

ஹைதராபாத்தை தலைநகரமாகக் கொண்டு, ஆட்சி புரிந்துவந்த நிஜாம் அரசின் ஐந்தாவது மன்னர் அப்சல் நவாபினால் 1846 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஹெச்.எம்.எஸ். என்ற பெயரால் அறியப்பட்ட கல்லூரிதான் ஹைதராபாத் மருத்துவக் கல்லூரி (Hyderabad Medical School). இன்று உஸ்மானியா மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் இந்த ஹெச்.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் ஆரம்பத்தில் உருது மொழியில் மட்டுமே மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.
அதனை சீர்செய்து அக்கல்லூரியில் 1885 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக மாற்றியதோடு முதன்முதலாக ஐந்து மாணவிகளை மருத்துவம் பயில அனுமதித்திருக்கிறார் அப்போதைய மன்னரான நவாப் மெஹ்பூப் அலிகான். அந்த ஐந்து மாணவியருள் ஒருவராகத்தான் 1885 முதல் 1889 ஆம் ஆண்டு வரை முதலில் மருத்துவம் பயின்றிருக்கிறார் ரூபா பாய் ஃபர்தோன்ஜி.
வரலாற்றில் தடம் பதித்த தருணம்
உருவத்தில் சிறியதாக, முகத்தில் அமைதியுடன் பாரம்பரிய உடைகளில் எப்போதும் காணப்பட்டாலும், படிப்பில் அதீத ஆர்வத்துடனும், எதையும் எளிதில் விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறனுடனும் இருந்த ரூபா பாயைப் பார்த்த அவரது அறுவை சிகிச்சைப் பேராசிரியரான மேஜர் சர்ஜன் எட்வர்ட் லாரீ, தான் மேற்கொண்டு வந்த 'குளோரோஃபார்ம் கமிஷன்' ஆய்வில் ரூபா பாயையும் இணைத்துக் கொண்டார்.
மருத்துவம் பயின்றவுடன் ஹைதராபாத்தின் பிரிட்டிஷ் ரெசிடன்சி ஹாஸ்பிடல், அஃப்சல்கன்ஸ் மருத்துவமனை, விக்டோரியா மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் அரசு மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினாலும், டாக்டர் எர்வர்ட் மேற்கொண்ட ஆய்வுகளிலும் தொடர்ந்து உதவிக்கொண்டு தான் இருந்தார் டாக்டர் ரூபா பாய்.
அப்போது நடைமுறையில் இருந்த சுவாக மயக்க மருந்தான குளோரோஃபார்ம் தந்த அதீத பக்கவிளைவுகள் சமயத்தில் உயிரைப் போக்கவும் செய்யும். இது பற்றி டாக்டர் எட்வர்ட் லாரீ எழுதிய அறிக்கையை 'தி லான்சட்’ பத்திரிகை 1890 ஆம் ஆண்டு பிரசுரித்தது. பின்னர் அது 1891 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்து பரவலாக உலகின் கவனத்தைப் பெற்றபோது, எண்ணற்ற உயிர்களைக் காத்த அந்த ஆய்வில் பெரும்பங்கு வகித்த மருத்துவர் ரூபா பாய் பெயரும் புகழும் அதன்பின் வெளியே தெரிய ஆரம்பித்தது.
உலகின் முதல் பெண் மயக்கவியல் மருத்துவர்
அந்த சமயத்தில் டாக்டர் ரூபா பாயை சந்தித்த, சுதந்திரப் போராட்ட வீரரும் பிரம்மஞான சபையைத் (Theosophical Society) தோற்றுவித்தவருமான அன்னி பெசண்ட் அம்மையார், ரூபா பாய் அவர்களின் திறமையைப் புரிந்து கொண்டு இன்னும் துறையில் சிறக்க அவரை மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல கேட்டுக்கொண்டார். அவரது சிபாரிசு கடிதத்துடன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்தின் உயரிய எடின்பரோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் இயற்பியலில் சிறப்புப் பட்டங்களைப் பெற்றதோடு மயக்க மருந்துகளை அளிக்கும் உபகரணங்களை எளிதாகக் கையாளத் தொடங்கினார் டாக்டர் ரூபா பாய் ஃபர்தோன்ஜி. தொடர்ந்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பட்டம் பெற்று ஒரு முழுமையான மயக்கவியல் மருத்துவராக இந்தியா திரும்பினார்.
உலகின் முதல் பெண் மயக்கவியல் மருத்துவரான அவரைப் பணியில் சேர்த்துக்கொள்ள அன்றைய நிலையில் எண்ணற்ற நாடுகள் போட்டி போட்ட போதிலும், தன்னலம் கருதாது தாய்நாடு திரும்பி, தனது பணிகளைத் தொடர்ந்தார் டாக்டர் ரூபா பாய் ஃபர்தோன்ஜி.
'தன் கடன் பணி செய்து கிடப்பதே' எனும் வரிக்கு முன்னுதாரணமாக விளங்கிய ரூபா பாய், தனது பணிக்காலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்தும், பல நூறு மாணவர்களை உருவாக்கியும் அயராப் பணிபுரிந்து, 1920 ஆம்ஆண்டில் ஹைதராபாத்தின் சதார்கட்மருத்துவமனையின் மூத்த கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். அவரது ஆய்வுக் கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் இன்றும் உஸ்மானியா மருத்துவக் கல்லூரியின் இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு பயணமும் ஒரு சிறிய அடியில் தான் தொடங்குகிறது. அதிலும் முட்கள் நிறைந்த ஒரு கடினமான பாதையில் முதலடி எடுத்து வைத்த இந்த எளிய பெண் மருத்துவர், இன்று மயக்கவியல் எனும் மிக முக்கியமான துறைக்கே பெருவெளிச்சமாகவும், அதிலும் பெண் மருத்துவர்கள் சிறந்து வர ஒரு பெரிய ஊக்கமாகவும் திகழ்கிறார் என்றால் அதில் மறுப்பேதும் இல்லை.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com