

மூணு வருஷத்துக்கு முன்ன விளையாடி கீழே விழுந்தப்ப நெத்தியில ஆன வெட்டுக் காயத்துக்குத் தையல் போட்டாங்க. புண்ணெல்லாம் அப்பவே ஆறிடுச்சு. ஆனா பாருங்க, தழும்பு மட்டும் எவ்வளவு பெரிசா இருக்குன்னு. அதுவும் முகத்துல, இது போகவேபோகாதா... மறைய மருந்து எதுவும் இருக்கா டாக்டர்? என்று கவலை தோய்ந்த குரலில் 15 வயதேயான ஆர்த்தி கேட்கிறாள்.
காயங்கள் சுலபமாக ஏற்படுவது போல, தழும்புகளும் சுலபமாக மறைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், அப்படி நடப்பதில்லையே. தழும்புகள் வெளியிலும் மனதளவிலும் மறைவதே இல்லையே. ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள காயங்கள் ஏற்படும்போது நமது உடலில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்வோம்.
மறந்துவிட்ட உறுப்பு: உடல் உறுப்புகள் என்றாலே மற்ற உறுப்புகள் அனைத்தையும் நினைவில் கொள்ளும் நாம், பொதுவாக நமது தோலை முற்றிலும் மறந்துவிடுறோம். ஆனால், உண்மையில் நமது உள்உறுப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதுடன், உடலை வெளிப்புற கிருமிகளிடமிருந்து காத்து, வெளிப்புற தட்பவெப்பநிலைக்குத் தகுந்தவாறு உடலின் வெப்பத்தை சமச்சீராக வைக்க உடலெங்கும் பரவியிருக்கும் மிகப்பெரிய உறுப்பு தான் நமது தோல். இது மூன்று அடுக்குகளால் ஆனது என்பது நினைவிருக்கிறதல்லவா. அவற்றின் பணிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
எபிடெர்மிஸ், டெர்மிஸ், ஹைப்போ டெர்மிஸ் எனப்படும் இந்த மூன்று அடுக்குகளில், மேற்புற அடுக்கான எபிடெர்மிஸ், நமது உள்உறுப்புகளுக்கு பாதுகாப்பளிக்கும் பணியைச் செய்கிறது. அடுத்துள்ள இரண்டாம் அடுக்கான உட்புறத் தோல் என்ற டெர்மிஸில் மெலனோசைட்கள், வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள், முடியின் வேர்க்கால்கள், இரத்த நாளங்கள், தொடு மற்றும் வலி உணர்வு நரம்புகள், அத்துடன் இவை அனைத்தையும் இணைக்கும் கொலாஜன் என்ற புரதத்தைச் சுரக்கும் ஃபைப்ரோ-ப்ளாஸ்ட் செல்கள் ஆகியன நிறைந்துள்ளது.
இந்த செல்கள் ஒவ்வொன்றும் சருமத்தின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் சுரப்பு, வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பு, தொடு மற்றும் வலி உணர்வு போன்ற பல முக்கியப் பணிகளைச் செய்கின்றன. அடுத்து, மூன்றாம் அடுக்கான ஹைப்போ டெர்மிஸில் காணப்படும் கொழுப்பு திசுக்கள் உடலின் தட்பவெப்பத்தைச் சமன்படுத்துகிறது.
இவற்றுள், கொலாஜன் எனும் புரதம், 20 வகைப்படுகிறது. உடலின் எலும்புகள், தசைநார்கள், மூட்டுகள், காது, மூக்கு மற்றும் உள் உறுப்புகள் எங்கும் இது நிறைந்திருக்கிறது. இதில் தோலில் அதிகம் காணப்படும் டைப் 1 மற்றும் டைப் 3 வகை கொலாஜன்கள் தான், தன் வலைபோன்ற அமைப்பால் இயற்கையிலேயே சருமத்திற்கு உறுதியையும், அதேசமயம் நெகிழும் தன்மையையும் தந்து, நம்மை அழகாகவும், இளமையாகவும் வைக்கிறது. மேலும், இதே கொலாஜன்கள் தான் உண்மையில் தழும்புகள் உருவாவதற்கும், தழும்புகள் மறைவதற்கும் காரணமாக இருக்கின்றன.
(தழும்பு ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com