

மனிதர்களின் உயரம் பற்றி பார்த்தோம் அல்லவா? அப்படியெனில் குழந்தைகள் உயரம் என்ன? அவர்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? ஒரு செயல்பாட்டில் இருந்து இதைத் தொடங்குவோம்.
உங்கள் வகுப்பில் இருப்பவர்களின் உயரத்தை கணக்கிட்டு அதில் என்னென்ன பார்க்கலாம் என்று பட்டியலிடுவோமா?
வகுப்பில் இருப்பவர்களின் உயரத்தை அளக்க முதலில் என்ன தேவை? ஏற்கெனவே ஆசிரியர் அளந்திருப்பார் அல்லதுமருத்துவமனைகளில் அளப்பதைப் பார்த்திருப்பீர்கள். சரி சொல்லுங்கள், எதை வைத்து உங்கள் நண்பரின் உயரத்தை அளக்கலாம்? உங்கள் வகுப்பறையில் அல்லது வீட்டில் இருக்கும் அனைவரின் உயரத்தையும் அளக்க வேண்டும். உங்கள் கைகளைக் கொண்டு சாண் (finger span) அளக்கலாமா? அளந்ததைச் சரியாக பதிவிடவோ பகிரவோ முடியாது.
ஏன் வேறுபடுகிறது? - ஒருவரின் உயரத்தை அளப்பதை நிற்க வைத்து அளப்பது சரியாக இருக்குமா அல்லது கை,கால் நீட்டிப் படுக்க வைத்த பின்னர் அளப்பது சரியாக இருக்குமா? இரண்டு வழிகளிலும் ஒருவரின் உயரம் ஒன்றாகவே இருக்குமா? இரண்டு மூன்று நபர்களுக்கு இரண்டையும் செய்துவிடுங்கள். நிற்கும்போது அதிகநீளம் வருகின்றதா அல்லது படுக்கும்போது அதிக நீளம் வருகின்றதா? இரண்டுமே கொஞ்சம் வேறுபடும். ஏன் என்று யோசியுங்களேன்.
உங்கள் வகுப்பில் 30 நபர்கள் என வைத்துக்கொள்வோம். அனைவரின் உயரத்தையும் அளந்து விடுங்கள். இங்கே கூடுதலாக ஒரு விளையாட்டு விளையாடுவோம். ஒருவரை மூன்று பேர் தனித்தனியாக அளவிடுங்கள். வகுப்பில் இருப்பவர்களின் உயரத்தை அளந்த பின்னர் மூவரின் பதிவுகளும் ஒன்று போல இருக்கின்றதா என பார்க்கவும்.
தகவலாக மாறும் தரவுகள்: இப்போது நம் கைகளில் இருப்பது வெறும் தரவுகள் (Data). இதை நாம் தகவலாக மாற்ற வேண்டும். அதற்கு கணிதம் கொஞ்சம் வேண்டும். வகுப்பின் சராசரி உயரம் என்ன என்று கண்டுபிடியுங்கள். சராசரிக்கு அனைவரின் உயரத்தையும் கூட்ட வேண்டும், பின்னர் வகுப்பில் இருப்போரின் எண்ணிக்கையால் வகுக்கவேண்டும். முப்பது நபர்களின் உயரத்தின் கூட்டுத்தொகை 4500 சென்டி மீட்டர் எனில், சராசரி
Average Height = Total Height / Number of Students
சராசரி உயரம் = 4500/30 = 150 cm
மிக அதிகமான உயரம் என்ன, குறைவான உயரம் என்ன? இரண்டையும் கணக்கிடவும். அல்லது குறைவான உயரத்தில் இருந்து அதிகமான உயரம் வரையில் அடுக்கவும். இதேவரிசையில் தான் தினசரி காலை கூட்டங்களில் நிற்கின்றீர்களா? இந்த வரிசை மாணவர்களையும் மாணவிகளையும் கலந்து உள்ளதா?
கணித கூறுகள்: உங்கள் ஆசிரியர் அல்லது இணையத்தின் துணைகொண்டு, உலக சுகாதார மையம் ஒவ்வொரு வயதினரும் எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என ஒரு விளக்கப்படம் வெளியிட்டுள்ளனர், அதைப் பார்க்கவும். அதன்படி உங்கள் வகுப்பில் எல்லோரும் இருக்கின்றனரா என பாருங்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதா என்று ஆராயவும், தேவையான உதவிகளை முடிந்தால் செய்யவும். இச்செயல்பாட்டில், உங்களுக்கே தெரியாமல் சில கணிதக் கூறுகளைக் கற்றிருப்பீர்கள். அவையாவன:
1. அளத்தலில் இருக்கும் சிக்கல்கள்
2. அளத்தலில் வேண்டிய துல்லியம்
3. வரிசையாக அடுக்குதல்
4. தரவுகளை வகைப்படுத்துதல்
5. தரவுகளில் இருந்து தகவல் சேகரித்தல்
6. தகவலில் இருந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்லுதல்.