

சேரலாதனை இழுத்து பாதுகாப்பான இடத்தில் படுக்கவைத்த தத்தனும் பெரிய கற்களைக் கொண்டுவந்து முதலையின் தலை மேல் போட்டுத் தாக்கினான். குணபாலன் மற்றும் தத்தன் ஆகிய இருவரது தாக்குதலையும் தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை பின்வாங்கத் தொடங்கியது. அதைக் கண்ட இருவரும் உத்வேகம் பெற்றவர்களாக அந்த முதலையை அடித்து விரட்டத் தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்கிற நிலைக்கு வந்த முதலை காட்டின் உள்ளே ஓடத்தொடங்கியது. அதை விரட்டியடித்த பிறகு சேரலாதனிடம் வந்த இருவரும் அவனை உட்கார வைத்தார்கள்.
தத்தன் ஏரியிலிருந்து தண்ணீரைப் பிடித்துவர ஓடினான். சற்று நேரத்தில் ஒரு குவளையில் தண்ணீருடன் வந்து சேர்ந்தான். அதை சேரலாதனின் முகத்தில் தெளித்து, குடிப்பதற்கும் கொஞ்சம் கொடுத்தார்கள். ஐயா, தங்களுக்கு என்ன நடந்தது? இந்த முதலையிடம் எப்படி சிக்கினீர்கள்?’ என்று கேட்டான் குணபாலன்.
அதற்கு பதிலளித்த சேரலாதன், ‘குணபாலா, நான் தனியாளாக ஒரு திட்டத்துடன் அரண்மனைக்குள் நுழைய முயன்றேன். அந்த முயற்சியில் தோல்வியுற்றது அல்லாமல் அரண்மனை வீரர்களிடமும் சிக்கினேன். அவர்களிடம் போரிட்டுத் தப்பி இந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தேன். பிறகு மிகுந்த களைப்புற்றிருந்த நான் இந்த முதலையிடம் சிக்கினேன். என்னைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி என்றான்.
நமக்குள் எதற்கு நன்றி எல்லாம்? எத்தனையோ ஆபத்துகளிலிருந்து என் உயிரைக் காப்பாற்றியவர் நீங்கள் அல்லவா? உங்களது உயிரைக் காப்பதும் எனது கடமைதான். இத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சரி, நாம் இங்கிருப்பது பாதுகாப்பானதல்ல.
உங்களைத் தேடி அரண்மனை வீரர்கள் வரக்கூடும். நாம் நமது குடிலுக்குச் செல்லலாம். நான் சென்று எனது குதிரையைக் கொண்டு வருகிறேன். அதுவரை இங்கே இருங்கள். தத்தா, நீயும் பார்த்துக்கொள் என்று சொன்ன குணபாலன் குதிரையைப் பிடித்து வரச் சென்றான்.
சிறிது நேரத்தில் குதிரையுடன் அங்கு வந்த குணபாலன், தத்தனின் உதவியுடன் சேரலாதனைக் குதிரையில் ஏற்றி மக்கள் புரட்சிப்படையினர் தங்கியிருந்த குடிலை நோக்கிச் சென்றான். அப்போது சேரலாதன், குணபாலா, நீ ஊரில் இல்லாதபோது அரசப் படையினரின் தொல்லைகள் அதிகமாக ஆகிவிட்டது.
அதனால் நாங்கள் இடத்தை இப்போது வேறிடத்துக்கு மாற்றிவிட்டோம். அந்தப் புதிய இடத்துக்கு நான் வழிகாட்டுகிறேன். அந்தத் திசையில் குதிரையை ஓட்டிச் செல் என்றான். குணபாலனும் சேரலாதனின் சொல்படியே குதிரையை செலுத்திச் சென்றான்.
அவர்கள் சென்ற இடம் அடர்ந்த காடாக இருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசைகளும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாதவண்ணம் இருந்தது. ஆனால், சேரலாதனும் குணபாலனும் அங்கு வந்ததையும் சேரலாதனுக்கு அடிபட்டு ரத்தம் சொட்டுவதையும் கண்டதும், மறைவிடத்திலிருந்த புரட்சிப்படையினர் அனைவரும் வெளிப்பட்டு சேரலாதனைச் சுற்றிக் கூடிவிட்டனர்.
அனைவரும், ஆ... என்ன இது? தங்களுக்கு என்னாயிற்று? ஏன் இந்த ரத்தக் காயம்? என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினர். சேரலாதனைக் குதிரையிலிருந்து கீழே இறக்கி, தூக்கிச் சென்ற குணபாலன், ஒரு குடிசையினுள் சென்று அவனை ஒரு கட்டிலில் படுக்க வைத்தான்.
எவரும் பயப்படத் தேவையில்லை என்று அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு, சேரலாதனுக்கு ஓய்வும் காற்றோட்டமும் தேவை. எனவே அனைவரும் விலகிச் செல்லுங்கள் என்று கூறினான். அவனது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அனைவரும் அங்கிருந்து சற்று விலகிச் சென்றனர். அந்தக் கூட்டத்தில் இருந்த வயதான பெரியவர் மட்டும் சற்று கவலை தோய்ந்த முகத்துடன் முன்னே வந்தார்.
அவரது கைகளில் சில மூலிகைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு சேரலாதனுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அத்துடன் சேரலாதனிடம், நான் அப்போதே சொன்னேன் நீதான் கேட்கவில்லை என்று தனது கவலையைப் பகிர்ந்தார்.
அவரது வார்த்தையைக் கேட்ட சேரலாதன் ஒன்றும் பேசாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. குணபாலன்தான் அந்த அமைதியை போக்கும்வண்ணம், என்ன விஷயம்? தாங்கள் மறுத்த ஒரு விஷயத்தை தலைவர்செய்யத் துணிந்தாரா? என்ன அது? என்றான். அதற்கு பதிலளித்த பெரியவர், அது ஒன்றுமில்லை. அரண்மனை கோபுரத்தின் உச்சியில் நமது புரட்சிப்படையின் கொடியை ஏற்றிவிட வேண்டும் என்பதே சேரலாதனின் ஆசை. அதற்கான முயற்சியில் இறங்கியதால்தான் இந்த நிலைமைக்கு ஆளாக நேரிட்டது என்றார்.
அதற்கு குணபாலன் எந்த வித பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தான். அப்போது சேரலாதன், குணபாலா, எனக்காக நீ அதைச் செய்வாயா? என்னால் முடியாததை நீ எனக்காக செய்ய வேண்டும். இதுவே எனது விருப்பம். எனக்காக நீ இதைச் செய்தாக வேண்டும் என்றான். அதைக் கேட்ட குணபாலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பெரியவரே தொடர்ந்தார், சேரலாதா, அது அவ்வளவு எளிதான செயலல்ல... மேலும் குணபாலன் உலகமறியா இளைஞன். நீ சொல்லும் காரியத்தில் ஈடுபட்டு, அதனால், அவனது உயிருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அவனது பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? என்றார். அதற்கு சேரலாதன், ஐயா, எனக்குத் தேவை குணபாலனின் பதில் மட்டுமே. உங்களது சமாதானம் தேவையில்லை என்றான்.
- தொடரும்.