இவரை தெரியுமா? - 28: துன்பங்களைத் தூர விரட்டிய ஃப்ரிடா காலோவின் தூரிகை

இவரை தெரியுமா? - 28: துன்பங்களைத் தூர விரட்டிய ஃப்ரிடா காலோவின் தூரிகை
Updated on
2 min read

தளர்வான ஒடிந்த தேகம், வண்ண ரிப்பன்களால் அலங்கரித்த கூந்தல், தலைமுழுவதும் ஒரு டஜன் பூக்கள், கழுத்தில் ஐந்தாறு பாரம்பரிய நகைகள், விரல் முழுக்க மோதிரங்கள் என்று தானே ஓர் ஓவியமாக வாழ்ந்தவர் ஃப்ரிடா காலோ.

மெக்சிகோவின் சிறிய நகரில் பிறந்து, தான் வாழ்ந்த 47 ஆண்டுகளும் தன்னை இம்சைப்படுத்திவந்த ஆயிரமாயிரத் துன்பங்களைத் தனித்துவமான ஓவியங்களால் நிறமூட்டி ரசித்த மாபெரும் கலைஞர். தன் கிராமத்துச் சாலைகளைக் காட்டிலும் பலமேடு பள்ளங்கள் அவர் வாழ்வில் பார்த்திருக்கிறார். அத்தனை ஏற்ற இறக்கத்திலும் தைரியமான பெண்ணாக வாழ்ந்து காட்டினார் காலோ.

போலியோவுடன் பால்யம்: மெக்சிகோவின் கொயாக்கான் நகரில் 1907-இல் பிறந்தார் ஃப்ரிடா. தந்தை புகைப்படக் கலைஞர். மெக்சிகோவின் புராதனச் சின்னங்களையும் கட்டிடங்களையும் படமெடுத்து ஆவணப்படுத்தும்படி அந்நாட்டு அரசு அவரைப் பணித்தது. தந்தை அறையில் இருந்த பாரம்பரிய புகைப்படங்கள் மூலம் மெக்சிகோ வரலாற்றை அறியத் தொடங்கினார் காலோ.

ஆறு வயதில் போலியோ அவரைத் தாக்கியது. ஒன்பது மாதங்கள் தொடர் போராட்டத்திற்குப் பிறகு படுக்கையில் இருந்து உயிர்பெற்று எழுந்தார்‌. ஆனால், அவர் வலது கால் நிரந்தரமாக சூம்பிப் போனது. பள்ளிக்குச் சென்றால் ‘கட்டைக் கால்’ என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், காலோ அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

நீண்டஆடைகள் உடுத்தினார். ஏழெட்டு ஜோடி காலுறைகள் அணிந்து கொண்டார். இறுதிவரை இந்நடைமுறை பின்பற்றப்பட்டது. கால்பந்து, குத்துச்சண்டை, நீச்சல் என்று சாதாரணக் குழந்தைபோல் வாழ்வை எதிர்கொண்டார்.

ஓவியங்களுடன் ஓர் அறிமுகம்: காலோவின் தந்தை ஓய்வு நேரத்தில் ஓவியங்கள் வரைவது வழக்கம். முழுமையாக வரைந்து முடிக்கும் வரை, காலோ சமத்தாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார். மெக்சிக்கோவின் புகழ்பாடும் மியூரல் ஓவியங்களை (mural painting) நாடு முழுக்க வண்ணந்தீட்ட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. காலோவின் பள்ளி சுவரில் வண்ணம் தீட்ட டியாகோ ரிவேரா எனும் புகழ்பெற்ற ஓவியர் வந்தார்.

அவரின் மதிய உணவைத் திருடித் திண்பது, நடந்து செல்லும் படிக்கட்டில் சோப் தேய்த்து வழுக்கி விழச் செய்வது என்று சேட்டை செய்தார் காலோ. தன் குறும்புத்தனங்களால் பள்ளியை விட்டு இடைநிறுத்தப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். காலோவின் இளவயது ஆசை தானொரு மருத்துவர் ஆகவேண்டும் என்றிருந்தது.

ஆனால், ஒரு கோர சம்பவத்திற்குப் பிறகு வாழ்க்கை தலைகீழானது. காலோ எனும் மருத்துவ ஆசை கொண்ட சிறுமி, ஓவியக் கலைஞராக உயிர்ப்பெற்றதும்; தொல்லைத்தரும் இம்சைகள் தொடங்கியதும் அங்குதான்.

தூரிகையும் துன்பங்களும்: வழக்கம்போல் பள்ளி முடிந்து 1925 செப்டம்பர் 17-ம் தேதி பேருந்தில் ஏறினார் காலோ. வளைவு ஒன்றில் அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்பேருந்தின் இரும்பு கம்பி, காலோவின் உடலை ஊடுருவிச் சென்று பலமாகத் தாக்கியது.

முதுகுத் தண்டு சுக்குநூறாக நொருங்கியது. மகளின் இப்பரிதாபகரமான நிலையை காணமறுத்த பெற்றோர்கள் மருத்துவமனைப் படிக்கட்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காலோவின் சகோதரி மட்டும் அவ்வப்போது வந்து செல்வார்.

சுறுசுறுப்பு பொருந்திய அவர் குணாதிசயத்திற்கு மாறாக தனிமையும் விரக்தியும் பாடாய்ப் படுத்தின. உடல் முழுவதும் கட்டுப்போட்டிருந்தனர். தந்தையின் தூரிகையை துணைக்கு அழைக்கலாமா என்றொரு கேள்வி எழுந்தது. படுக்கையில் இருந்தே வரைவதற்கு ஏதுவான மரப்பலகை ஒன்றை ஏற்பாடு செய்துகொடுத்தார் காலோவின் தாயார். தன் வலிகளையும் அவஸ்தைகளையும் ஓவியமொழியால் உலகிற்குச் சொல்லத் தயாரானாள் காலோ.

(காலோ கதை தொடரும்)

- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in