

குழந்தைகளுக்குப் பிடித்த ஒரே செயல் விளையாடுவது. குழந்தைகளுக்கான கற்பித்தலில் கல்விக்கூடங்களுக்கு, கல்விக் கொள்கைகள் வலியுறுத்துவதும் விளையாட்டு முறை கற்றலையே. ஏட்டில் மட்டும் கொள்கைகள் இருக்க, செயலில் கணிதப் பாடப்புத்தகங்களிலிருந்தே சீட்டுக்கட்டு கணிதமுறை நீக்கப்பட்டுவிட்டது. சிறார் எழுத்தாளர் விழியன், கணித அறிவின் அவசியத்தை வலியுறுத்தி வருபவர்.
சீட்டுக்கட்டில் சிறார்களுக்கான கணிதம் புத்தகத்தில் ரசிக்கக்கூடிய கணித விளையாட்டுகள் நிறைய உள்ளன. சீட்டுக்கட்டில் ஜோக்கர் என்பவர் உள்ளது போல, இப்புத்தகம் முழுவதும் ஜிக்கர் என்ற ஒருவர் உள்ளார். அவர் ஒவ்வொரு தலைப்பு முடியும்போது நம்மிடம் வினாக்கள் கேட்டும், நகைச்சுவை செய்தும் நம்மை அடுத்த தலைப்பை நோக்கி நகர்த்திச் செல்கிறார்.
மனக்கணக்கில் புலியாகலாம்: இரண்டால் வகுபடும் எண், மூன்றால் வகுபடும் எண், நான்கால் வகுபடும் எண் என எண்களை கரும்பலகையில் எழுதி விதிமுறைகளைக் கூறி மாணவர்கள் மனதில் பதியவைப்பது என்பது கணக்கை வேப்பங்காயாய் குழந்தைகளை நினைக்க வைத்துவிடுகிறது.
ஆனால் சீட்டுக்கட்டுகளை குழந்தைகளின் கைகளில் கொடுத்து, பெற்றோரும், ஆசிரியரும் உடன் அமர்ந்து விளையாடிக் கொண்டே, இடையிடையே அவர்களிடம் கேள்வி கேட்டு 2-ஆல்,3-ஆல்,4-ஆல் என்று வகுபடுமா? வகுபடாதா? என்று கேட்கும்போது மாணவர்கள் உற்சாகமாய் பதிலளிக்கலாம்.
100-ஐ முதலில் தொடுவது யாரு? என்ற பகுதியில், சீட்டுக்கட்டுகளை பிரித்துக்கொண்டு விளையாடும் நபர்கள் இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ அல்லது நான்கு பேரோ? எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடலாம். சீட்டுக்கட்டுகளில் முதல், இரண்டு, மூன்று என்று வரிசையாக சீட்டு எடுப்பவர்கள் அவரவர் கைகளில் சீட்டை எடுத்ததும், ஏற்கெனவே தங்கள்கையில் இருக்கும் சீட்டின் மேலிருக்கும் எண்ணுடன், தற்போது எடுக்கும் சீட்டின் எண்ணுடன் கூட்டிக் கொண்டே வரவேண்டும். யார் முதலில் 100 அல்லது 100-ஐதாண்டுகிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றவர் ஆவர். இந்த விளையாட்டு ஒரு எண்ணுடன் மற்ற எண்களையும் கூட்டுவதற்கு வேகமான மனப்பழக்கத்தை ஏற்படுத்தும். விளையாட்டு ஆர்வமாகவும் இருக்கும். கூட்டலையும் வேகமாகச் செய்ய கற்றுக்கொள்வர்.
பகா எண்ணும், பகு எண்ணும்: எண்களில் எது பகா எண், எது பகு எண் என்பதில் எப்போதும் சிறு குழப்பம் ஏற்படும். சீட்டுக்கட்டு விளையாட்டில் இரண்டு சீட்டுகளை எடுக்கச்செய்து, அவை எந்தெந்த எண்ணால் வகுபடும், எந்தெந்த எண்ணால் வகுபடாது என்பதை வகுத்துப்பார்த்து பகு எண்ணா, பகா எண்ணா என்று கண்டறியலாம்.
சீட்டுகளில் உள்ள சீட்டுகளை மாணவர்களிடம் கொடுத்து, தாங்கள் எடுக்கும் சீட்டுகளில் உள்ள எண்களை ஏறுவரிசையில் அடுக்கச் சொல்லலாம். அல்லது இறங்குவரிசையில் அடுக்கச் சொல்லலாம். சீட்டுக்கட்டுகளை வைத்து வடிவியல் உருவங்கள் அடுக்கச் செய்யலாம். இப்படியான விளையாட்டுகளால் எண்களுடன் எப்போதும் பழகுவதால் மாணவர்களுக்கு கணித அடிப்படை விதிகள் எளிதில் மனதில் பதிந்துவிடும்.
காப்ரேக்கர் எண்கள்: காப்ரேக்கர் எண்கள் 495, 6174. நமக்கு மகிழ்ச்சியைத் தரும் எண்களாக உள்ளன. இந்த விளையாட்டு மேலும் மேலும் உற்சாகமாக விளையாட தூண்டும். மூன்று சீட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே எண் சீட்டுகளைத் தவிர்த்து வேறு வேறு சீட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது இந்த மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொண்டு அந்த எண்ணின் அதிகபட்ச மூன்று இலக்க எண்ணையும், அந்த எண்ணின் குறைந்தபட்ச மூன்று இலக்க எண்ணையும் தனித்தனியாக எழுதிக்கொண்டு, அதிகபட்ச எண்ணிலிருந்து குறைந்தபட்ச எண்ணை கழிக்க வேண்டும், கிடைக்கும் எண்ணையும் முந்தைய செயல்பாடு போல அதிகபட்ச எண், குறைந்தபட்ச எண் என உருவாக்கி கழிக்க வேண்டும்.
அதிகபட்சம் ஆறு சுற்றுகளில் 495 என்ற எண் கிடைத்துவிடும். இதேபோல சீட்டுக்கட்டிலிருந்து நான்கு இலக்க எண்ணை உருவாக்கி செயல்பாடுகளைச் செய்தால் ஆறு சுற்றுகளில் 6174 எண் கிடைக்கும். இதைக் கண்டறிந்தவர் மும்பை கணிதவியலாளர் தத்தாத்ரேயர் ராமச்சந்திர காப்ரேக்கர்.
சீட்டுக்கட்டில் கணித செயல்முறையுடன் விளையாடும்போது, நமக்கு கணித அறிவு வளர்ச்சியுடன் கற்பனைத்திறனும், வேகமாக முடிவெடுக்கும் திறனும், உரையாடும் திறனும், நினைவாற்றலும் கிடைக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள். கணித ஆசிரியர்களே, பெற்றோர்களே அவசியம் வாசிக்க வேண்டிய நூல் 'சீட்டுக் கட்டில் கணிதம்'