

நான் பேசலாமா? என்று வினவியவாறே தனது கையை உயர்த்தினாள் மணிமேகலை. பேசு என்றார் ஆசிரியர் எழில். எங்களது வீட்டின் கூடத்தில், ஒருவர் மட்டும் அமர்ந்து ஆடக்கூடிய ஊஞ்சல் ஒன்று தொங்குகிறது. சில மாதங்களுக்கு முன்னர்தான் அதனை வாங்கினோம். அதில் அமர்ந்து ஆடுவதில் எனக்கும் என் தம்பிக்கும் இடையே கடும்போட்டி. காலையில் படுக்கையிலிருந்து எழுத்ததும் தொடங்கும் அந்தப்போட்டி, இரவு தூங்கச் செல்லும் வரை தொடரும். பள்ளி முடிந்ததும், தம்பிக்கு முன்னரே வீட்டிற்குச் சென்று அவ்வூஞ்சலைப் பிடிக்க வேண்டும் என்று ஓடுவேன்.
அவன் எனக்குப் பின்னால் வருகிறானா என்று திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே ஓடுவதால் சில வேளைகளில் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கு முன்னர் அவன் அதைக் கைப்பற்றிவிட்டால், அவன் எப்பொழுது இறங்குவான் என்று கவனித்துக்கொண்டே இருப்பேன். அவன் இறங்கியதும் ஓடிச்சென்று அமர்ந்துகொள்வேன். இதனால் அவனுக்கும் எனக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்.
அதனால் பெற்றோரிடம் திட்டுவாங்குவேன். ஊஞ்சலைக் கைப்பற்ற நான் முனையும்போதெல்லாம் எனது இதயம் படபடவென்று துடிக்கும்; மனம் பாராமாய் இருக்கும். இந்நிலையும் மனஅழுத்தந்தானே? என்று வினவினாள் மணிமேகலை. ஆம் என்றார் ஆசிரியர். இதேபோன்ற மனஅழுத்தம் என் தம்பிக்கும் இருந்திருக்குந்தானே? என்றாள் அவள். இருக்கலாம் என்றார் அவர்.
விட்டுக்கொடுத்தால் பிரச்சினை தீரும்: அந்த மனஅழுத்தம் இப்பொழுது உனக்கு இருக்கிறதா? இல்லையென்றால் அதனை எப்படிக் கையாண்டாய்? என்று வினவினான் கண்மணி. ஊஞ்சல் எனது வீட்டில்தான் இருக்கப்போகிறது. தம்பிக்குப் புதிதாய் ஒன்று விளையாடக் கிடைத்ததும் இதனை கைவிட்டு அதில் அவன் கவனஞ்செலுத்துவான்.
அப்பொழுது நான் ஆடிக்கொள்ளலாம் என இப்பொழுது ஊஞ்சலை அவனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன் என்றாள் மணிமேகலை. இப்பொழுது உனக்கு மனஅழுத்தம் இல்லையா? என்று ஐயத்தோடு வினவினான் காதர். இல்லை என்றாள் மணிமேகலை. அருமை. மனஅழுத்தத்தைக் கையாள மற்றொரு வழி விட்டுக்கொடுத்தல் என்றார் எழில்.
நானும் பேசலாமா? என்றான் சாமுவேல். ம்… பேசு…என்றார் எழில் புன்னகையோடு. என் அப்பாவும் மணியன் மாமாவும் நல்ல நண்பர்கள். பள்ளிப் பருவருத்திலிருந்து ஒன்றாகப் பயின்றவர்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தவர்கள். ஆனால் சில மாதங்களாக அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை. இதனால் என் அப்பாவிற்கு மனஅழுத்தம். அதன் விளைவாக குருதிக்கொதிப்பு அதிகரித்து மருந்து சாப்பிடுகிறார். இதனை அவர் எவ்வாறு கையாள வேண்டும்? என்று வினவினான் சாமுவேல்.
அவர்களுக்கிடையே விரிசல் ஏன் ஏற்பட்டது? என்று வினவினாள் கயல்விழி.என் அப்பாவின் செயலால் மணியன் மாமாவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது;அவர்மீது, மற்றொருவர் வைத்திருந்த மதிப்பும் குன்றியது. அதனால் அவர், என் அப்பாவிடம் பேசுவதில்லை என்றான் சாமுவேல். உன் அப்பா உன் மாமாவின் நட்பைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறாரா? என்று வினவினாள் அருட்செல்வி. ஆம் என்றான் சாமுவேல். அப்படியானால், உன் அப்பாவை உன் மாமாவிடம் மனம்விட்டுப் பேசச்சொல் என்றாள் நன்மொழி.
எந்தச் சூழலில் ஏன் அச்செயலைச் செய்தார் என்பதற்கு இவர் பக்கம் உள்ள நியாயங்களை பொறுமையாக, உறுதியான குரலில் விளக்கச் சொல் என்றான் அருளினியன். ஒருவேளை தான்செய்தது தவறு என உன் அப்பா உணர்ந்தால், அவரை உன் மாமாவிடம் மன்னிப்புக் கேட்கச் சொல் என்றான் முகில். அருமை, அருமை என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர். தொடர்புக்கு: ariaravelan@gmail.com