

இருண்ட கோட்டைக்குள் கேமராவுடன் கூடிய ட்ரோன் ஒன்றைச் செலுத்தி, எதிரிகள் இருக்கிறார்களா என்று உளவு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு இராணுவத் தலைவர். அதைப் பார்த்த மற்றொரு தலைவர் உளவுபார்க்கும் அந்த ட்ரோன் மூலமாகவே எதிரியை அழித்தால் என்ன? என்று சிந்தித்து அதை செயல்படுத்தியும் பார்க்கிறார். அந்த சோதனையில் தான் பெற்ற வெற்றியை தனது மற்ற வீரர்களுக்கும் பகிர்ந்தால், கோட்டையை மட்டுமல்ல நாட்டையே பாதுகாக்கலாமே என்று நினைத்து அதை செயல்படுத்தியும் காட்டுகிறார்.
இதையே மருத்துவத்தில் மேற்கொண்டால்? ஆம்... அப்படி ஒரு அரிய மருத்துவத் திறனை மேற்கொண்ட மருத்துவர்தான் டாக்டர் டெம்டன் இராக் உத்வாடியா (Dr. Tehemton Erach Udwadia).
உண்மையில் அந்தக் கோட்டை என்பது நம் உடல். குறிப்பாக நமது வயிற்றுப் பகுதி. அதன் உள்ளே கேடு வரும்போது செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை உடலின் எந்தப் பாகத்தையுமே அறுக்காமல், ஒரு சிறு துளையின் உள்ளே கேமராவைச் செலுத்தி, அதன் மூலமாகவே அறுவை சிகிச்சையும் செய்துவிடக்கூடிய சிகிச்சை தான் லேப்ராஸ்கோப்பி எனும் நுண்துளை அறுவை சிகிச்சை. அந்த சிகிச்சையில் உலகளவில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியவரும், 'இந்திய லேப்ராஸ்கோப்பி சிகிச்சையின் தந்தை' என்று போற்றப்படுபவரும் தான் டாக்டர் டெம்டன் இராக் உத்வாடியா. ஆனால், அதை செயல்படுத்த அவர் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
பல்துறை வித்தகர்: மகாராஷ்டிரா மும்பை நகரில், 1934 ஜூலை 15 ஆம் தேதி பார்சி இன நடுத்தரக் குடும்பத்தில் மருத்துவர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர் டெம்டன் உத்வாடியா. ஆரம்பக்கல்வியை தூய மேரி பள்ளி மற்றும் வில்சன் கல்லூரியில் மேற்கொண்டார். பொது மருத்துவரான தந்தை டாக்டர் இராக் மற்றும் இல்லத்தரசியான தாய் பெரின் இராக் இருவரது ஆசைப்படியே மும்பையின் எஸ்.எஸ். சேத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கச் சென்றார்.
படிப்பு மட்டுமல்லாமல் தந்தையின் விளையாட்டு ஆர்வமும், தாயின் இசை ஆர்வமும் சேர்ந்து விளங்கியதால் கிரிக்கெட், கோல்ஃப், இசைக் கச்சேரி, பேச்சுப் போட்டிகள் என அனைத்திலும் பெரும் வெற்றி பெற்று, கல்லூரியில் அனைவரும் விரும்பும் நபராகவே வெளியே வந்தார் உத்வாடியா.
இளநிலை மருத்துவம் பயின்ற பின், அதே துடிப்புடன் மகாராஷ்டிரத்தின் முன்னோடி மருத்துவமனைகளான டாட்டா மெமோரியல் மருத்துவமனை, கே.ஈ.எம். மருத்துவமனைகளில் பயிற்சி மாணவராகச் சேர்ந்தார். அங்கே டாக்டர் கூப்பர், டாக்டர் பாலிகா, பேராசிரியர் டாக்டர் சென் உள்ளிட்ட மருத்துவ ஜாம்பவான்களிடம் அறுவை சிகிச்சை முறைகளை முறையாகக் கற்று அதிலும் சிறந்து விளங்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து, 1962 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற உத்வாடியா, அந்த நாட்டின் மதிப்புமிக்க 'தி ராயல் சொசைட்டியின்' எஃப்.ஆர்.சி.எஸ். தேர்வுகளில் மிகக் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றார். அங்கிருந்த லிவர்பூல் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றி மேலும் சில அனுபவங்களைப் பெற்றார்.
1964 ஆம் ஆண்டு மும்பை திரும்பிய அவருக்கு, பிரீச் கேண்டி, ஹிந்துஜா, பார்சி என பல தனியார் மருத்துவமனைகள் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிய அழைப்பு விடுத்தாலும், அவர் தேர்ந்தெடுத்தது ஏழை மக்களுக்கு உதவும் இலவசப் பொது மருத்துவமனைகளான ஜே.ஜே. மருத்துவமனை மற்றும் கே.ஈ.எம். மருத்துவமனைகளையே.
மீண்ட ஆயிரம் உயிர்கள்: பணிபுரிய பொது மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்தாலும் டாக்டர் உத்வாடியா பெரிய தனியார் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு எப்போது உதவி தேவை என்றாலும் அவர்களுடைய மருத்துவர்கள் தோளோடு தோள்நின்று எண்ணற்ற நோயாளிகளைக் காக்க உதவவும் செய்தார்.
1970-80களின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாநிலம் முழுதும் வலம் வந்த உத்வாடியா, நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமத்தில் இருக்கும் சின்னஞ்சிறு மருத்துவமனைகளுக்கும் தனது காரிலேயே உபகரணங்களை கொண்டுசென்று அறுவை சிகிச்சை செய்து உதவியிருக்கிறார். அப்படி அவர் காப்பாற்றிய உயிர்கள் மட்டும் பல ஆயிரத்தைத் தாண்டும் என்று இன்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் சக மருத்துவர்கள்.
இப்படி இரவு பகல் பாராமல் எல்லா ஊர்களுக்கும் சென்று உதவி இணையில்லாத அறுவை சிகிச்சை நிபுணராகப் பெயர் பெற்றாலும், தனது மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதையும், சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சையின் புதிய முன்னேற்றங்களைதான் கற்றுக் கொள்வதையும் அவர் நிறுத்தவேயில்லை. எனினும் அதுவரை அவர் லேப்ராஸ்கோபி பற்றி பெரிதாக அறிந்திருக்கவும் இல்லை.
இப்படி தான், தனது வேலை, மாணவர்கள், மனைவி கோர்ஷெட் மற்றும் மகன்கள் ருஷட், ஆஷட், மகள் தினாஷ் அடங்கிய தனது குடும்பம், தனது கோல்ஃப் விளையாட்டு என்று பரபரப்பாக, தன்னிறைவாக ஓடிக்கொண்டிருந்த டாக்டர் உத்வாடியா வாழ்வில், 1971 ஆம் ஆண்டின் ஒரு காலை திருப்புமுனையாக அமைந்தது.
(உத்வாடியா மகிமை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com