

அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் சமீபகாலமாக கரிம நீக்க ஆற்றலைச் சேமிக்க புதிய வகை நீராற்றல் மின்சார உற்பத்தி முறையை நம்பி இருக்கின்றன. அந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் Pumped-Storage Hydropower.
இதில் நாம் இரண்டு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும். ஒரு நீர்த்தேக்கம் மேலே அமைந்திருக்கும். இன்னொரு நீர்த்தேக்கம் கீழே அமைந்திருக்கும். இடையில் இரண்டையும் இணைக்கும் பாதையில் டர்பைன்இடம்பெறும். உற்பத்தி செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தி மோட்டார்மூலம் பூமியிலிருந்து நீரை மேலேஉள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்ற வேண்டும். பிறகு தேவைப்படும்போது நீரைத் திறந்து விட்டால்அது கீழே உள்ள நீர்த்தேக்கத்துக்குள் பாயும். அப்போது இடையில் உள்ள டர்பைன் சுழல்வதால் மின்சாரம் உற்பத்தியாகும்.
மீண்டும் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கீழுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து மேலுள்ள நீர்த்தேக்கத்திற்கு நீரை ஏற்ற வேண்டும். இந்தமுறை ஒரு நிரந்தர பேட்டரியைப்போல பயன்படும். ஆனால், இதில் உள்ள பிரச்சினை நாம் நீர்த்தேக்கங்களை உருவாக்க ஒரு மலையையாவது அழிக்க வேண்டியது இருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இதனை செய்ய முடியாது.
இப்படியாக பிரச்சினைக்கான தீர்வை கண்டடைந்தால் அதில் ஒரு பிரச்சினை எனச் சுழற்சிமுறையில் சிக்கியிருக்கிறோம். இதனாலேயே நாம் புதைபடிம ஆற்றலைப் பயன்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். மேலும் காலநிலை மாற்றமே கரிமநீக்கத் தொழில்நுட்பங்களான சூரிய, காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தடையாக இருக்கிறது என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் தீவிரப் புயல், அதீதமழை, அடிக்கடி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேக மூட்டம் போன்றவற்றால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றலும், காற்றின் வேகமும் குறைய நேரிடும் என்று புவி அறிவியலுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே 23% மின் உற்பத்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து கிடைத்து வரும் நிலையில் வரும் காலங்களில் அதுவும் பாதிக்கப்படலாம் என சூழலியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதற்கான தீர்வை நாம் சரியான பார்வையில் பிரச்சினையை அணுகினால் மட்டுமே கண்டடைய முடியும். வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் வாயுக்களில், 89% கார்பன் வாயுக்கு காரணமாக இருப்பவை புதைபடிமங்களும் தொழிற்சாலைகளும் எனப் பார்த்தோம். இதில் புதைபடிமங்களுக்கான மாற்றை தேடுகிறோமே தவிர, இத்தனை தொழிற்சாலைகள் இருப்பதற்கான அவசியம் என்ன என்று கேட்கிறோமா? இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான ஆணி வேர் பொருளாதார மற்றும்சமூக கட்டமைப்புகளுடன் பின்னிபிணைந்திருக்கிறது. அவற்றை மாற்றும்வரை உண்மையான தீர்வை நாம் கண்டறியப்போவதில்லை.
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர். தொடர்புக்கு: tnmaran25@gmail.com