நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 58: வேலை செய்யாமல் சம்பாதிக்க 5 சிறந்த வழிகள்

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 58: வேலை செய்யாமல் சம்பாதிக்க 5 சிறந்த வழிகள்
Updated on
2 min read

‘நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், சாகும்வரை உழைத்துக்கொண்டே இருப்பீர்கள்' என்பது உலகின் மிகப் பெரிய பணக்காரரான வாரன் பஃபெட்டின் முக்கியமான பொன்மொழி. செயல் சாராத வருமானத்தின் (Passive income) முக்கிய‌த்துவத்தை இந்த பொன்மொழி எளிமையாக புரியவைக்கிறது.

நாம் உழைக்காமல் தூங்கிக்கொண்டே இருந்தாலும் பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை பொருளாதார பிரச்சினைஇல்லாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டிருக்கும்.

நாம் சேமித்த பணத்தை; நாம் வழங்கும் சேவையை சரியான முறையில் முதலீடு/விற்பனை செய்தால், தூங்கும்போதும் பணம் சம்பாதிக்கலாம். இதனை இளமை காலத்திலே ஆரம்பித்துவிட வேண்டும். ஆரம்பிக்கும்போது பூஜ்ஜியமாக இருக்கும் இந்த வருமானம், வயது ஏற ஏற 100 சதவீதமாக அதிகரித்துவிடும்.

ஆனால், செயல் சார்ந்த வருமானம் இளமை காலத்தில் அதிகமாகவும், முதுமையில் பூஜ்ஜியமாகவும் மாறிவிடும். அதனால் செயல் சாராத வருமானத்தை பெருக்கி கொள்வது பிற்கால‌ வாழ்க்கைக்கு நல்லது.

செயல் சாராத வருமானத்தை வழங்கும் 5 முக்கிய வழிகளை பார்க்கலாம்.

1. வட்டி வருமானம்: வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் நிரந்தர வைப்பு/சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் 5 முதல் 7 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஓய்வூதிய திட்டம், பத்திரங்களை வாங்குவது, தங்கத்தை சேமிப்பது ஆகியவற்றின் மூலமாகவும் 6 முதல் 8 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்த முதலீடு பாதுகாப்பானது என்பதால் பெரும்பாலானோர் இதில் இணைகின்றனர்.

2. வாடகை வருமானம்: வீடு, கட்டிடம், நிலம், வாகனம் ஆகியவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதந்தோறும் வருமானம் ஈட்ட முடியும். ஒருமுறை முதலீடு செய்து கட்டிடம் கட்டிவிட்டால் வாடகை வந்துக்கொண்டே இருக்கும். நகர்ப்புறங்களில் காலி இடத்தை கூட பார்க்கிங் செய்வதற்கு வாடகை விட்டால் கூட மாதந்தோறும் வருமானம் கிடைக்கிறது.

சுற்றுலா தலங்களில் வீடுகளை விடுதிகளாக மாற்றிவிட்டால் நாள்தோறும் வருமானம் வரும். நமது சொந்த வாகனங்களை பயன்படுத்திய நேரம் போக, மீதி நேரத்தில் வாடகைக்கு விட்டால் வருமானம் கிடைக்கும்.

3. ராயல்டி வருமானம்: உங்களுக்கு எழுதுவது, இசை அமைப்பது, ஓவியம் வரைவது, புகைப்படம் எடுப்பது, கோடிங் செய்வது, செல்போன் ஆப் உருவாக்குவது, யூடியூப்பில் இயங்குவது போன்ற தனித்திறமைகள் இருந்தால் அதன் மூலமாகவும் வருமானம் சம்பாதிக்கலாம். நீங்கள் உருவாக்கிய‌ புத்தகம், இசை கோப்பு, ஓவியம், புகைப்படம், கோடிங், ஆப் ஆகியவை ஆண்டுதோறும் உங்களுக்கு மதிப்பூதியம் வழங்கிக் கொண்டே இருக்கும். அதேவேளையில் சமூகத்தில் உங்கள் பெயருக்கும் மதிப்பு உயரும்.

4.பங்குச் சந்தை முதலீடு: பங்குச் சந்தையில் நிலையான நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் செயல் சாராத வருமானம் அதிகமாக கிடைக்கும். அந்த‌ நிறுவனதின் பங்கின் விலை உயர உயர வருமானம் அதிகரிக்கும்.

நிரந்தர வைப்பு திட்டங்களை விடவும் பங்குச்சந்தை முதலீடு சிறந்தது. ஏனென்றால் இதில் பணவீக்கத்தை விஞ்சக்கூடிய அளவுக்கு, அதாவது 10 சதவீதத்துக்கும் அதிகமாக வருமான‌ம் கிடைக்கும்.

5. பரஸ்பர நிதி முதலீடு: பரஸ்பர நிதி முதலீட்டில் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப கடன் நிதி, கலப்பின நிதி, பங்குச்சந்தை சார்ந்த நிதி ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம். எஸ்ஐபி (SIP) திட்டத்தில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அதிக வருமானம் கிடைக்கும்.

கடன் நிதி திட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வைப்பு திட்டங்களை விட கூடுதல் வருமானம் கிடைக்கிறது. பணவீக்க விகிதத்தைவிட அதிகமான வருமானம் ஈக்விட்டி நிதி முதலீடு மூலமாகக் கிடைக்கும் என்பது மேலும் மகிழ்ச்சி ஊட்டக்கூடியதாகும்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு :vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in