

என் மகன் தமிழில் நன்றாக பேசுவான். அவனை தமிழ் இலக்கியம் படிக்க வைக்க சிலர் சொல்கிறார்கள். ஆனால், பலர் தமிழ் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? என கேட்டு பயமுறுத்துகிறார்கள். வழி காட்டவும். - செ.முத்துமலை, சாத்தான்குளம்.
இன்று உலகிலேயே பேச்சு வழக்கில் மற்றும் பயன்பாட்டில் உள்ள மொழிகளில் தொன்மையானதும், முதன்மையானதும் தமிழ் ஆகும். தயக்கமே வேண்டாம். இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் அதற்கு மேலும் கூட படிக்கலாம். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வினை மிகவும் நல்ல முறையில் தயார் செய்து எழுதவும். யுபிஎஸ்சியின், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வின் முதன்மைத் தேர்வினைக் கூட தமிழிலேயே எழுதி இன்று ஐஏஎஸ் ஆக பணியாற்றிவரும் வெற்றியாளர்கள் உள்ளனர்.
இதுதவிர இதழியல் துறையில், வளர்ந்து வரும் இணைய இதழ்கள், செய்தி இணையதளங்களிலும் பிரகாசமான வாய்ப்புள்ளது. தமிழில் இணைய பக்கங்களை பிழையின்றி பதிவேற்றம் செய்ய கன்டன்ட் ரைட்டர்கள், கன்டன்ட் எடிட்டர்கள் மற்றும் டெக்னிக்கல் ரைட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
பட்டப்படிப்பு படிக்கும் போதே ஏதேனும் ஒரு அயல் மொழியினை பயிலவும், அதனில் உரிய நிலையில் சான்றிதழ் பெறவும். பின்னர் மொழிபெயர்ப்புக்கான முதுகலை பட்டயம் அல்லது பட்டம் பெறவும். இன்று மொழிபெயர்ப்பாளர்கள் அறிவியல் துறை சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் மட்டுமின்றி இதர துறைகள் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் / வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு கைநிறைய சம்பளமும் கிடைக்கின்றது. எனவே எந்த வித தயக்கமுமின்றி தமிழினை பயிலலாம். இன்று உலகம் முழுவதுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் தமிழ்த் துறையினை கொண்டுள்ளன. வாய்ப்புகளைச் சரியாகக் கணித்து அணுகினால் வெற்றி பெறலாம்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.