

லடாக்கில் நூப்ரா பகுதியிலிருந்து உலகின் அதிஅற்புதமான பாங்காங் ஏரிக்கு வந்து சேர்ந்த கதை அதிபயங்கரமானது. பனாமிக் பகுதியிலிருந்து பாங்காங் ஏரிக்கு செல்ல இரண்டு வழி இருந்தது. ஒன்று லே சென்று அங்கிருந்து ஏரிக்கு செல்வது. அது நாம் வந்த பாதையிலேயே இருக்கும் என்பதால் அந்த பாதையைத் தேர்வு செய்யாமல், அகம் கிராமத்தின் வழியாக இருட்டுவதற்குள் ஏதாவது ஒரு கிராமத்தில் தங்கி விடவேண்டும் என்ற திட்டத்துடன் ஏரியை நோக்கிக் கிளம்பினோம்.
லே பாதையில் கொஞ்ச தூரம் பயணித்து, அகம் கிராமம் இருக்கும் பகுதியில் இடதுபுறமாகத் திரும்பி பயணிக்கத் தொடங்கினோம். சாலைகள் நன்றாக போடப்பட்டு இருந்தாலும், கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு அந்த மலைப்பாதைகள் படுபயங்கரமாக இருந்தன. அதனால் மெதுவாகவே சென்று கொண்டிருந்தோம். அகம் கிராமத்தை தாண்டுவதற்கே மதியத்துக்குமேல் ஆகிவிட்டது.
எட்டிப்பார்த்த பயம்: கொஞ்ச தூரம் வரை சில வண்டிகள் நம்மைத் தாண்டி சென்றன, அதன்பிறகு எந்த வண்டியும் நம்மோடும் வரவில்லை, எதிர் திசையிலும் வரவில்லை. அதனால் கொஞ்சம் பயம் மெதுவாக எட்டிப்பார்த்தது.
கொஞ்ச தூரத்தில் ஒரு ராணுவ முகாம் இருந்தது. அங்கு நம்மை சோதனையிட்ட ராணுவத்தினர், சாலைகள் நீரில் அடித்து சென்றதால், இதற்கு மேல் பயணிக்க முடியாது என்று சொல்லி அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, எதிர் திசையில் இருந்து ராணுவ வண்டிகள் வந்து கொண்டிருந்தன.
ரோட் ரோலர், மணல் லாரிகள், ராணுவ வண்டிகள் வரிசையாக வர, அதிலிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் 'இப்போது தான் ரோடு போட்டு வருகிறோம், அதனால் இவர்களை அனுப்பலாம்' என்று சொல்ல அனுமதி கிடைத்தது.
கொஞ்ச தூரம் சாலைகள் நன்றாகவே இருந்தன. ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் சாலைகள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் மண் சாலைகளையும் பனி உருகி வந்த நீர் அடித்து சென்றிருந்தது. நேரம் ஆக ஆக சூரியன் மறையும் தருவாய் வந்தது, அப்போது வரை எந்த கிராமமும் வரவில்லை.
ஒரு இடத்தில் அந்த சாலைகளில் பயணிக்கவே முடியாதபடி பெரிய பெரிய கற்கள் இருந்ததால், வண்டியிலிருந்து இறங்கி, வண்டியை தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினோம். இருபது நிமிடம்தள்ளிக்கொண்டே வந்ததும் மீண்டும் சாலை வந்தது. நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் முதுகுவலி ஆரம்பித்துவிட்டது.
காத்திருந்த ஆபத்து: அந்த வலியோடு மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். இருட்டுவதற்குள் எப்படியாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிட வேண்டும், இல்லை என்றால் அந்த குளிரில், மிருகங்கள் வந்து போகும் இடத்தில் ராத்திரியில் தனியாக இருப்பது ரொம்ப ஆபத்தான காரியம். அதனால் வண்டியை கொஞ்சம் வேகமாக இயங்கினோம். மீண்டும் அதே மாதிரி கற்கள் நிறைந்த பகுதி, சரி இறங்கி நடக்கலாம் என்று நடக்கத்தொடங்கினோம்.
பள்ளத்தில் இருந்து மேட்டில் ஏறியதும் நாம் பார்த்த காட்சி நம்மை பதறவைத்து விட்டது. அடித்த வெயிலுக்கு மலையிலிருந்த பனிகள் உருகி நீர்வீழ்ச்சி போல் வந்து ஒரு ஆறே ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடந்து செல்வதே ஆபத்தான விஷயமாகத் தோன்றியது. அதோடு எங்கு பள்ளம் இருக்கும், எங்கு நீரின் வேகம் இருக்கும் என்று பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்தோம்.
முட்டி வரை தண்ணீர், நீரின் வேகம், ஐஸ் கட்டி போல் குளிர்ந்த நீர் என ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பதற்கே ரொம்ப சிரமப்பட்டோம். இருக்கும் கொஞ்ச வெளிச்சத்தில் எதாவது ஒரு கிராமத்தைக் கண்டடைவோம் என்ற நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்ந்தோம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com