

கதை எழுதிய பின்பு எடிட்டிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்த்தோம். பெரியவர்களுக்கான கதைக்கும் இது பொருந்தும். அதேநேரத்தில் சிறுவர்களுக்கான கதை எடிட்டிங்கில் இன்னும் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கதை எழுதும்போது முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. பெரியவர்களுக்கான கதையை யார் படிக்கப் போகிறார்கள், என்ன வயது என்பதெல்லாம் அந்த எழுத்தாளர் யோசிக்க வேண்டியது இல்லை. ஆனால், சிறுவர் கதை என்றால், எந்த வயது சிறுவர்களுக்கு இந்தக் கதை என்பதில் தெளிவு வேண்டும்.
உதாரணத்துக்கு, 5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கதை எனில், பெரிய பெரிய வார்த்தைகளோ, நீளமான வாக்கியங்களோ இருக்கக் கூடாது. கதை கருவும் அவர்களுக்கு ஓரளவு தெரிந்த விஷயமாக இருப்பதே நல்லது. இதை எல்லாம் அந்தக் கதையை எடிட் செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டும். 5 வயது குழந்தைகளுக்கான கதையில் ’பிராயச்சித்தம்’ என்ற வார்த்தை வந்தால், அது அவர்களுக்குப் புரியாது என்று அதற்கு இணையான சொல்லை மாற்ற வேண்டும்.
வன்முறை தவிர்: எந்த வயதுக்கு உரிய கதை என்று முடிவு செய்தததும், கதையின் நீளம் குறித்தும் கவனம் கொள்வது அவசியம். ஏனெனில், நல்ல கதை கருவாக இருக்கலாம். ஆனால், பத்து பதினைந்து பக்கங்களுக்கு வளவள என்று இழுத்துக்கொண்டே போனால், சிறுவர்களுக்கு சோர்வு தட்டி விடும். அதனால், அந்தக் கதையின் மையம் கெட்டுவிடாதபடி, அதேநேரம் நீளத்தைச் சுருக்கி ஐந்து பக்கங்களில் குறைக்க வேண்டும்.
காமெடி, திரில்லர், மன்னர் கதைகள் என எல்லா வகையிலும் கதைகள் எழுத வேண்டும். ஆனால், அவற்றைச் சொல்லும் விதத்தில் கூடுதல் கவனம் தேவை. படிக்க அருவருப்பான முறையில் அக்கதை இருக்கக்கூடாது.
வன்முறையை அப்படியே காட்சியாக எழுதுகிறேன் என்று குழந்தைகளுக்குள் வன்முறையைத் திணிக்கும் முறையைக் கையாளக் கூடாது. வயிற்றை கிழித்தான் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது… என்பது போன்ற வர்ணனைகள் கூடாது. மொத்தத்தில் வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில் அது இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முடிவு முக்கியம்: நம் வாழ்வில் எல்லாமும் பாசிட்டிவாகவே நடப்பது இல்லை. எதிர்மறையான சிந்தனை கொண்ட மனிதர்களும் நம்மோடுதான் வாழ்கிறார்கள். இதெல்லாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால், சிறுவர்களுக்கான கதைகள் முடிந்த அளவு பாசிட்டிவாக முடிந்தால் நல்லது. அது, இந்த உலகம் மீதும் சக மனிதர்கள் மீது ஒரு நம்பிக்கையை வாசகருக்கு அளிக்கும். சில கதைகள் தவிர்க்கவே முடியாமல் சோகமான முடிவைத் தர வேண்டிய நிலை என்றால் விதிவிலக்காக அக்கதைகளின் முடிவுகளை விட்டுவிடலாம்.
சிறுவர்களுக்கான கதையை எடிட் செய்பவர், தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் கதைகளை ஆழ்ந்து வாசித்திருக்க வேண்டும். அழ. வள்ளியப்பா, பெ.தூரன், வாண்டு மாமா,ரேவதி உள்ளிட்டோர் எவ்விதமான கதைகருவை எடுத்தாள்கிறார்கள், கதாபாத்திரங்களை எப்படி வடிவமைக்கிறார்கள், கதையின் போக்கைச் செலுத்தும் விதம், எப்படி முடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பவராக இருக்க வேண்டும்.
இவை எல்லாமே சரியாக இருந்து முறையான எடிட்டிங் செய்யப்பட்ட கதையாக இருக்கும்பட்சத்தில் நிச்சயமாக சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும் கதையாக மாறும். பெரியவர்களும் அக்கதையைக் கொண்டாடுவார்கள்.
ஒரு கதை எழுதியதும், பத்திரிகைக்கு அனுப்பும் முன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’,‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com