

முன்பெல்லாம் நைல் நதி ஆழம் நிறைந்த அகன்ற நதியாகத்தான் இருந்தது. 1970இல் அஸ்வன் அணை கட்டப்பட்டது. இதனால் நீர் வரத்தும் குறைந்தது; அது கொண்டு வரும் வண்டல் மண் அளவும் குறைந்து போனது. உண்மையில் நைல் நதி மட்டும் இல்லையெனில், எகிப்து மொத்தமுமே சஹாரா பாலைவனம் போன்று மாறிவிடும்.
1980களில் எத்தியோபியா, சூடானில் கடும் வறட்சி நிலவியது. ஆனால், எகிப்து மட்டும் நாசர் ஏரியால் வளமாய் இருந்தது. எகிப்து – எதியோபியா இடையே அணைக்கட்டு பிரச்சினை இருக்கிறது. உகாண்டா சூடான் எதியோபியா, கென்யா உள்ளிட்ட நாடுகள், அதிக நீர் வளத்தை எகிப்து நாடு எடுத்துக்கொள்வதாய் புகார் தெரிவிக்கின்றனர். பேச்சு வார்த்தை மூலம், பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் ‘நைல் பேசின் இனிஷியேடிவ்’ மூலம் நிலைமையை சுமுகமாகத் தீர்க்க வழி தேடுகின்றனர்.
மனித குலத்தின் நாகரிகத் தொட்டில் என்று பாடங்களில் படித்து இருப்போம். காரணம், உலகின் மிகத் தொன்மையான எகிப்து நாட்டில் தொன்மையான கலாச்சாரம் பண்பாடு வழியே, உயர்ந்த தனிமனித வளர்ச்சிக்கு வழிகோலுகிறது.
ஆற்றங்கரையில் கிராமங்கள் தழைப்பதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால், பல நாடுகளுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது நைல் நதி. அது மட்டுமல்ல; இது சேர்ந்து, பிரிந்து வரும் ‘ஏரிகள்’ மிகப் பெரியதாக உள்ளன. அதாவது ஆற்று நீரைக் கொள்கிற அளவுக்கு ஏரிகள் அகன்று விரிந்து கிடப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
நமது ஊரிலும்தான் ஏரி, குளங்கள் இருக்கின்றன. அவை மழை நீரை சேமிக்க பயன்படுத்துகிறோம். ஆனால் ஆறு முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறது நாசர் ஏரி. இங்கும் பல நாசர் போன்ற நீர்நிலைகள் இருந்தால் எப்படி இருக்கும்?
இந்த வாரக் கேள்வி:
‘மானசரோவர் ஏரி’ – சிறு குறிப்பு வரைக.
(வளரும்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com