

சமீபமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறுகின்றன. எனக்கும் ஒரு சிறந்த அகழ்வாராய்ச்சியாளராக ஆசை. அதற்கு என்ன படிக்க வேண்டும்?
- சத்தியசீலன், முதுகுளத்தூர்.
உலகின் நாகரிக தொட்டிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று இலக்கியங்களை ஆதாரம் காட்டி வந்த தமிழர்களுக்கு வலு சேர்க்க அகழ்வாராய்ச்சி முடிவுகள் அண்மைக்காலமாகக் கைகொடுக்கின்றன. தமிழ்நாடு 15 லட்சம் ஆண்டுகால மனித வரலாற்றைக் கொண்ட ஒரு நிலப்பரப்பு என்றும், இந்த நிலப்பரப்பின் தொன்மையை அறிய, முறையான அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கீழடி (சிவகங்கை மாவட்டம்), கங்கைகொண்டசோழபுரம் (அரியலூர் மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), துலுக்கர்பட்டி (திருநெல்வேலி), கில்னாமண்டி (திருவண்ணாமலை), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை), பூத்தூர்பேட்டை (பத்ரிமாபுரம்) ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சிகள் மாநில வரலாற்றில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. அதனில் கிடைக்கப் பெற்றுள்ள பொருட்கள் தமிழர்களின் தொன்மையான வரலாறு மற்றும் முதிர்ச்சியான நாகரிகம் ஆகியவற்றை பறைசாற்றுகின்றன.
இத்தகைய பண்டைய வரலாறு மற்றும் நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதற்கு அடிப்படையில் பட்டப்படிப்பினில் வரலாறு பாடப் பிரிவினை படிக்கலாம். அதன் பின்னர் எம்.ஏ. ஆர்க்கியாலஜி அல்லது பி.ஜி. டிப்ளமா அண்டு எப்பிகிராபி, ஆர்க்கியாலஜி, எக்ஸ்கவேஷன் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் படிக்க தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் டிப்ளமா இன் ஆர்க்கியாலஜி அண்டு எப்பிகிராபி பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் மட்டுமல்லாது தமிழ்வழியிலும் வழங்குகிறது.
இதுபோலவே தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முதுகலை படிப்புகளாக கையெழுத்துச் சுவடித்துறை, ஓலைச்சுவடித்துறை, கல்வெட்டியியல் மற்றும் தொல்லியியல்துறை, கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியியல் துறை, அகநாதியியல் துறை உள்ளன. பழங்கால நாணயங்களைப் பற்றி படிப்பது நுமிஸ்மாட்டிக்ஸ் (NUMISMATICS) எனப்படும். இப்பிரிவு குறித்தும் எம்.ஏ. நுமிஸ்மாட்டிக்ஸ் மற்றும் வரலாறு குறித்த எம்.ஏ. மற்றும் பி.ஜி. டிப்ளமா படிப்புகளாகவும் வழங்கப்படுகிறது. மேலும் நாணயங்கள் குறித்த அறிமுகப் படிப்பாக ஆன்லைனிலும் ஒருசில ஆன்லைன் கல்வி வழங்குகின்றன. உங்களின் விருப்பத்திற்கேற்ப முதலில் ஒரு பட்டப்படிப்பினை முடித்துவிட்டு சிறப்பு படிப்புகளை தெரிவு செய்யவும்.
| உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள். |
கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.