

பெரியவர்களைப் பார்த்து அதுபோலச் செய்து செய்துதான் குழந்தைகள் கற்கிறார்கள் என்று நம்மில் பலர் நம்புகிறோம். அதனாலேயே எல்லாவற்றையும் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இதனால் எந்நேரமும் குழந்தைகளிடம் விளக்கு விளக்கு என்று விளக்குகிறார்கள். பெரியவர்கள் சொல்படி செய்யும் குழந்தை நல்ல குழந்தை என்று வேறு பட்டம் கொடுக்கிறோம்.
புதியதொன்றைத் தெரிந்துகொண்டால், முன்பு தெரிந்தவற்றோடு ஒப்பிட்டு, இரண்டையும் இணைத்தோ, சிறிய மாற்றங்கள் செய்தோ புதியதை படைப்பது என்பது குழந்தைகளின் இயல்பு. பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைத்த குழந்தை நாற்காலியைத் தலைகீழாகத் தள்ளிவிட்டு, அதைத் தள்ளிக்கொண்டே, பேருந்து ஓட்டுநர் போல் நடித்துக் காட்டுவதும் இடையிடையே ஒலிப்பானை அழுத்தி ஒலியெழுப்புவதும் இந்த இயல்பின் வெளிப்பாடே.
பெருமைப்பட வாய்ப்பு: நீங்கள் பெருமையோடு பிறரிடம் பகிர்ந்துகொண்டவை என்னென்ன? நினைத்துப் பாருங்கள். யாரும் செய்யாத புதியதொன்றை முயற்சி செய்திருப்பீர்கள். அது வெற்றி பெற்றிருக்கும். அல்லது தோற்றுப் போயிருக்கும். ஆனால், அதைப் பிறரிடம் பகிர்ந்திருப்பீர்கள்.
எல்லோருக்கும் தெரிந்த கருத்தாக இருந்தாலும் அதில்உங்களுடைய ஓர் அம்சத்தை இணைத்திருப்பீர்கள். அது உங்களுடைய கருத்தாக மாறியிருக்கும். அந்த வெற்றி உங்களை அடுத்த முயற்சிக்கு அழைத்துச் செல்லும். நாளடைவில் நீங்கள் அந்தத் துறையில் சற்றே அறியப்படுபவராக மாறியிருப்பீர்கள்.
அதே நேரத்தில் ஒருவர் உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார். வழிகாட்டுகிறார். அந்த வழியில் நீங்கள் பயணிக்கிறீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைத்தாலுமே உங்களால் சொந்தமாக முயற்சி செய்தபோது கிடைத்த அளவுக்குப் பெருமைகொள்ள முடியாது இல்லையா.
நீங்களாகத் தேடி, பாடுபட்டு, பல நேர்காணல்களில் தோற்ற பின்பு ஒரு வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் ஒரு பிரபலத்தின் சிபாரிசால் வேலை கிடைக்கிறது. இரண்டும் மகிழ்ச்சி்யைத் தரும். ஆனால் முதல் சூழலில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி இரண்டாவது சூழலில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பன்மடங்கு அதிகம்.
குழந்தைகளைப் பொறுத்தவரையிலும் இதில் எள்ளளவும் மாற்றமில்லை. நானே செய்கிறேன், நானே செய்கிறேன் என்று நம்மிடம் கெஞ்சியவர்கள்தானே அவர்கள். நாம் விடவேயில்லையே. இனியாவது அதற்கு அனுமதிப்போம். உருண்டு புரண்டு. முட்டி மோதி, விழுந்து எழுந்து வரட்டும். வாழ்க்கை வசமாகும்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in