

நாம் கதை எழுதியவுடனே அதில் நிறைவடைந்து விடக்கூடாது. எழுதியது எல்லாமே நமக்கு முக்கியம் என்று தோன்றும். ஒரு வார்த்தையை எடுத்துவிட்டால்கூட கதைக்கு சரி வராது என்று நினைப்போம். ஆனால், உண்மையில் ஒரு கதை நல்ல கதையாக மாறுவது அதைத் திருத்தும்போதுதான். அதை ஆங்கிலத்தில் எடிட்டிங் என்று சொல்கிறார்கள்.
ஆங்கில நூல்களுக்கு எடிட்டர் என்பவர் தனியாக இருப்பார். பல புத்தகங்களின் அட்டையில்கூட அவர் பெயர் இடம்பெறும். அந்தளவுக்கு எடிட்டரின் பணி முக்கியமானது. நமக்கு ஒரு கரு உதிக்கிறது. அதை அழகாக எழுதிவிட்டோம். பிறகு எதற்கு எடிட்டிங் என்ற கேள்வி எழலாம்.
நமது எழுத்தின் பிழைகள் நம் கண்களுக்கு முதலில் தெரியாது. வெறும் எழுத்துப் பிழையை மட்டும் சொல்லவில்லை. கருத்து ரீதியாகவும் சில பிழைகள் நமக்கு சட்டென்று புரியாது. இன்னும் சில விஷயங்களுக்கும் எடிட்டர் அல்லது எடிட்டிங் என்பது அவசியம்.
இரண்டு வகைகள்!
எடிட்டிங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, கதை எழுதியவரே திரும்பவும் கறார் தன்மையோடு அந்தக் கதையை எடிட் செய்வது. இரண்டாவது, வேறு ஒரு நபர் அந்தக் கதையை எடிட் செய்வது.
கதாசிரியரே எடிட் செய்யும்போது, அந்தக்கதையை வேறு யாரோ ஒருவர் எழுதியதுபோலவும் தான் அதை ஒரு வாசகர் போலவும் நினைத்து முதலில் படிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதையில் உள்ள பிழைகள் புரியும்.
கதையின் மையம் எது என்பதை முதலில் வரையறுத்துக்கொள்ள வேண்டும். அதை நோக்கி கதை செல்கிறதா… இல்லை வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். சரியான இடத்தில் கதை தொடங்கி சரியான திசையில் செல்கிறதா… அல்லது கதையின் முடிவு சொல்லப்பட்ட பிறகும் கதை செல்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஏனெனில், பல கதைகள் கதையின் முடிவுக்கு பின்பும், முடிவை விளக்குகிறேன் என்று இழுப்பார்கள். அது வாசகர்களை ரொம்பவே சோர்வடைய செய்துவிடும்.
கதாபாத்திரங்களின் குணங்கள் கடைசி வரை ஒரே மாதிரியாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஏனெனில், கதையின் தொடக்கத்தில், கோபக்கார தாத்தாவாக வரும் கதாபாத்திரம் திடீரென்று சாந்தமான ஒருவராக மாறி விட்டதாக எழுதி விடக்கூடாது. கதையின்படி சில நிகழ்வுகள் நடந்து அவரின் குணம் மாறினால் சரி. அப்படி தர்க்கப்படி இல்லாமல் திடீரென்று மாற்றுவது பிழை.
எந்த இடத்தில் கதை நடக்கிறது, எந்த காலத்தில் நடக்கிறது அவை எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.
வேறு ஒரு நபர் எடிட் செய்தால்?
முதலில், இந்தக் கதை நன்றாக இருக்கும், நன்றாக இருக்காது என்று முன்கூட்டியே முடிவு செய்யாமல் அந்தக் கதையை முழுமையாகப் படிக்க வேண்டும். அந்தக் கதையில் எழுத்துப் பிழையைச் சரி செய்வது முதன்மையானது இல்லை. கதையின் வடிவத்தை சரி செய்வதே முதன்மையானது என்ற புரிதல் அவசியம்.
கதையின் மையத்தைக் குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின், அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். கதையின் நீளம் அந்தக் கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா அல்லது தேவையில்லாமல் நீட்டிக்கொண்டே செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் கதையின் முக்கியமான இடங்களை சாதாரணமாக ஒரு வரியில் எழுதியிருப்பார்கள். அதை திருத்தி எழுத வைப்பது மிக முக்கியம். ஏனெனில், அவைதாம் கதையின் உயிர்நாடியான வரிகளாக இருக்கும்.
கதாபாத்திரங்களின் பெயர்கள், குணங்கள் கதை முழுக்க சரியாக இருக்கிறதா என்பதைக் கவனித்தல் அவசியம். கதையில் எடிட்டர் கருத்தை புதிதாகச் சேர்க்கக் கூடாது. கதாசிரியரின் கருத்தை வலிமையாகச் சொல்ல உதவுவதே எடிட்டரின் பணி.
மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரை இழிவுப்படுத்தும் வகையில் இருந்தால் கதாசிரியரை திருத்தச் சொல்லலாம். மொத்தத்தில் கதையின் இறுதிவடிவம் எடிட்டரின் கையில்தான் இருக்கிறது. இவைஎல்லாம் பொதுவான கதைகளுக்கும் பொருந்தும்.
கட்டுரையாளர், எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’,
‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com