புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை சேமிக்க முடியாதா?

புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை சேமிக்க முடியாதா?
Updated on
1 min read

ஆற்றல் உற்பத்தியில் கரிம நீக்கத் தொழில்நுட்பத்தை நம்மால் திறம்படப் பயன்படுத்த முடியாததற்குக் காரணம், அவற்றைச் சேமித்து வைப்பதில் பெரும் சவால்கள் இருக்கின்றன. மேகமூட்டம் இல்லாத பகல் பொழுதில் சூரிய தகடுகளால் நம்மால் நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. அதேபோல காற்றடிக்கும் நேரத்தில் கற்றாலையாலும் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆனால் இரவிலோ, மழைக் காலத்திலோ சூரிய தகடுகளால் பயன்கள் இல்லை. காற்றில்லா காலங்களில் காற்றாலையாலும் பயன் இல்லை.

இதனால் கரிம நீக்கத் தொழில்நுட்பங்கள் பொதுவாக பருவகால மாற்றத்திலோ அல்லது வானிலை மாற்றத்தினாலோகூட பெரிதாகப் பாதிக்கப்படுகின்றன. இதுவே நாம் புதைபடிமத்தை அதிக அளவு சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இதனைச் சீர் செய்வதற்கு நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைச் சேமித்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மின்சாரத்தைச் சேகரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

இப்போதைக்கு மின்சாரத்தை நாம் சேகரிக்கப் பயன்படுத்தும் பேட்டரிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது லித்தியம்-அயன் பேட்டரிகள். இந்தப் பேட்டரிகள் மொபைல் போன்களில் இருந்து மின்சார வாகனங்கள் வரை அனைத்தையும் இயக்குகின்றன. இந்தப் பேட்டரிகள் விலையும் குறைவாகவே உள்ளன. இருப்பினும் இவற்றை நாம் பயன்படுத்த முடியாதற்குக் காரணம் இந்த வகை பேட்டரிகளால் குறைந்த நேரத்திற்கே மின்சாரத்தைச் சேகரித்து வைக்க முடியும் என்பதுதான். மேலும் லித்தியம் ஐயன் பேட்டரிகளைத் தயாரிக்க நமக்குத் தேவைப்படும் லித்தியமும் கோபால்டும் கிடைப்பது கடினமாக இருக்கிறது.

லித்தியம் பேட்டரி தயாரிப்பில் சுமார்70% கோபால்ட் நமக்குக் காங்கோ குடியரசு நாட்டிலிருந்துதான் வருகிறது.இந்த விநியோகத்தில் ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த பேட்டரி விநியோகத்தையும் பாதித்துவிடுகிறது. இதைவிட முக்கியமாக இந்த உலோகங்களை நாம் சுரங்கம் அமைத்து எடுப்பதற்கு நிறைய நீர் மற்றும் ஆற்றலைச் செலவு செய்யத் தேவையாக இருக்கிறது. இதுவே சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடியது இல்லையா? இதைத்தவிர கோபால்ட் சுரங்கத்தில் அதிகமாகக் குழந்தைத் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே ஒரு பேட்டரிக்குப் பின்னால் பல்வேறு பொருளாதார, சூழலியல், சமூக முறைகேடுகள் இருக்கின்றன.

கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர். தொடர்புக்கு: tnmaran25@gmail.com

வாசிப்போம் விவாதிப்போம்


அன்பான ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே, பாடத்திட்டத்தை தாண்டி நமது குழந்தைகளுக்கு கலை, இலக்கியம் அவசியம், நீதி போதனை அவசியம் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கிவிட்டோம். மகிழ்ச்சி! ஆனாலும் இவை அத்தனையையும் விட வாழ்க்கைக்கு ஆதாரமானது சுற்றுச்சூழல் அறம். சூழலியலின் முக்கியத்தை உணர்த்த வரும் ‘பூ பூக்கும் ஓசை’ தொடரை வாசிப்போம் மாணவச் செல்வங்களுடன் விவாதிப்போம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in