்னனுக்கும் தெரிவித்துவிடலாமா?’ என்றான்.
அதைக் கேட்ட பெரியவர், ‘ஏனப்பா இந்த விபரீத யோசனை? ஏற்கெனவே மன்னனும் தளபதி திருச்சேந்தியும் நம் மேல் கொலைவெறியில் உள்ளார்கள். அவர்களிடம் போய் நம் திட்டத்தைச் சொல்வது எதிரியிடம் கத்தியைக் கொடுத்துவிட்டு, கழுத்தைக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்’ என்றார்.
அதற்கு பதிலளித்தகுணபாலன், ‘இருக்கட்டுமே! சொல்லாமல் சென்று கொடி ஏற்றினால், அது திருட்டுத்தனத்துக்கு ஒப்பாகாதா?’ என எதிர்க்கேள்வி கேட்டதுடன், ‘எதிரியிடம் சொல்லிவிட்டு போர்க்களத்துக்குச் செல்வதே உண்மையான வீரத்துக்கு அழகு. இல்லையா?’ என்று அவனது பேச்சுக்கு விளக்கமும் அளித்தான்.
குணபாலனின் பேச்சைக் கேட்ட மற்றவர்களும் கூட தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ‘அது எப்படி முடியும்?’ ‘அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல’ ‘ஆமாம். கடைசியில் இந்தத் திட்டம் தோல்வியில்தான் முடியும்’ ‘இது முட்டாள்தனமான முடிவு’ ‘இத்திட்டத்துக்கு நாங்கள் உடன்பட மாட்டோம்’ என்று பலவாறாகப் பேசினர். அனைவரையும் அமைதிப்படுத்திய குணபாலன், ‘தோழர்களே, சற்று அமைதியாக இருங்கள். இந்தத் திட்டத்தில் எனக்கு நீங்க எவரும் உதவத் தேவையில்லை. இதோ நிற்கிறானே எனது நண்பன், தத்தன். இவன் ஒருவன் உதவியே எனக்குப் போதும்’ என்றான்.
குணபாலன் அப்படி சொன்னதும் தத்தனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தத்தன் தனது மனதுக்குள், ‘அடப்பாவி, என்னை ஏனடா இதில் சேர்க்கிறாய்? ஏதோ நீ வரும் வரை இங்கு இருந்துவிட்டு, நீ வந்ததும் ஊருக்குக் கிளம்பலாம் என்று இருந்த என்னை கடைசி வரை விடமாட்டாய் போல் தெரிகிறதே!’ என்று நினைத்துக்கொண்டான்.
‘சரி,அரண்மனைக்கு நமது செய்தியை எவ்வாறு தெரிவிப்பாய்?’ என்றான் சேரலாதன். ‘அதற்கும் ஓர் யோசனை என்னிடம் உள்ளது. முதன்முறை அரண்மனைக்கு நான் சென்றபோது இளவரசியிடம் பரிசில்களாய்ப் பெற்ற புறாக்கள் மூலம் நமது செய்தியை அனுப்பிவிடலாம்’ என்றான்.
அதைக் கேட்ட தத்தன், ‘அடப்பாவி, நீ இப்படி செய்வாய் என்று முன்னமே தெரிந்திருந்தால், அந்தப் புறாக்களை வெட்டி, வறுத்துத் தின்றிருப்பேனே’ என்றுநினைத்துக்கொண்டான். குணபாலன் தத்தனிடம் திரும்பி, ‘என்ன தத்தா, அரண்மனைப் புறாக்கள் பத்திரமாக உள்ளதுதானே?’ என்று கேட்டான். மேலும், ‘அதிலிருந்து ஒரு புறாவைப் பிடித்துக்கொண்டு வா. இந்த நற்செய்தியை இப்போதே அனுப்பிவிடலாம்’ என்றான்.
‘இதோகொண்டு வருகிறேன்’ என்று உள்ளே சென்ற தத்தன் சில நிமிடங்களில் ஒரு புறாவைக் கூண்டோடு கொண்டுவந்தான். அதே நேரம், ‘சித்திரைத் திருநாளில் எங்கும் பறக்கும் எங்கள் கொடி... அரண்மனை முதல் அங்காடித் தெருக்கள் வரை. சந்திரகிரியின் மாமன்னர் பொருத்தருள்க!’ என்று ஓர் ஓலையில் எழுதி முடித்திருந்தான் குணபாலன்.
- தொடரும்.