

குழந்தைகள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். ஆம்! மிக ஆழமாக உற்று நோக்கிறார்கள். சரியான வாய்ப்புகளைக் கொடுத்தால் அவர்கள் வாய் திறப்பார்கள். குழந்தைகள் வாய்ப்புகளால் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். நிஜப் பொருட்கள் வாய்ப்புகளை வழங்குவதுடன் வாய் திறக்கவும் உதவுகின்றன.
வகுப்பறையில் பயன்படுத்தும் உண்மையான பொருட்களை ஒருபெட்டிக்குள் வைக்கவும். குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படாதவாறு பெட்டிக்குள் கைகளை நுழைத்து, ஒரு பொருளின் அடையாளத்தை மாறி மாறி விவரிக்க வேண்டும். குழந்தைகள் அப்பொருள் என்னவென்று யூகித்துக் கூற வேண்டும். பின்பு, இந்தச் செயல்பாட்டை குழந்தைகள் மேற் கொள்ளவேண்டும்.
"இது எழுத உதவும்" என குழந்தை விவரித்துப் பேச ஆரம்பித்தவுடன் , பேனா, பென்சில், குச்சி என பல பதில்கள் வந்துவிழும். மேற்கொண்டு தொடர அனுமதிக்காது. இந்தச் செயல்பாட்டின் இலக்கு பேச வைப்பது என்பதை உணர்ந்து, குழந்தை அப்பொருளை மாறி மாறி விவரிக்க அனுமதிக்க வேண்டும்.
"இது எழுத உதவும். இது உருளை வடிவம் உடையது. இதனால் சிலேட்டில் எழுதலாம். இதைக் குழந்தைகளும் பயன்படுத்துவார்கள். இது பல நிறங்களில் தயாரிக்கப்படுகிறது. சுண்ணாம்பு இதன் மூலப்பொருளாகும். "இப்படி சாக்பீஸ் குறித்து பேச அனுமதிக்க வேண்டும். அதன்பின் விடையை யூகித்துக் கூறச் செய்யவும். இச்செயல்பாடு விளக்க திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் தெளிவான தகவல் தொடர்புகளை ஊக்குவிக்கிறது.
ஒருமுறை கல்வியாளர். ச. வின்செண்ட்டை பள்ளிக்கு அழைத்திருந் தோம். அவர் நிஜப் பொருட்களைப் பயன்படுத்தி எளிய ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் செய்யலாம் என்றார். அதனை செயல்வடிவில் ஆசிரியர்களுக்கு செய்துகாட்டி ஆச்சரியப்படுத்தினார். எப்படி?
பேராசிரியர் ச.வின்செண்ட் மைதானத்தில் நிறுத்தப்பட்ட சைக்கிளை வகுப்பறைக்கு கொண்டு வாருங்கள் என்றார். அது ஐந்தாம் வகுப்பு.
சைக்கிளை வகுப்பறையில் நிறுத்தியதும் உற்சாகம். "What is this? " என கேள்வி எழுப்பினார். அனைவரும் " It is a bicycle."என்றனர். அவர் குழந்தைகளை ஒழுங்குபடுத்தி ஒவ்வொருவராகப் பதில் அளிக்க வாய்ப்புகளை உருவாக்கினார். அவர்தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். ஒவ்வொரு முறையும் ஒருவர் பதில் அளிக்க, மற்றொருவர் அப்பதிலை கரும்பலகையில் எழுதினர். எழுதும்போது ஏற்படும் பிழைகளை குழந்தைகள் உதவியுடன் களைந் தார்.
"It is a bicycle. It has two wheels. It has a bell. It has two pedals. It has a light. It helps to ride at night. ".
மிக குறுகிய நேரத்தில் மேற்காணும் 'சைக்கிள்' குறித்த அற்புதமான கட்டுரையை கரும்பலகையில் எழுதி இருந்தனர். குழந்தைகளுக்கு தாமாகவே கட்டுரை எழுதும் வாய்ப்பை வழங்குவது எப்படி என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொண்டனர். அதன்பின்பு, குழந்தைகளை குழுவாக பிரித்தார். சொந்த அனு பவத்தில் இருந்து கட்டுரை எழுதக் கூறினார்.
"I have a bicycle. It is red in colour. I ride the bicycle every evening. I go to my grandmother's home using bicycle every sunday. I am happy to ride the bicycle. My hobby is riding a bicycle" என்ற சிறந்த கட்டுரையை தந்தனர்.
நிஜ பொருள்கள் கற்பவர்களுக்கு விவரிக்கவும், விவாதிக்கவும் உறுதியான குறிப்புகளை வழங்குகின்றன. உண்மையான பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், கற்பவர்கள் அவற்றை உற்று நோக்கலாம், தொடலாம் மற்றும் கையாளலாம். இது அவர்களின் புரிதலையும், பேசும் திறனையும் மேம்படுத்துகிறது. உண்மையான பொருட்கள் உணர்ச்சி அனுபவங்களைத் தூண்டுகின்றன. மொழி கற்றலை மிகவும் ஈடுபாட்டுடன், மறக்க முடியாததாக ஆக்கு கிறது.
எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.