கதை கேளு கதை கேளு 55: பார்த்ததும் படித்ததும்

கதை கேளு கதை கேளு 55: பார்த்ததும் படித்ததும்
Updated on
2 min read

மூத்த கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமியின் புதிய நூல் ‘பார்த்ததும் படித்ததும்'. முதிர்ந்த அனுபவங்களுடன் சமூகத்தை உற்றுக்நோக்கிக்கொண்டிருக்கும் மாடசாமி, சமூகத்தின் நிழல்களில் தெரியும் கறைகளை அடையாளம் காட்டுகிறார். மாற்றிக்கொள்ள வேண்டிய நடைமுறைகளை, தான் வாசித்த புத்தகங்களைச் சுட்டிக்காட்டி மாற்றத்திற்கான வாசல்களை திறந்துவைக்கிறார்.

ஆசிரியர்களும், குழந்தைகளும் புழங்கும் வகுப்பறை யாருக்கானதாக இருக்கும் ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கு மாகவா? அவ்வப்போது SILENCE, LISTEN என்ற வார்த்தை ஒலிக்கக் கேட்கிறதே வகுப்பறைகள். அப்படியானால் வகுப்பறை ஆசிரியர்களுக்கு மட்டும்தானா? குழந்தைகள் பேசிட இடம் தருவதில்லையா? ஆமாம். பெரும்பாலும் வகுப்பறை குழந்தைகளுக்கானதாக இல்லை. குழந்தைகளின் நடுங்கும் விரல்களிலும், திக்கும் குரல்களிலும், தடுமாறும் நடையிலும் பின்னிக் கிடந்த திறமைகளைக் கண்டுகொள்ளாமல்தான் வகுப்பறைகள் இருக்கின்றன.

ஆசிரியர்களுக்கான வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் லிசா டெல்பிட்டின் OTHER PEOPLE'S CHILDREN என்ற புத்தகத்தையும், குழந்தைகளின் உள் உலகத்திற்கும் வகுப்பறைக்கும் ஒரு பாலமாகக் கற்கும் வகுப்பறையாக தன் வகுப்பறையை மாற்றிய ஆசிரியர் சில்வியாவின் TEACHER நூலையும் நமக்கு வாசிக்கப் பரிந்துரைக்கிறார்.

Abba's Day புத்தகம் சிறிய புத்தகம். அந்நூலில் வரும் குழந்தை ஆயிஷாக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் கொண்டாட்டம். ஏனெனில் அவளுக்காக அவள் அப்பா சமைப்பார். அம்மா அவளோடு சிரித்துச் சிரித்து பேசிக் கொண்டிருப்பார், அப்பா கலந்துகொடுத்த காபியைஆயிஷா அம்மாவுக்குக் கொண்டுவந்து தருவாள். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆயிஷாவின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சி நிரம்பியிருக்கும். இவ்வளவுதான் கதை. புத்தகத்தின் கடைசி பக்கத்தில் ஆயிஷா சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் படம் இருக்கும்.இனிதான் புத்தகத்தினால் நாம் பேசத்தொடங்குவோம். ஆயிஷாவின் வகுப்பறை அவளுக்கானதா? அனைத்து குழந்தைகளுக்கான வகுப்பறையாய் நம் வகுப்பறைகள் எப்போது மாறப்போகின்றன? என்று கேட்கும் நூலாசிரியர், ஆசிரியர் செய்ய வேண்டிய முதல் கடமை, பன்மையைப் புரியவைக்க வேண்டியதுதான். பாடத்தைப் புரிய வைக்க வேண்டியது அடுத்துத்தான் என்கிறார்.

இந்தக் கடமைகளை நிறைவு செய்வதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்கிறார் Other people's children புத்தகத்தின் ஆசிரியர் லிசா. ஒரு உதாரணம் வழி வலியுறுத்துகிறார். யூதர்களை கொல்ல நாஜிகள் உருவாக்கிய வதை முகாமில் தப்பிப் பிழைத்த தலைமை ஆசிரியர் ஒருவர், எழுதியதாகக் கருதப்படும் கடிதம் அது. ஆசிரியர்களை நோக்கிப் பேசும் கடிதம் !

பெற்றோருக்கு: தவறு செய்யும் குழந்தைகளை நோக்கிக் கூச்சல் போடும் பெற்றோர் வாசிக்கவேண்டிய புத்தகம் -Managing theunmanageable child. தவறு செய்யும் அல்லது தடுமாறி நிற்கும் குழந்தைகளுக்குத் தீர்வாக கல்வியாளர்கள் சொல்வது என்ன? பொருத்தமான வாய்ப்பு என்பதுதான் கல்வியாளர்கள் முன்வைக்கும் தீர்வு.பெற்றோர்களே கவனியுங்கள். உங்களுக்கு பிடித்தமானது அல்ல, குழந்தைக்குப் பொருத்தமானது! சுமை வேறு; வாய்ப்பு வேறு. பொருத்தமான வாய்ப்பை கண்டறிவதும், கையில் கொடுப்பதும் சுலபம் அல்ல.

காலம் மாற வேண்டும். குழந்தைகளை வெற்றியை நோக்கி துரத்தும் போக்கும் மாற வேண்டும். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. எனக்கு நேரமே இல்லை என்று சொல்வது பெருமையா? இல்லை. முந்தித் தள்ளிக்கொண்டு ஓடுவதா! முக்கியம்?. அனைவருடனும் கைகோர்த்து நடப்பது முக்கியம். இந்தச் சிந்தனையை குழந்தைகளிடம் தருவது முக்கியம்.

அதற்கு நமக்கு Teach like finland புத்தகம் வழிகாட்டும். பின்லாந்து பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பும் 45 நிமிடங்கள் மட்டுமே. ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் 15 நிமிட இடைவேளை. அதிர்ச்சியாக இருக்கிறதா? Frequent breaks boost attentiveness in class என்ற புதிய செய்தியை பின்லாந்து நாட்டு கல்விச் செயல்பாடுகள் நமக்கு சொல்லித்தருகின்றன. பின்லாந்தில் ஆசிரியர் மாணவர் இடைவெளி இல்லை.வகுப்பறையில் அறிவார்ந்த சுதந்திரம் நிலவுகிறது. இது என் வகுப்பறை என்ற உணர்வு, வகுப்பறையோடு ஒரு நெருக்கம், பின்லாந்து பள்ளியில் ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கிறது.

நம் குழந்தைகளை இப்படிச் சுதந்திரமானவர்களாக படைப்பாளர்களாக நாமும் பார்க்க வேண்டாமா? வாசித்தப் பின்பும் யோசிக்கச் செய்யும் இந்தப் புத்தகம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினருக் கானது. வாசியுங்கள்.

- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்; தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in