

புத்தகக் காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டி ருந்தார்கள் அப்பாவும் குழலியும். இடமில்லாததால் சில புத்தகங்களை வேறிடத்தில் மாற்றி வைக்க முனைந்திருந் தார்கள். பாரதியார் கவிதைகள், திருக்குறள், புதுமைப்பித்தன் கதைகள் போன்ற சில புத்தகங்கள் மட்டும் முனை மடங்கி, நிறம் மாறிப் பழையதாகியிருந்தன. பல புத்தகங்கள் அப்படியே புதிதாக இருந்தன.
சுடரும் வந்துவிட்டான்.
குழலி: அப்பா, இந்தப் புத்தகங்கள் மட்டும் புதுசா, இப்ப வாங்கின மாதிரியே இருக்கு. இதெல்லாம் இவ்வளவு பழசா இருக்கு.
அப்பா: புத்தகம் எல்லாம் புதுசா வாங்கினதா இருக்கணும்னு அவசியமில்ல குழலி. வாங்கியும் படிக்காம இருந்தா அப்படியே புதுசாத்தான இருக்கும். ஆனா இந்தப் புத்தகங்கள் அடிக்கடி எடுத்துப் படிக்கிற புத்தகங்கள். அதான் பழசாயிடுச்சு.
குழலி: அப்பா, ஔவையார் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையில போர் வேண்டாம்னு தூது போன பாட்டுதான் இங்க ஞாபகம் வருது. புறநானூற்றுல 95 வது பாட்டு. வாள் மங்கலம் என்கிற துறையில பாடாண்திணையில வருது.
சுடர்: வாள் மங்கலமா...
குழலி: ஆமா சுடர். கடல் போன்ற பெரிய படையை உடைய மன்னனோட வாளைப் புகழ்றதுதான், வாள் மங்கலம்ங்கிற துறையாம். வாளை வாழ்த்துறதுன்னா அவனோட வீரத்தை வாழ்த்துறதுதான்.
சுடர்: இந்தப் பாட்டோட சூழலைச் சொல்லேன்.
குழலி: தொண்டைமான் அதியமான் மேல போர் தொடுக்க நினைச்சான். ஆனா, அதியமானுக்கோ அதுல விருப்பம் இல்ல. தொண்டைமான்கிட்டப் பேசிப் போரைத் தடுக்கிற முயற்சியை ஔவை எடுத்தாங்க. அதியமானைப் பத்தித் தெரியாம அவன்கிட்ட மோதணும்னு நினைக்கிற தொண்டைமான், அதியமானோட தூதுவரா ஔவையார் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஔவையைத் தன்னோட படைக்கலன்கள் வச்சிருக்கிற கொட்டிலுக்குக் கூட்டிட்டுப் போனானாம்.
அங்க புத்தம் புதுசா, வாளும் வேலும் இன்னும் நிறைய போர்க் கருவிகளும் அழகா அடுக்கி எண்ணெயெல்லாம் பூசி, அழகுக்காக மயில் தோகையெல்லாம் வச்சி அலங்காரமா, பார்க்கவே பளபளன்னு கண்ணைப் பறிக்கிற மாதிரி இருந்துச்சாம். இதப் பாத்து பிரம்மிச்சு அதியமான்கிட்டப் போய், தொண்டைமான் எவ்வளவு பலம் நிறைஞ்சவன்னு ஔவை சொல்லட்டும்னு நினைச்சித்தான் தன்னோட போர்க் கொட்டிலைக் காண்பிச்சான் . ஆனா நடந்ததோ வேற...
சுடர்: ஔவையார் என்ன சொன்னாங்க...
குழலி: தொண்டைமானே, மயில் தோகை, பூ, எண்ணெய்ப் பூச்சுன்னு இவ்வளவு அழகாப் போர்க்கருவிகள அடுக்கிக் காட்சிக்கு வச்சிருக்க. ஆனா, அதியமான்கிட்ட இருக்கிற போர்க்கருவிகள்லாம் எப்பவும் பகைவரை எதிர்த்துச் சண்டையிடறதால நுனி உடைஞ்சி, கைப்பிடி கழண்டு, அடிக்கடி கொல்லன் பட்டறைக்குப் போய் சரி செய்ற நிலையிலதான் இருக்கும்ன்னு சொன்னாங்களாம்.
சுடர்: தொண்டைமானுக்குப் புரிஞ்சிருச்சா ஔவையோட வஞ்சப் புகழ்ச்சி...
குழலி: தொண்டைமான் அதிகமாகப் போர்க்களத்தைக் காணாதவன்னும், அதியன் போரையே தொழிலாக் கொண்டவன்னும் புரியவைக்கிற ஔவையோட முயற்சிக்கு, இந்தவஞ்சப் புகழ்ச்சி உதவியிருக்கு. தொண்டைமானோட போர்க் கொட்டிலைப் புகழ்ற மாதிரிப் புகழ்ந்து, அதியனோட வீரத்தைச் சொல்ற ஔவையோட புலமைத் திறன் யாருக்கு வரும்...
சுடர்: அதியமானோட வீரத்தையும் கொடைச்சிறப்பையும் நிறையவே பாடியிருக்காங்கள்ல ஔவை.
குழலி: ஆமா சுடர். இந்தப் பாட்டுலகூட அதியமானைப் பத்திச் சொல்லும்போது, உண்டாயின் பதம் கொடுத்து/ இல்லாயின் உடன் உண்ணும்/ இல்லோர் ஒக்கல் தலைவன் / அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே ன்னு அதியனைப் பாடுறாங்க.
சுடர்: இந்த வரிகளோட பொருளையும் சொல்லிடேன்...
குழலி: தன்கிட்ட இருக்கிற செல்வத்தை எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கிற பண்புள்ள அதியன், தன்கிட்ட இல்லாதபோது, எளிய மக்களோடு அவர்கள்ல ஒருத்தனா இருந்து உண்டு மகிழ்வானாம். அவன் உண்மையிலேயே வீரம் நிறைஞ்சவன். அவனுக்குப் படைக்கலத்தை அலங்கரிக்கத் தெரியாது. ஆனா அவனுக்கு அந்தக் கருவிகள எப்படிப் பயன்படுத்துறதுன்னு தெரியும்னு சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டும் தொண்டைமான் போர் தொடுக்க நினைப்பானா....
சுடர்: அப்ப அழகுங்கிறது அடுக்கி வைக்கிறதுல இல்ல... பயன்படுத்துறதுல தான் இருக்கு.
அப்பா மகிழ்வுடன் அவர்களின் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com